'போராளி' படத்தின் போதே இலங்கைக்கு எப்.எம்.எஸ். உரிமையைக் கொடுக்க மாட்டேன் என சொல்லியிருந்தார் இயக்குனர் சசிகுமார். சொன்னபடியே 'போராளி' படத்தின் விநியோக உரிமையை அவர் இலங்கைக்கு வழங்கவில்லை. படத்தில், 'எனக்கு சிலோனே பிடிக்காது... அப்புறம் சிலோன் பரோட்டா எப்படி பிடிக்கும்?" என சசிகுமார் பேசுகிற வசனம் ஏக வரவேற்பைப் பெற்றதால், அந்தப் படத்தை இலங்கை விநியோகத் தரப்பும் வாங்கத் தயங்கியது. ஆனால், சமிபத்தில் வெளியான சசிகுமாரின் சுந்தரபாண்டியன் படம் தமிழகத்தில் ஐம்பது நாட்களைக் கடந்து மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இலங்கைக்கான எப்.எம்.எஸ். உரிமையை வாங்க கடுமையான போட்டி நடக்கிறது. பல லட்சக் கணக்கில் இலங்கைக்கு விநியோக உரிமை கேட்கப்பட்டும் அதனைக் கொடுக்க முடியாது என மறுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார்.
''இலங்கைக்கு விநியோக உரிமையைக் கொடுப்பதால் எத்தனை கோடிகள் லாபம் வந்தாலும் எனக்கு அது வேண்டாம். அங்கே இருக்கும் தமிழ் மக்கள் தற்போது சினிமா பார்க்கும் மனநிலையிலா இருக்கிறார்கள்? துக்க வீட்டில் படம் ஓட்டிக் காட்ட என்னால் முடியாது!" என கடுமையான பதிலடி கொடுத்து 'சுந்தரபாண்டியன்' படத்துக்கான எப்.எம்.எஸ். உரிமையை மறுத்திருக்கிறார் சசிகுமார். அது மட்டுமல்ல... தனது தயாரிப்பில் எடுக்கப்படும் எந்தப் படமும் இலங்கைக்கு அனுப்பப்படாது என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம் சசி.
வாய்ப்பேச்சில் மட்டுமே ஈழ உணர்வை எதிரொலிப்பவர்களுக்கு மத்தியில், லாப நஷ்டம் பாராமல் செயலிலும் தன் செம்மையை உணர்த்தும் சசிகுமாருக்கு ஆயிரம் சபாஷ் சொன்னாலும் தகும்!
-எம்.சபா


+ comments + 1 comments
the great tamilan.........
Post a Comment