நக்கீரனை முடக்க திட்டம்!
மாட்டுக்கறி மேட்டர் பரபரப்பு இன்னமும் ஓயவில்லை. நக்கீரன் வெளியிட்ட மாட்டுக்கறி மேட்டரை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து இருக்கிறார் ஜெயலலிதா. 'என்னைப் பற்றி அவதூறாக எழுதக் கூடாது என தடை வாங்கப்பட்டு இருக்கும் நிலையில், தொடர்ந்து 21 கட்டுரைகளை நக்கீரன் எனக்கு எதிராக வெளியிட்டு இருக்கிறது. நக்கீரன் கோபால், காமராஜ் இருவரும்தான் இப்படி திட்டமிட்டு எனக்கு எதிராக எழுதுகிறார்கள். அந்த செய்தி குறித்து என்னிடம் எவ்வித விளக்கமும் நக்கீரன் தரப்பில் இருந்து பெறப்படவில்லை' என தனது மனுவில் அழுத்தமான வாதங்களை வைத்திருக்கிறார் ஜெயலலிதா.
மின்சார சப்ளையை நிறுத்தியது, தண்ணீர் இணைப்பை துண்டித்தது என நக்கீரனுக்கு எதிராக அரசுத் தரப்பு நிகழ்த்திய அத்துமீறல்களை நீதிமன்றம் கடுமையாக கண்டித்து இருக்கிறது. அதேநேரம் ஜெயலலிதாவின் மனுவில் உள்ள ஸ்ட்ராங்கான வாதங்கள் நக்கீரனுக்கு கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் என்கிறார்கள் சில சட்ட வல்லுனர்கள்.
இதற்கிடையே நக்கீரனை முடக்க தனிப்பட்ட முயற்சிகளும் தீவிரமாக நடக்கின்றன. போலீஸ் அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளும் இணைந்தே நக்கீரனை வெளிவர விடாமல் செய்ய அதிரடியாக திட்டம் தயாராகி இருக்கிறது. நக்கீரன் பிரின்ட் ஆகாத அளவுக்கு தடுக்கும் முயற்சிகள் சாத்தியமில்லை. அவர்களுடைய அலுவலகத்தில் கெடுபிடி காட்டினாலும் , ஏதாவது ஒரு பிரஸில் இருந்து நக்கீரன் வெளியாகிவிடும். அதற்கான நெட்வொர்க் நக்கீரனுக்கு அதிகம். அதனால், வெளியாகும் நக்கீரனை விற்பனையாகாமல் தடுக்க அரசுத் தரப்பு தீவிரமாகி இருக்கிறது. மாட்டுக்கறி மேட்டருக்கு அடுத்து வந்த நக்கீரன் தமிழகத்தில் எங்குமே கிடைக்காத அளவுக்குத் தடுக்கப்பட்டது. நக்கீரன் ஏஜண்டுகள் கடுமையாக மிரட்டப்பட்டார்கள். 'கடைகளில் நக்கீரன் தொங்கினால் ஏதாவது ஒரு வழக்கை பாய்ச்சி உள்ளே தள்ளுவோம்' என கடைக்கார்களும் கடுமையான மிரட்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். நக்கீரன் போஸ்டர் எங்கேயும் ஓட்ட முடியாதபடி போஸ்டர் ஓட்டும் ஆட்களையும் விட்டு வைக்காமல் மிரட்டுகிறது போலீஸ். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. திருட்டையோ , வன்முறையையோ தடுப்பதற்காக இப்படி கண்காணிப்பு ஏற்பாடுகளை என்றைக்காவது அரசுத் தரப்பு செய்திருக்கிறதா? நக்கீரன் போஸ்டர் ஒட்டப்படாமல் தடுக்க இப்படி ஒரு ஏற்பாடு.
கடந்த இதழைப் போலவே இன்னும் நான்கைந்து நக்கீரன் இதழ்களை வாசகர்கள் கையில் கிடைக்க விடாமல் செய்துவிட்டால், நக்கீரனை முடக்கி விடலாம் என நினைக்கிறது அரசுத் தரப்பு. பல இக்கட்டான நேரங்களில் இத்தகைய அடக்குமுறையை நக்கீரன் துணிச்சலோடு கடந்து இருக்கிறது. ஆனால், இன்றைய நிலை வேறு. ஏஜெண்டுகளும், கடைக்காரர்களும், போஸ்டர் ஓட்டும் சிறுவர்களும் மிரட்டப்படும் இத்தகைய நெருக்கடியை நக்கீரன் எப்படி கடக்கப் போகிறது என்பது காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.
இதை எழுதுவதால் நக்கீரனின் மாட்டுக்கறி மேட்டரை நாம் ஆதரிக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. வரைமுறையற்ற அந்த எழுத்துக்கள் நிச்சயமாக கண்டிக்கத்தக்கவை. முதல்வர் மாட்டுக்கறி சாப்பிடுவதாக என்றைக்கோ பேசப்பட்ட ஒரு செய்தியை இன்றைய பரபரப்புக்கு பயன்படுத்தி இருப்பது தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் அவமானப்படுத்தியதற்கு சமம். 'தமிழக முதல்வர் மாட்டுக்கறி சாப்பிடுவாராம்' என டெல்லிக்காரன் பேசினால், அது மொத்த தமிழகத்துக்குமான இழுக்குதான். ஜெயலலிதாவை பழிவாங்குவதாக நினைத்து, தமிழக மக்களையே அவமான குழியில் தள்ளிய நக்கீரனை கும்பல் கண்டிக்கவே செய்கிறது.
அதேநேரம், அலுவலகத்தை தாக்கியும், ஊழியர்களை மிரட்டியும், கல் வீச்சு , கண்ணாடி உடைப்பு அத்தனையையும் வேடிக்கை பார்த்தும், மின்சாரம, தண்ணீர் சப்ளையை நிறுத்தியும் , கடைக்கார்கள் தொடங்கி போஸ்டர் ஓட்டுபவர்கள் வரை நக்கீரனின் கடைக்கோடி துரும்பையும் மிரட்டியும் நடத்தப்படும் அத்துமீறல்கள் எந்த விவாதத்தில் நியாயம்? பல நிருபர்களின் உயிர்த் தியாகத்தில் வளர்ந்த அந்த பத்திரிக்கை இன்றைக்கு அடக்குமுறையால் அழிக்கப்படும் நிகழ்வு கொடுரமானது.
- KUMBAL
Labels:
கோபால்,
நக்கீரன்,
நக்கீரன் கோபால்,
நக்கீரன் முடக்கம்






Post a Comment