தருமபுரி மாவட்டம் நத்தம் அண்ணாநகர்,கொண்டம்பட்டி கிராமங்களில் தலித் மக்களின் சொத்துக்கள் சூறை- கொள்ளை -தீவைப்பு சம்பவங்களை கண்டித்தும் மைய அரசின் புலனாய்வு விசாரணையை வலியிறுத்தியும் தருமபுரி ராஜகோபால் பூங்காவிற்கு அருகில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் திருமா ஆவேசத்தோடு பேசினார்:
''தருமபுரி அருகே நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்களுக்கு பா.ம.க-வும் வன்னியர் சங்கமும் காரணம் இல்லை என்று பா.ம.க நிறுவனர் ராமதாசு அவர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளதை நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் சமூகப் பொறுப்புணர்வோடு வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறது. மனிதநேயமற்ற முறையில், ஈவிரக்கமில்லாமல் காட்டுமிரண்டித்தனமாக நடத்தப்பெற்றுள்ள அந்த வன்முறைகளுக்கு யார் காரணம் என்பதை மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் நன்றாக அறிவார்கள். ஆதாரமில்லாமல், 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்கிற முறையில், அரசியல் உள்நோக்கத்தோடு பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தின் மீது குற்றம் சாட்ட வேண்டிய தேவை விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஏதும் இல்லை.
புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் ஆகிய மாமனிதர்களின் கொள்கை - கோட்பாடுகளை உள்வாங்கி செயல்படும் ஓர் அரசியல் இயக்கம் பா.ம.க என்னும் நம்பிக்கையில் தான் உரிமையோடும் தோழமையோடும் விடுதலைச் சிறுத்தைகள் உண்மைகளைச் சுட்டிக்காட்டியுள்ளதே தவிர, வேறு ஏதும் இல்லை. கடந்த 16.11.2012 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க நிறுவனருக்கு வெளிப்படையான வேண்டுகோள் விடுத்தது. அதாவது மொழி, இனம் ஆகியவற்றின் நலன்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக, தமிழக மாநில உரிமைகளுக்காக, கடந்த காலங்களில் பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் தொலைநோக்குப் பார்வையோடு கைகோர்த்துக் களமாடியதைப்போல, தற்போதைய நெருக்கடியான இச்சூழலில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் மீண்டும் பா.ம.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் கைகோர்ப்போம் வாருங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுத்துள்ளது.
தலித் மக்களுக்கெதிரான வன்முறை வெறியாட்டத்தில் அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த தலித் அல்லாதவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை விடுதலைச் சிறுத்தைகளும் அன்றைய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறது. பா.ம.க.விற்கும் வன்னிய சங்கத்திற்கும் அதில் தொடர்பில்லை என்று கூறும் அதே வேளையில், பா.ம.க மட்டுமல்ல - அனைத்துக் கட்சிகளும், வன்னியர்கள் மட்டுமல்ல - அனைத்துச் சாதியினரும் அதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று பா.ம.க நிறுவனர் அவரது பேட்டியின்போது கூறியிருப்பதைக் காணலாம். பா.ம.க-வும் வன்னியர் சங்கமும் முன்னின்று அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த அனைத்துத் சாதியினரையும் ஒருங்கிணைத்தார்கள் என்கிற உண்மையை, அவ்வட்டாரத்தைச் சார்ந்த அனைத்து கட்சியினரும் அனைத்துச் சாதியினரும் நன்கு அறிவார்கள். மறுபடியும் மறுபடியும் குற்றம் சாட்டுவது விடுதலைச் சிறுத்தைகளின் நோக்கமல்ல. ஒருதாய் மக்கள் மாநாடுகள், சமூக நல்லிணக்க மாநாடுகள், புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் திறப்பு மற்றும் பா.ம.க-வில் தலித்துகளுக்கு அதிகாரம் வாய்ந்த கட்சிப் பொறுப்புகள் அளித்தல் போன்ற பாராட்டுதலுக்குரிய பல்வேறு களப்பணிகளை நடைமுறையில் செய்துகாட்டியிருக்கிற பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசு அவர்களின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில்தான் இதனை விடுதலைச் சிறுத்தைகள் உரிமையோடு சுட்டிக்காட்டுகிறது. காதல் என்பது இரு நபர்களின் தனிப்பட்ட விருப்பம். தலித் இளைஞர்கள் உயர் சாதி பெண்களை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று பேசும் மருத்துவர், அவர் சாதி பெண்களையே இழிவாக பேசும் அளவிற்கு சாதி உணர்வோடு பேசி இருக்கிறார். அடுத்து, திரும்பத் திரும்பச் சொல்லுவதன் மூலம் ஒரு பொய்யை உண்மையாக்கிவிடமுடியும் என்கிற அடிப்படையிலோ என்னவோ, தொடர்ந்து ஆதாரமில்லாத அபாண்டமான குற்றச்சாட்டுகளை எனக்கெதிராகத் திட்டமிட்டுப் பரப்பி வருவது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வுக் களத்தில் நிற்கிற நான் எந்தவொரு சமூகத்தினரின் உணர்வுகளையும் காயப்படுத்தும் வகையில், குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எங்கேயும் எப்போதும் பேசியதில்லை. ஆனால்; திட்டமிட்டு எனக்கெதிராகத் தொடர்ந்து இந்த அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு காலம் விடைசொல்லும் என்கிற வலுவான நம்பிக்கையிருக்கிற காரணத்தால் மனசாட்சியின்றி பரப்பப்படும் இத்தகைய அவதூறுகளை சகித்துக்கொள்கிறேன்.
சாதிகள் ஒழியவேண்டும், சமத்துவம் மலர வேண்டும், தமிழ்ச் சமூகம் தன்மானத்தோடு தலைநிமிர வேண்டும் என்று கனவுகள் கண்ட, களப்பணிகளாற்றிய சமூகநீதிப் புரட்சியாளர் தந்தைபெரியார் பிறந்த மண்ணில், தமிழர் ஒற்றுமையை மென்மேலும் சீர்குலைக்கும் வகையில் தமிழகமெங்கும் சாதிவெறிக் கூச்சல் உரத்து ஒலிக்கிறதே என்னும் கவலை தான் விஞ்சுகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் பெரியாரியம் போற்றும் திராவிட இயக்கங்கள் மற்றும் கட்சிகளும், மார்க்சியம் மற்றும் லெனினியத்தைப் பரப்பும் இடதுசாரி இயக்கங்கள் மற்றும் கட்சிகளும், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வழியில் தமிழ்த்தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் தமிழ்த்தேசிய இயங்கங்கள் மற்றும் கட்சிகளும் இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் கவலை தோய்ந்த எதிர்ப்பார்ப்பாகும்.
பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த்தேசிய சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும், இன்ன பிற சனநாயகச் சக்திகளும் இத்தகைய இக்கட்டான நிலைமையில் ஆற்றவிருக்கும் எதிர்வினைகளுக்காக - செயற்பாடுகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் காத்திருப்பதையே தற்போதையக் கடமையாகக் கருதுகிறது''
.jpg)
Post a Comment