புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க விஜயகாந்த், வைகோ கோரிக்கை
தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு உடனே நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தானே புயலால் கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. சூறாவளிக் காற்றினால் ஆயிரக்கணக்கான குடிசைகளும், ஓட்டு வீடுகளும் இருந்த இடம்தெரியாமல் போய்விட்டன. மேலும் முந்திரி, பலா, வாழை, தென்னந்தோப்புகள் கடும் சேதமடைந்துள்ளன. கரும்பு, நெற்பயிற்கள் மழை நீரில் மூழ்கி விட்டன.
மீனவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சேதமடைந்துவிட்டன. இதனால் அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இலவசமாக மீன்பிடி வலைகளையும், படகுகளையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல பகுதிகளில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் இருளில் மூழ்கியுள்ளன. மின்சாரம் கிடைக்காததால் குடிநீருக்கும், சமையல் செய்வதற்கும் தண்ணீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த 30ம் தேதி தானே புயல் கரையை கடந்த பின், சீரமைப்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படவில்லை.
நிவாரணப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டிய தமிழக அரசு மெத்தனப் போக்குடன் உள்ளது. உடனடியாக அரசின் அனைத்துத் துறைகளையும் முடுக்கிவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீரும், மின்சாரமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து உடனடியாக மத்திய அரசைத் தொடர்பு கொண்டு நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக, புதுவை அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
போர்க்கால அடிப்படையில் நிவாரணம்- வைகோ:
தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பால் விலை உயர்வு, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக மாற்றம் போன்ற முடிவுகள் தான் சரியில்லை. அரசு நல்லது செய்தால் பாராட்டுவதும், தவறு செய்தால் கண்டிப்பதும் தான் எங்கள் நிலைப்பாடு.
தானே புயல் தாக்கியதில் கடலூர், விழுப்புரம் பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளன. எனவே, அப்பகுதிகளில் அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
லோக்பால் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடி வருகிறது. லோக் ஆயுக்தாவை செயல்படுத்த மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடு சரியல்ல. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு மறுக்கிறது. இதை மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம்.
மறைமலை அடிகள் கூறியபடி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும். அன்று தான் நாங்கள் கொண்டாடுவோம். அதேசமயம் சித்திரைத் திருநாளைத் தான் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவோம் என்பவர்களின் விருப்பத்தை நாங்கள் தடுக்க விரும்பவில்லை என்றார்.
Labels:
Dinakaran,
Dinamani,
kumbal,
mullai periyar,
vijaykanth,
கும்பல்,
தினகரன்,
தினத்தந்தி,
தினமணி,
முல்லைபெரியார்

Post a Comment