மனம் திறக்கிறார் 'மத்தாப்பூ' தயாரிப்பாளர்
''புதிது புதிதாக நிறைய தயாரிப்பாளர்கள் இன்று படம் எடுக்க வருகிறார்கள். இதனால் பல நல்ல இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கிறார்கள். எந்த விதமான சினிமா அனுபவமும் இல்லாமல் வந்து நேர்த்தியான படங்களைத் தருகிறார்கள். எங்கள் காலத்தில் இது போல் இல்லை. உதவி இயக்குனர் ஆவதில் இருந்து, முதல் பட வாய்ப்பு என ஒவ்வொரு படத்துக்கும் போராடவேண்டிய நிலை இருந்தது. அந்த நிலை இப்போது இல்லை. சினிமா மிகவும் எளிமையாகி விட்டது. இன்று யார் வேண்டுமானாலும் போகிற போக்கில் ஒரு சினிமாவை எடுத்து விட முடியும். ஆனால் அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதுதான் கடினமாக உள்ளது'' - ஒரு படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் இயக்குனர் திரு.எஸ்.ஏ சந்திரசேகரன் பேசிய வார்த்தைகள் இவை.
அப்படி வந்த ஒரு புதிய தயாரிப்பாளர் சுடலைக்கண்ராஜ். இவர் தற்போது தினந்தோறும் நாகராஜ் இயக்கத்தில் ''மத்தாப்பூ'' என்ற படத்தை எடுத்து வருகிறார். அவருடனான ஒரு சந்திப்பு...
''சினிமாவுக்கு வருவதற்கு முன் என்ன தொழில் செய்து கொண்டிருந்தீர்கள்?"
''கோயம்பேட்டில் காய்கறிகளை வாங்கி மொத்த வியாபாரம் செய்து கொண்டு இருந்தேன். தற்காலிகமாக வியாபாரத்தை நிறுத்தி வைத்திருக்கிறேன்."
''ஏன் காய்கறி வியாபாரத்தை நிறுத்தினீர்கள்?"
''ஒரே நேரத்தில் என்னால் இரண்டு வேலையை செய்ய முடியாது. இரட்டைக் குதிரை சவாரியில் எனக்கு உடன்பாடு இல்லை"
''படம் எடுக்கும் எண்ணம் எப்படி, எதற்காக வந்தது ?"
''நான் ஒரு சிறந்த சினிமா ரசிகன். அன்று வந்த'பராசக்தியில்' இருந்து தற்போது வந்த 'எங்கேயும் எப்போதும்' வரை வந்த நல்ல படங்கள் எல்லாவற்றையும் பல முறை பார்த்து ரசிப்பவன். இது போன்ற நல்ல படங்கள் தான் எனக்குள் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. எத்தனை நாள் ரசிகனாகவே இருப்பது. நாமளும் ஒரு படம் எடுத்தால் என்ன என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. இறங்கினேன். தற்போது படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான வேலையில் இருக்கிறோம்."
''பணம் இருந்தால் எல்லோரும் இன்று சினிமா எடுத்துவிட முடியும் தானே?"
''முதலீடு முக்கியம் தான். ஆனால் பணத்தை மட்டும் வைத்து ஒரு படத்தை எடுக்க முடியாது. பணம் இருந்தாலும் சினிமா மீது ஒருவித ஈர்ப்பும் காதலும் இருந்தால்தான் படம் பண்ண முடியும். படம் பண்ண முதலில் ஒரு நல்ல இயக்குனர் வேண்டும். நான் படம் செய்ய முடிவு செய்த பொது எனக்கு எல்லா வகையிலும் பக்க பலமாக இருக்ககூடிய ஒரு இயக்குனரைத் தேடினேன். அப்படி நான் இரண்டு வருடங்கள் தேடிய போது எனக்கு நாகராஜ் சார் கிடைத்தார். இருவரும் சேர்ந்தோம். படத்தை முடித்தும் விட்டோம்."
''காய்கறி வியாபாரம் எளிதானதா? சினிமா எடுப்பது எளிதானதா?"
''காய்கறி வியாபாரத்தில் அன்றைய காய்கறிகளை அன்றே விற்க வேண்டும் என்ற இக்கட்டு இருக்கும். காய்கறி தேங்கினால் உஷ்ணம் தலைக்கு ஏறி விடும். எப்போதும் ஒரு விதமான படபடப்பு நம்மோடு இருக்கும். ஆனால் சினிமாவில் அப்படி இல்லை.சினிமாவில் கொஞ்சம் நின்று நிதானமாக பயணிக்க முடிகிறது. இக்கட்டுகளையும், நெருக்கடிகளையும் ஒத்தி போடுவதற்கு கால அவகாசம் இருக்கிறது. அந்த விதத்தில் காய்கறி விற்பதை விட சினிமா எடுப்பது மேல்!"
''சினிமா எடுக்க ஒரு புதுமுக தயாரிப்பாளருக்கு என்னனென்ன தெரிந்து இருக்க வேண்டும்?"
''ஒரு நல்ல இயக்குனரை நாம் கண்டு கொண்டால் போதும். அவரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். தைரியமாக நாம் களத்தில் இறங்கலாம். நல்ல இயக்குனர் இல்லா விட்டால் காலடி வைக்கவே கூடாது.மேலும் எது நல்ல படம்;எந்த மாதிரி படங்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள் போன்ற சாதாரண சினிமா அறிவு இருந்தால் போதும்.
எல்லாவற்றையும் விட சினிமா மீதான ரசனை இருக்க வேண்டும். ரசனை கொண்டவன் எதிலும் ஜெயிப்பான்!"
''நீங்கள் சமீபத்தில் பார்த்த நல்ல படம்?''
'' 'எங்கேயும் எப்போதும்'. எதுவும் நிரந்தரமற்ற வாழ்வில் நாம் கனவுகளை மட்டுமே நிரப்பிக்கொண்டு ஓடுகிறோம். இந்தக் குறுகிய காலத்துக்குள் நமக்கான சொந்தங்களாகவும் துணையாகவும் வருபவர்கள் காலத்துக்கும் நம்மோடு வருவார்களா? இந்த மாதிரி பல கேள்விகளை எனக்குள் எழுப்பிய படம் அது. படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான சரியான முன்னுதாரணம் எங்கேயும் எப்போதும்!"
''மத்தாப்பூ எப்படி வந்திருக்கு?"
''எல்லா விதத்திலும் எனக்கும் இயக்குனருக்கும் படம் நிறைவை கொடுத்திருக்கு. படத்தைப் பார்த்து விட்டு நீங்கள் சொன்னால் கௌவுரவமாக இருக்கும்"
''உங்கள் கம்பெனியில் இருந்து வரும் படங்கள் எந்த வகைப் படங்களாக இருக்கும். அதாவது மசாலா படங்களா? அல்லது வாழ்வியல் சார்ந்த படங்களா?"
''சார், படம்னா ஒரே பார்முலா தான்... படத்தைப் பார்க்கிறவங்கதான் அழணும்... படத்தை பண்றவங்க அழக் கூடாது!"
பஞ்ச் டயலாக் சொல்லி விடை கொடுத்தார் தயாரிப்பாளர் சுடலைக்கண்ராஜ்.
- எம்.சபா




Post a Comment