கமர்ஷியல் விசயங்களுக்கு பொருந்திப் போகமல் வாழ்வியல் யதார்த்தங்களை மட்டுமே உடும்புப் பிடியாகப் பிடித்து இயங்கியதால், அகத்தியனின் படங்கள் வரிசையாக தோல்வியைத் தழுவின. இடறி விழுந்தாலே இறந்து விட்டதாக இனிப்பு வழங்கி கொண்டாடும் கோடம்பாக்கம், நிஜமாக விழுந்தால் சும்மா இருக்குமா? 'இவர் இனி வேலைக்கு ஆகமாட்டார்' என பலரும் அகத்தியனை விட்டு விலகி சென்றனர். வியாபாரிகளிடம் கதை சொல்லி திருப்திப் படுத்த முடியாமல் திணறியவர், இடையில் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்திற்கு மட்டும் வசனம் எழுதினார்.
பல வருடங்களாக சும்மாவே இருந்தவர் தற்போது ஒரு படத்தினை இயக்க உள்ளார். ''நான் தற்போது இயக்க உள்ள படத்தின் கதையும் கதை நகரும் போக்கும் இதுவரை தமிழ் சினிமா கண்டிராதது. காதல் கோட்டை படம் வந்து எப்படி ஒரு மிகப் பெரிய டிரண்ட் செட்டை உருவாக்கியதோ... அதேபோல தற்போது இயக்க உள்ள படமும் ஒரு புதிய டிரண்ட் செட்டை உருவாக்கும்'' என உறுதியாக சொல்லுகிறார்.
வணிக நோக்கில் வளைந்து போகாமல் நிஜத்தின் பிடிப்பிலும் யதார்த்த பயணிப்பிலும் உறுதியாக இருக்கும் அகத்தியன் அடுத்த படத்தை எல்லோரும் பாராட்டும் விதத்தில் கொடுக்க கும்பல் வாழ்த்துகிறது.
அசத்துங்க அகத்தியன் சார்!
- எம்.சபா

Post a Comment