Latest Movie :

ஒரு தண்டனை... ஒரு பின்னணி!

கோவை கொடுரத்தில் உறைய வைக்கும் உண்மை! 

கோவையில் இரு குழந்தைகளைக் கடத்திக் கொன்ற கொலையாளி மனோகரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பலவிதமான விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது.
''மனோகரன் மனதளவில் திருந்தி இருக்கும் நிலையில் தூக்குத் தண்டனை அவசியம்தானா?" என்கிற கேள்வி ஒருபுறம்... ''இந்த மாதிரி அயோக்கிய நாய்களைத் தூக்கில் போட்டால்தான் பலருக்கும் எச்சரிக்கையாக இருக்கும்!" என்கிற ஆவேசங்கள் ஒருபுறம்...


சிறுமி முஸ்கான், சிறுவன் ரித்திக் இருவரின் அழகிய முகத்தைப் பார்த்தால், ''இவர்களைக் கொல்ல எப்படி இந்த அரக்கர்களுக்கு மனம் வந்தது?" என்றுதான் எண்ணத் தோன்றும். மனோகரனும், அவனுடைய கூட்டாளி மோகன கிருஷ்ணனும் பணத்துக்காக இந்த இரு குழந்தைகளையும் கடத்தி, பாலியல் சித்திரவதை செய்து, கடைசியில் இரக்கமற்று படுகொலையும் செய்த நிகழ்வை எவராலும் மறக்க முடியாது. சம்பவம் நடந்த அந்த வாரத்திலேயே மோகனகிருஷ்ணன் என்கவுன்டர் செய்யப்பட்டான். இப்போது மனோகரனுக்கு சட்டம் தூக்கு தண்டனை கொடுத்திருக்கிறது.


இந்நிலையில் நமக்குத் தெரிந்த போலீஸ் வட்டாரம் சொல்லும் ஒரு பகீர் செய்தி நம் வாசகர்கள்  அவசியம் அறிய வேண்டியது...

''மோகன கிருஷ்ணனுக்கு பணத் தேவை மட்டுமே இருந்தது. குழந்தைகளைக் கடத்தும் திட்டத்தைக் கொடுத்தது மனோகரன் தான். குழந்தைகளைக் கடத்திய பின்னர் மோகன கிருஷ்ணன் அவர்களிடம் அன்பாகத்தான் நடந்திருக்கிறான். சிறுமி முஸ்கானிடம் செக்ஸ் சீண்டல் செய்தவன் மனோகரன் தான். அப்போது மனோகரனை கண்டித்திருக்கிறான் மோகன கிருஷ்ணன். விஷயம் பெரிதாகி போலீஸ் கவனத்துக்கு போன பிறகு இரு குழந்தைகளையும் கொன்று வாய்க்காலில் மிதக்கவிட்டு மோகன கிருஷ்ணனும் மனோகரனும் தப்பி விட்டார்கள். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடுமையான பதட்டத்தை உண்டாக்கியதால் இருவரில் யார் சிக்கினாலும் என்கவுண்டர்தான் என முடிவெடுத்தது போலீஸ். இதற்கிடையில் மோகனகிருஷ்ணன் மோசமான ஆள் என பல இடங்களில் இருந்தும் போலீஸ்க்கு தகவல் வந்தது. இந்நிலையில் தப்ப வழியில்லாமல் மோகன கிருஷ்ணன், மனோகரன் இருவரும் ஓரிடத்தில் போலீசில் சிக்கினர். இருவரில் ஒருவரை என்கவுண்டர் செய்ய நினைத்த போலீஸ் யாரை செய்யலாம் என உயர் அதிகாரிகளிடம் கேட்டது. 'மோகனகிருஷ்ணனை போட்டுத் தள்ளுங்கள்' என உத்தரவு வர, துள்ளத் துடிக்க சுடப்பட்டான் அவன்.


மனோகரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அடுத்தகட்ட விசாரணையை நடத்தியது போலீஸ். அப்போதுதான் பல உண்மைகள் போலீசுக்கு தெரிய வந்தது. குழந்தைகளை கடத்தியது மட்டுமே மோகன கிருஷ்ணன். குழந்தைகளை செக்ஸ் சித்திரவதை செய்தவன் மனோகரன். போலீஸ் விரட்டும் தகவல் தெரிந்த போது குழந்தைகளை விட்டுவிட்டு ஓடிவிடலாம் என்பதுதான் மோகனகிருஷ்ணனின் எண்ணம். ஆனால், பணம் கிடைக்காத கடுப்பில் குழந்தைகளைக் கொன்றவன் மனோகரன்தான். உருவ அமைப்பிலும் முதல்கட்டத் தகவலின் அடிப்படையிலும் வைத்து மோகன கிருஷ்ணன் தான் அனைத்தையும் செய்திருப்பான் என எண்ணி அவனைப் போட்டுத்தள்ளி விட்டது போலீஸ். இதில் சில அதிகாரிகளுக்கே வருத்தம். ஆனாலும் மனோகரன் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு நிரூபித்து அவனுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுத்து தனது அவசரத்துக்கு தக்க பரிகாரம் செய்து விட்டது போலீஸ்!" என விளக்கமாக சொன்னார்கள் அந்த போலீஸ் நண்பர்கள்.   

மனோகரனுக்கு மரண தண்டனை கூடாது எனச் சொல்பவர்கள், இனியும் இந்த வாதத்தில் உறுதியாக இருப்பார்களா? குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட பின்னணியை முழுதாக அறிந்துகொண்டு இவர்கள் வாதிட்டால் நன்றாக இருக்கும்.  சிறையில் தற்போது புலம்பி அழும் மனோகரன், 'செய்யாத தப்புக்கு என் நண்பன் செத்துட்டான்...' என்கிறான். அப்படி என்றால் செய்த தப்புக்கு...?

- எம்.சபா 
            
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger