பண மோசடி வழக்கில் கைதாகி வெளியே வந்திருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் பத்திரிக்கை நிருபர்கள் பலரையும் தொடர்புகொண்டு தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
''என் வளர்ச்சி பொறுக்காதவர்கள் தான் சூழ்ச்சி செய்து என்னை சிக்க வைத்து விட்டார்கள். பேங்கில் கடன் வாங்கித் தருவதாக நான் சொன்னது உண்மைதான். உரியவர்களின் பிசினஸ்க்கும் எனக்கான கமிஷனுக்காகவும் தான் நான் அப்படி செய்தேன். ஒருவருக்கு உதவி செய்து அதன் மூலமாக கமிஷன் பெறுவதில் என்ன தப்பு? சிலருக்கு உடனடியாக கடன் வாங்கிக் கொடுத்து விட்டேன். சிலருக்கு வாங்கி கொடுக்க தாமதமாகி விட்டது. இதைபோய் பெரிய புகாராகக் கிளப்பி என்னை பழிவாங்கி விட்டார்கள்." என ஆவேசமாகச் சொல்கிறார் பவர் ஸ்டார்.
''ஐ படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டு விட்டதாக சொல்கிறார்களே?" எனக் கேட்டு பவர் ஸ்டாரை சீண்டினோம். (போனில்தான்... நம்பர் உபயம் 9962621263)
''யார் சார் இப்படியெல்லாம் கிளப்பி விடுறது... ஷங்கர் சார் படத்தில் நான் கமிட் ஆனதுதான் பல பேர் கண்ணை எரிச்சலாக்கிடுச்சு. ஆனால் அவர் என்னைய பத்தி நல்லா புரிஞ்சு வைச்சிருக்கார். கைதுக்கு முன்னாலேயே என்னோட போர்ஷனை நடிச்சுக் கொடுத்திட்டேன். ரொம்ப நல்லா வந்திருக்குன்னு ஷங்கர் சாரே சொல்லிட்டார். அப்படியிருக்க இப்ப எப்படி என்னை படத்தில் இருந்து தூக்க முடியும்? நான் பண்ண வேண்டிய காமெடியை நீங்க பண்ணலாமா சார்?"
''சரி, மறைக்காமல் சொல்லுங்க.. யாரோ திட்டமிட்டு பழிவாங்கிட்டாங்கன்னு அடிச்சு வுடுறேங்களே... யார் உங்க எதிரி?"
''என்னோட வளர்ச்சி பொறுக்காத எல்லோருமே எனக்கு எதிரிதான். அவங்களை தனியா பிரிச்சு என்னால அடையாளம் காட்ட முடியாது. ஜெயிலுக்கு அனுப்பினால் இவனோட சினிமா வளர்ச்சியை முடக்கிடலாம்னு அவங்க நினைக்கிறாங்க. நம்பர் ஒன் காமெடி ஆர்டிஸ்டா இருந்த வடிவேலு அண்ணனையும் இப்படித்தான் ஒழிச்சாங்க. ஆனால், நான் இதை சும்மா வேடிக்கை பார்க்க மாட்டேன்."
''இப்படி பூடகமா சொன்னால் எப்படி? யார் உங்க எதிரின்னு தெளிவா சொல்லுங்களேன்..?"
''சார், ஒரு எதிரி மட்டுமே என்னைய இப்படி சிக்க வைக்கலை. இதில் பல பேரோட சதி இருக்கு. விஜய் டி.வி.யில் நீயா நானா நிகழ்ச்சி நடத்துற கோபிநாத்க்கும் எனக்கும் சாதாரண மன வருத்தம் தான். ஆனால், நெட்ல என்னோட ஆதரவாளர்கள் அவரை விமர்சனம் பண்ணிட்டாங்க. அதைக்கூட அவர் ஒரு போலீஸ் அதிகாரிகிட்ட புகாரா சொல்லி இருக்கார். இந்த மாதிரி பல பேரு செஞ்ச சதி இது. இதில் யாரையும் தனிச்சு சொல்ல முடியாது!"
போனை துண்டித்து விட்டார் பவர் ஸ்டார். எச்சரிக்கையா இருங்க கோபிநாத்!
- எம்.சபா

Post a Comment