சென்னையில் அடித்த மழையில் நனைந்த காஷ்மீர் ஆப்பிளைப் போல ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார் சமந்தா. ஜில்லென்று மாறிய க்ளைமேட்டுக்கு இதமான லுக்கில் இருந்த இந்த சென்னை ப்யூட்டியை பார்த்ததும், மனதுக்குள் அப்படி ஓர் ஆனந்தம். மழை இடைவிடாமல் வெளுத்துக் கட்ட, வேறு வழியே இல்லாமல் ஒரு 'குட்டி' ப்ரேக் கொடுத்தார் கெளதம் வாசுதேவ் மேனன். கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் சமந்தாவுடன் கேஷீவலாக பேச ஆரம்பித்தோம். சமந்தாவின் இதழ்களைவிட கண்கள் அநியாய துறுதுறு!
''கெளதம் வாசுதேவ் மேனனோட சேர்ந்து ரெண்டாவது படமாக இப்ப ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்துல நடிக்கிறீங்க. அந்தப் படத்தை பத்தி கொஞ்சம் ஓபனாக சொல்லுங்களேன்..."
''நான் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துக்கு பிறகு ரொமான்டிக் படங்களாக நடிச்சாலும், ‘நீதானே என் பொன்வசந்தம்’ படம் மாதிரி ஒரு ப்ரிலியண்ட் படம் இனிமேல் கிடைக்குமான்னு தெரியாது. அப்படியொரு யதார்த்தமான காதல் படம். உண்மையைச் சொல்லணும்னா ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸியைவிட ‘நீதானே என் பொன்வசந்தம்’ நித்யா ரொம்பவே ஸ்ட்ராங்க். மனசுக்கு நெருக்கமான ஒரு அருமையான கேரக்டர். மனசை பட்டாம்பூச்சி மாதிரி படப்படக்க வைக்கிற எமோஷன், ஃப்லீங்க்ஸை கேட்டு வாங்கியிருக்குற நித்யா கேரக்டரை நீங்க அவ்வளவு சுலபமா மறந்துட முடியாது. அந்தவகையில நான் ரொம்ப அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்லணும். ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்துல என்னோட வாழ்க்கையில நாலு வெவ்வேறு ஸ்டேஜ்கள்ல நடக்கிற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் ஹைலைட்டாக இருக்கும். படம் பார்க்கிற ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட வாழ்க்கையில நடந்த விஷயங்களையும், அனுபவங்களையும் ப்ளாஷ்பேக்குல யோசிக்க வைக்கும். தமிழ்ல என்னோட முதல் ரெண்டுப் படங்கள் எதிர்பார்த்தளவுக்கு போகல. ஆனால் அதையும் தாண்டி என்னோட ரீ-எண்ட்ரிக்கு ‘நீதான் என் பொன்வசந்தம்’ படம் பெரிய சப்போர்ட்டாக இருக்கும்.”
''கேமராவை இறக்கி வைச்சிட்டு, முகமூடியை கழட்டிட்டு வந்திருக்கிற ஜீவாவோட காம்பினேஷன் வொர்க் அவுட் ஆகியிருக்கா?"
“செம கேஷூவலான ஜோடியாக இருக்கும். பொதுவாகவே கெளதம்மேனன் சாரோட படங்கள்ல ஹீரோ – ஹீரோயினுக்கு இடையே ‘ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி’ அழகாக இருக்கும். 'மின்னலே’ மேடி – ரீமாசென், ‘காக்க காக்க’ சூர்யா – ஜோதிகா, ‘வாரணம் ஆயிரம்’ சூர்யா – சமீரா ரெட்டி, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ சிம்பு – த்ரிஷா ஜோடிகளுக்கு இடையே இருக்கிற ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி தமிழ் சினிமாவுல மறக்கவே முடியாத விஷயங்கள். அந்த லிஸ்ட்ல 'நீதானே என் பொன்வசந்தம்’ ஜீவா – சமந்தா ஜோடி ஆத்மார்த்தமான ஜோடியாக இருக்கும். முட்டாத மோதல், அலட்டாத காதல்னு இன்னிக்குள்ள ஜெனரேஷனை எங்களுக்குள்ளே பார்க்கமுடியும்.”
''தி க்ரேட் இளையராஜாவோட மியூஸிக்கில் நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கு?"
“சான்ஸே இல்ல பாஸ். ஒவ்வொரு பாட்டும் ‘ஹார்ட் வார்மிங்’ ட்யூன்ஸ். இன்னிக்குள்ள யூத்துக்கு அது செம ட்ரீட். கம்ப்யூட்டர், சிந்ததைஸர்னு இருக்குற லேட்டஸ்ட் மியூஸிக் ட்ரெண்ட்டுக்கு மத்தியில நம்மளோட ஆழ் மனசை டச் பண்றமாதிரி மியூஸிக் பண்றது மேஸ்ட்ரோவுக்கு கை வந்த கலை. எல்லா பாட்டும் டச்சிங் ட்யூனோடு இருக்குன்னு எக்கச்சக்க போன் கால்ஸ். பாடல்களை ஷூட் பண்ணிப்ப என்னையுமறியாமல் ஸ்கிரிப்டோட ஃபீல்லில் ரொம்ப ஜெல் ஆகிட்டேன். காரணம் மேஸ்ட்ரோவோட ட்யூன்ஸ்தான்.”
''அப்படீன்னா இப்போ நீங்க முணுமுணுக்குற பாடல் எது?''
“தூக்கத்துல எழுப்பிக் கேட்டால் கூட ‘சற்று முன்’ பாடலை அப்படியே ஒரு எழுத்துக்கூட மாறாமல் பாடுவேன். செம சாங். தமிழ் சினிமாவுல ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிற ஒரு பக்காவான களைமாக்ஸ் பாடல்.”
''ஹீரோக்களை பத்தி சொன்னால் டென்ஷன் ஆவாங்க. அதனால ஹீரோயின்களை மட்டும் எடுத்துக்குவோம். அது எப்படீங்க ஜி.வி.எம் படங்கள்ல வர்ற எல்லா ஹீரோயின்களும் செம க்யூட்டாக இருக்கிறீங்க. நீங்களும் இப்போ முன்பைவிட செம க்யூட்டாக இருக்கீங்களே. அந்த 'க்யூட் ப்யூட்டி ஃபார்மூலா’ என்ன?"
“ரொம்ப சிம்பிள்! ஜி.வி.எம்.மோட ரசனைதான். கேரக்டருக்காக எந்த ஆர்டிஸ்ட்டையும் ப்ரஷர் பண்ண மாட்டார். அந்த ஆர்டிஸ்ட்டுக்குள்ளே இருக்குற, அவங்களோட உண்மையான பர்ஸனாலிட்டியை முடிஞ்சவரைக்கும் வெளிக் கொண்டுவர முயற்சி பண்ணுவார். மேக்கப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். நீங்க அப்படியே வெளிப்படும்போது உங்க பர்ஸனாலிட்டிக்கு கிடைக்கிற ’க்யூட்னெஸ்’ வேற எதிலயும் கிடைக்காது. இதுக்கெல்லாம் செட்டாகிற மாதிரி கேரக்டர்களையும் ப்யூட்டிஃபுல்லாக க்ரியேட் பண்றது கெளதம்மேனன் சாரோட பழக்கம். அவரோட க்ரியேட்டிவிட்டியோடு, ரைட்டிங் ஸ்டைலும் சேருகிற பாயிண்ட்டில் அந்த கேரக்டரை பார்க்கும் போதும், அது பேசும் போதும் நமக்கே ஒரு ஈர்ப்பு வந்துடும். என்னைக் கேட்டால் கெளதம்மேனன் சாரை ‘க்யூட் க்ரியேட்டர்’னு சொல்வேன்.”
''கடைசியா ஒரு ஜாலியான கேள்வி. ஷூட்டிங் ஸ்பாட்டுல நீங்க அரண்டுப் போன அனுபவம் எதுவும் இருக்கா?"
“மிரண்டுப் போன அனுபவம் இருக்கு. ’நீதானே என் பொன்வசந்தம்’ ஷூட்டிங் ஸ்பாட்டுல கெளதம் சார் ஒவ்வொரு சீன்னையும், அதுக்கான டயலாக்குகளையும் விளக்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். இன்னிக்கு இருக்குற யூத்தோட பல்ஸை அப்படியே காட்டுற மாதிரி சீன்களும், அவங்க யூஸ் பண்ற வார்த்தைகளும், ஸ்டைலும் அப்படியே இருக்கும். எப்படி இவரால இவ்வளவு நெருக்கமாக யூத்தோட ட்ராவல் பண்ண முடியுது? எப்படி இந்த விஷயங்களையெல்லாம தெரிஞ்சு வைச்சிருக்கார்னு பல நாள் யோசிச்சு இருக்கேன். சில நேரங்கள்ல டயலாக் பேசி நடிக்கும்போது, நாம நடிக்குறோம் என்ற ஃபிலீங்கே இருக்காது. ஆக்ஷன் கட்னு சொல்லும்போதுதான் நமக்கே புரியும். மக்களை, அவங்களோட ஃப்லீங்க்ஸை பக்காவாக புரிஞ்சுக்கிட்டதாலதான் இவரோட லவ் ஸ்டோரி எல்லாமும் யதார்த்தமாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கு. மொத்தத்துல கெளதம்மேனன் சாருக்கு நான் வைச்சிருக்கிற பேரு ‘யூத் என்சைக்ளோபீடியா’. இந்த பேட்டியைப் படிக்கும்போதுதான் கெளதம் சாருக்கே நான் வைச்சிருக்கிற பட்டப்பெயர் தெரியும். ஸோ அவர் என்னைப் பார்த்து ஏதாவது கேட்டால் நீங்கதான் பொறுப்பு.”
கொடுத்து வைச்ச கௌதம்!



Post a Comment