சுந்தரபாண்டியன் வெற்றிப் படத்துக்கு அடுத்தபடியாய் சசிகுமார் நடிக்கும் படத்துக்கு 'குட்டிப்புலி' எனப் பெயரிடப்பட்டு இருக்கிறது. ஈழ ஆதரவு விஷயத்தில் ஆரம்பம் தொட்டே மிகுந்த ஆர்வத்தோடு இருக்கும் சசிகுமார், தன் படத்துக்கு 'குட்டிப்புலி' என பெயரிட்டிருப்பது உலகவாழ் தமிழர்களால் பல்வேறு அர்த்தங்களோடு பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சசிகுமார் நடித்த படத்துக்கு 'போராளி' என பெயர் வைக்கப்பட்டது. அதில், சிலோன் பரோட்டா வசனம் பேசி உலகளாவிய தமிழர்களிடம் ஏகோபித்த பாராட்டுக்களை அள்ளினார் சசிகுமார். அது மட்டுமல்லாமல், தனது படத்தின் எப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்கு கொடுக்க மாட்டேன் எனவும் பிடிவாதமாக மறுத்தார்.
தற்போது வெளியான சுந்தரபாண்டியன் படத்தின் எப்.எம்.எஸ். உரிமையையும் அவர் இலங்கைக்கு வழங்கவில்லை. பல லட்ச ரூபாய் விலைக்குக் கேட்கப்பட்டும் இலங்கைக்கு விநியோக உரிமை வழங்குவதில்லை என்பதில் இன்றுவரை உறுதியோடு இருக்கிறார் சசிகுமார். இந்நிலையில் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் 'வாகை சூடவா' முருகானந்தம் தயாரிக்கும் படத்தில் சசிகுமார் நடிக்கிறார். அந்தப் படத்துக்குத்தான் 'குட்டிப்புலி' எனப் பெயரிடப்பட்டு இருக்கிறது.
''சசிகுமார் புலிகளின் ஆதரவாளர் என்பதால்தான் இந்த தலைப்பா?" என யூனிட்டில் விசாரித்தால் அவர்கள் வேறுவிதமான காரணம் சொல்கிறார்கள்.
''ராஜபாளையம் ஏரியாவில் வாழ்ந்த நிஜப் பாத்திரம் குட்டிப்புலி. இயக்குனர் முத்தையாவும் அதே ஊர்க்காரர். சமீபத்தில் இறந்துபோன குட்டிப்புலி என்பவரின் நிஜக் கதையைப் படமாக்குவதால் அவருடைய பெயரையே படத்துக்கு வைத்துவிட்டார்கள். சசிகுமாரிடம் கதை சொல்லும்போது எம்.ஜி.ஆர் நடித்த 'தங்க மகன்' என்கிற தலைப்பும் ரஜினியின் 'அதிசயப் பிறவி' என்கிற தலைப்பும் வைக்கலாமா என விவாதிக்கப்பட்டது. அப்போது சசிகுமாரும் இயக்குனர் முத்தையாவும் குட்டிப்புலி என்கிற ஒரிஜினல் பெயரே இருக்கட்டும் என சொன்னார்கள். மற்றபடி ஒரு கிராமத்துக்கார வாலிபனின் கதைதான் இது. இதற்கும் ஈழத்துக்கும் வித சம்மந்தமும் இல்லை!" என்கிறார்கள் யூனிட்டில்.
ஈழத்துக்காக வைத்தாரோ... இல்லை, யதார்த்தத்துக்காக வைத்தாரோ... புலி என்றால் யாருடைய பெயர் நினைவுக்கு வரும் என்பது சசிகுமாரும் சாமானிய ரசிகனும் அறிந்த விஷயம்தானே... குட்டிப்புலி கொடிகட்டும் புலியாக வெல்லட்டும்!
- எம்.சபா

Post a Comment