தமிழ்நாட்டில் இப்போது டெங்கு காய்ச்சல் என்பது மிகப்பெரிய சுகாதாரப் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்த நோய் தாக்கியிருக்கிறது என்றாலும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக அரசு அளித்திருக்கும் தகவல்படி செப்டம்பர் கடைசி வாரம் வரை 5376 பேர் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். உயிரிழப்புகளும் தமிழ்நாட்டில்தான் அதிகம். அக்டோபர் மாதத்தில் புதிதாக நிறையபேருக்கு இந்த நோய் தாக்கியிருக்கிறது என்பதால் இந்த எண்ணிக்கை இப்போது இரண்டு மடங்காகியிருக்கும்.
தமிழக அரசு தற்போது சில தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்றாலும் இந்த நோயின் தாக்குதல் குறைந்ததாகத் தெரியவில்லை. டெங்கு வைரஸ் ரத்தத்திலிருக்கும் தட்டணுக்களை ( Platelets ) அழிக்கிறது என்பதால் இந்த நோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு உள்ளுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. அப்படி ரத்தத்தில் தட்டணுக்கள் மிகவும் குறையும்போது அதை ஈடுகட்ட நோயாளிகளுக்கு அந்த அணுக்களை செலுத்தவேண்டும். இப்படி ரத்தத்தில் இருக்கும் தட்டணுக்களைப் பிரித்தெடுத்து செலுத்தக்கூடிய வசதி சிறு நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் கிடையாது. பெரிய நகரங்களில் மட்டும்தான் அத்தகைய வசதி இருக்கிறது. எனவே தமிழக அரசு டெங்கு வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் இருக்கும் தாலுக்கா அளவிலான அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் போர்க்கால அடிப்படையில் ரத்த வங்கி மற்றும் ரத்தத்திலிருந்து தட்டணுக்களைப் பிரித்தெடுக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறவர்களுக்கு சமூக நல ஆர்வலர்களும் பொது மக்களும் குருதிக்கொடை வழங்கினால் அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும். தொடர்புடைய சுகாதாரத்துறை அலுவலரையோ அல்லது அரசு மருத்துவமனைகளில் இருக்கும் தலைமை மருத்துவரையோ அணுகி தேவைப்பட்டால் குருதிக்கொடை அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்ற தகவலை அளிக்குமாறு பொதுநல அமைப்புகள் பலவும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
டெங்கு பாதிப்பு யாருக்கேனும் வந்தால் முதல் ஆளாக நாமும் உதவுவோம். ரத்தம் கொடுப்பதால் ஒருவரின் உயிர் காப்பாற்றப் படுகிறதென்றால், அதைவிடப் பாக்கியம் நமக்கு என்ன இருக்கப் போகிறது?!


Post a Comment