விரைவில் விலகுகிறார் நாஞ்சில்!
மதி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சமீப காலமாக வைகோ உடன் மனக் கசப்பில் இருக்கிறார். கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதானே ஆக வேண்டும்... அதேபோல் இருவருக்கும் இடையேயான மோதல் முற்றி, சாஞ்சி போராட்டத்தைப் புறக்கணித்தார் நாஞ்சில். இதை மீடியாக்கள் பெரிதாக்க, விலகும் நாள் குறிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் நாஞ்சில். இந்த மாதத்தில் கட்சியை விட்டு விலக இருக்கும் நாஞ்சில் சம்பத் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்க முடிவெடுத்திருப்பதாக செய்திகள் அலையடிக்கின்றன. அதேநேரம் சீமானின் நாம் தமிழர் கட்சியும் விஜயகாந்தின் தே.மு.தி.க.வும் நாஞ்சிலை இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
தயா தப்பும் ரகசியம்!
கிரானைட் வழக்கில் சிக்கி இருக்கும் துரை தயாநிதி போலீசில் ஆஜராகாமல் தப்பி வருகிறார். எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு தலைமறைவு வாழ்க்கை வாழும் தயா சமீபத்தில் தனக்கான பிடிவாரண்டை ரத்து செய்ய நீதிமன்ற உத்தரவு பெற்றார். அதன் பின்னரும் போலீசில் ஆஜராகாமல் அவர் இழுத்தடிக்கிறார். காரணம் வெறுமனே கிரானைட் வழக்கு என போலீஸ் வலை வீசினாலும், தயா கையில் சிக்கிய உடன் பார்க் ஹோட்டல் உள்ளிட்ட வழக்குகளை வைத்து அவரைக் குண்டர் சட்டத்தில் போட போலீஸ் முடிவெடுத்திருக்கிறதாம். இதை போலீஸ் தரப்பு ஆட்கள் சிலரே அழகிரியிடம் சொல்ல, அதன் பிறகே மகனை பொறுமை காக்கும்படி சொல்லியிருக்கிறார். பேச வேண்டியவர்களிடம் பேசி உரிய பதிலீடுகள் செய்த பிறகு தயா ஆஜராவாராம்!
நடக்குமா நடராசன் விழா?
எம்.நடராஜனின் 70-வது பிறந்த தினம் அவருடைய ஆதரவாளர்களால் பிரமாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. பெரியார் திடலில் இதற்கான வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. ஆனால் அரசுத்தரப்பு இதனை அறவே ரசிக்கவில்லையாம். உளவு போலீஸ் மூலமாக விழா நடவடிக்கைகளை கண்காணிக்கும் அரசுத் தரப்பு நடராசன் அந்த விழாவில் என்ன பேசப்போகிறார் என்பதையும் கண்காணிக்க சொல்லி இருக்கிறது. அனேகமாக விழாவுக்கே அனுமதி மறுக்க வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
கனிமொழி vs குஷ்பூ
குஷ்பூவை தி.மு.க.வின் முக்கியக் கூட்டங்களில் தொடர்ந்து முன்னிறுத்துவதை எரிச்சலோடு பார்க்கிறார் கனிமொழி. சமீபத்தில் தி.மு.க.வில் யார் யாருக்குச் செல்வாக்கு என்கிற ரீதியில் ஒரு புலனாய்வு பத்திரிக்கை வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கனிமொழியை விட குஷ்பூக்கு செல்வாக்கு அதிகம் என செய்தி வெளியானது. இதில், ரொம்பவே கடுப்பான கனிமொழி இதுகுறித்து தலைவர் கருணாநிதியிடம் நேரடியாகவே புலம்பினாராம். 'பிரசாரத்துக்கு குஷ்பூ தேவை' என கருணாநிதி சொல்ல, கனிமொழியின் வருத்தம் இன்னமும் கூடிப்போனது. விரைவில் கனிமொழி - குஷ்பூ மோதல் வெளிப்படையாகவே நிகழ்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்கிறார்கள் தி.மு.க. முகாமில்!
கிறுகிறுக்க வைக்கும் கேப்டன்!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க.வும் காங்கிரசும் தனித்தனியே விஜயகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 12 சீட் தர தி.மு.க. தயாரான நிலையில், பாதிக்குப் பாதி சீட்டும் தேர்தல் செலவையும் சேர்த்து தருவதாக ஆசை காட்டுகிறதாம் காங்கிரஸ். ஆனால், இரண்டு தரப்புக்கும் பிடிகொடுக்காமல் போக்குக்காட்டும் விஜயகாந்த், 'தனித்துப் போட்டி' என்பதையே இன்னும் சில நாட்களுக்கு முழங்கப் போகிறாராம். கடைசி நேரம் வரை இழுத்தடிப்பு செய்தால், பேரத்தை கூட்டலாம் என்பதே கேப்டன் கணக்காம்!
- அரசியல் கிறுக்கன்





+ comments + 1 comments
Political news super. Kanimozhi vs kusgbo matter old news. Pl update letest news...
VANNATHASAN
Post a Comment