நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமானின் ஆவேசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அரசுத் தரப்பை ஆத்திரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இத்தனைக்கும் சீமான் மிகக் கடுமையாகத் தாக்குவது தி.மு.க. தலைவர் கருணாநிதியைத்தான். ஈழ விவகாரத்தில் தி.மு.க. செய்த துரோகங்களைத் தொடர்ந்து பட்டியல்போட்டு பேசும் சீமான் சமீபத்தில் சு.ப.வீரபாண்டியன் குறித்து மிகக் கடுமையாகப் பேசினார். 'இனியும் கருணாநிதிக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தால் உங்களை கொலை செய்யவும் தயங்க மாட்டேன்' என சீமான் பேசியது அரசியல் வட்டாரத்தில் கடுமையான பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதற்கடுத்து நடந்த அம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வை மட்டுமல்லாது ஆளும் கட்சியையும் மிகக் கடுமையாகத் தாக்கி இருக்கிறார் சீமான்.
''முகாமை விட்டு விடுதலை செய்யச் சொல்லி உண்ணாவிரதம் இருப்பவரைக்கூட சிறையில் அடைக்கச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கிறது இந்த அரசு. அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஆட்சியில் இருக்கும் வரை இங்கே எந்தத் தமிழனும் நிம்மதியாக வாழ முடியாது. தமிழனைத் தமிழன் ஆளும் காலம் விரைவில் வரும்" என சூடு பறக்க சீமான் பேசிய பேச்சு உளவுத்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில கூட்டங்களில் சீமான் ஆளும் கட்சிக்கு எதிராகப் பேசிய பேச்சும் மொத்தமாக சேகரிக்கப்பட்டு மேலிடத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறதாம். அதனால், இந்த ஆட்சியிலும் சீமானுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் விரைவில் அரங்கேறும் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

Post a Comment