இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவருக்கும் எடுக்கப்பட்ட பாராட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு வாழ்த்தியது எல்லோரும் அறிந்ததே. அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் முன்னிலையிலேயே முன்னாள் முதல்வர் கருணாநிதியை ரஜினிகாந்த் பாராட்டிப் பேசியதும், அதனால் அடுத்தடுத்து நடக்கும் பரபரப்பு விவாதங்களும் எல்லோரும் அறிந்ததே. ஆனால், இந்தப் பாராட்டு விழாவின் பின்னணியில் நடிகர் ராதாரவிக்கும் நடிகர் வடிவேலுக்கும் இடையே நடக்கும் பகிரங்க மோதல் யாரும் அறியாதது.
பாராட்டு விழாவுக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்... திரைத்துறையில் உள்ள பலரும் அதில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுங்கள் என ராதாரவிக்கு அ.தி.மு.க.வின் மேலிடமே உத்தரவு போட... இதில் ரொம்பவே குஷியாகிப் போன ராதாரவி அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் போன் செய்து விழாவில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்றார். குறிப்பாக ரஜினி, கமல் இருவரையும் அழைத்தே தீர வேண்டும் என முடிவெடுத்த ராதாரவி அவர்கள் இருவரிடமும் பேசினார். அவர்களும் சில நிபந்தனைகளுக்குப் பிறகு விழாவுக்கு வருவதாகச் சொல்லிவிட்டார்கள்.
அடுத்தபடியாய் விழாவுக்கு நடிகர் வடிவேலுவை அழைக்கலாமா என கட்சித் தலைமையிடம் கேட்டிருக்கிறார் ராதாரவி. 'தி.மு.க. ஆதரவாளரான அவர் வருவாரா?' என கார்டனில் கேள்வி கேட்க, 'அவரை அழைத்து வருவது என் பொறுப்பு' என தைரியமாகச் சொல்லிவிட்டு வடிவேலுக்கு போன் போட்டார் ராதாரவி. ஆனால், 'முறைப்படி அரசுத் தரப்பில் இருந்து அழைப்பு வந்தால் வருவேனே தவிர, நீங்கள் அழைத்தால் வர மாட்டேன்' என கறாராக சொல்லிவிட்டார் வடிவேலு. ஆனால், அடுத்தபடியாய் தனது வழக்கமான மிரட்டல் அஸ்திரத்தைக் கையில் எடுத்தார் ராதாரவி. 'இந்த விழாவுக்கு வராவிட்டால் இனி நீங்கள் எந்த காலத்திலும் சினிமாவுக்கு வர முடியாது' என ராதாரவி சொல்ல... போனிலேயே வடிவேலுக்கும் அவருக்கும் ஏக எழரையானது. 'நான் அழைச்சு ரஜினியே வந்துட்டாரு... நீயெல்லாம் எம்மாத்திரம்?' என ராதாரவி கடுமையாகக் கோபப்பட, வடிவேலு செல்போனை ஆப் செய்து விட்டார்.
இந்நிலையில் விழா ஒருவழியாக நடந்து முடிந்தது. கூட்டத்தில் ரஜினி கருணாநிதிக்கு ஆதரவாகப் பேசிய பேச்சால் கடுப்பான அ.தி.மு.க. தலைமை நடிகர் ராதாரவியை வறுத்தெடுத்து விட்டது. இதற்கிடையில் ராதாரவிக்கு போன் போட்ட வடிவேலு, 'என்னண்ணே... சூப்பர் ஸ்டார் உங்களை இப்புடி வாரிபுட்டாரு... நான் வந்திருந்தாலும் என்னையவும் இப்புடித்தான் காலி பண்ணி இருப்பிங்க... கடைசி சீட்டுல உட்கார வைச்சு அவமானப்படுத்தி இருப்பிங்க... நானும் கோபம் பொருக்காம நாலு வார்த்த நறுக்குன்னு பேசியிருப்பேன்' என சொல்ல... ராதாரவி கொந்தளித்து விட்டாராம். 'நீ இனி எந்த ஜென்மத்திலும் சினிமாவில் கால் வைக்க முடியாது' என ராதாரவி சொல்ல, 'உங்க உதவியோடு கால் வைக்கிறதுக்கு பதிலா நான் மதுரையிலேயே தங்கிடலாம்' என பதிலடி கொடுத்தாராம் வடிவேலு. ரஜினி - ஜெயலலிதா மோதலைக் காட்டிலும் கோடம்பாக்கத்தில் பெரிதாகக் கும்மியடிக்கும் பரபரப்பு ராதாரவி - வடிவேலு மோதல் குறித்துத்தான்!



Post a Comment