சசிகலாவின் தம்பி திவாகரன் சில மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க.விலிருந்து கட்டம் கட்டப்பட்டார் அல்லவா. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் மன்னார்குடி பகுதியில் இருந்து சிலர் கொடுத்த புகாரை வைத்து சிறைக்குள்ளும் தள்ளப்பட்டார் திவாகரன். மொத்தமாக நீக்கப்பட்ட உறவுக்காரர்களில் கடுமையான உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டவர் திவாகரன் தான். சிறையிலிருந்து மிகுந்த சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு வெளியே வந்த திவாகரன் சில நாட்கள் அமைதியாக இருந்தார். அவருடைய சொந்தக் கல்லூரி பக்கம் கூட போகாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தார். அவருடைய ஆதரவாளர்கள் சந்திக்க வந்தபோது கூட அதனை அமைதியாகத் தடுத்து விட்டார்.
ஆனால், கடந்த சில வாரங்களாக வெளி வட்டாரங்களில் தலைகாட்டத் தொடங்கி இருக்கிறார் திவாகரன். அதுவும் எப்படி... அ.தி.மு.க. கரை போட்ட வேஷ்டி கட்டியபடி பந்தாவாக வருகிறார். இதற்கு முன்னர் கூட திவாகரன் அ.தி.மு.க. கரை போட்ட வேஷ்டி கட்டுபவர் இல்லை. கோல்ட் கலரில் பார்டர் வைத்து வேஷ்டி கட்டுவார். முதன் முறையாக இப்போதுதான் கட்சி வேஷ்டி கட்டத் தொடங்கி இருக்கிறார். அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் கரை வேஷ்டியை திவாகரன் கட்டுவது கட்சிக்காரர்கள் மத்தியில் கடுமையான குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது.
வெளிப்படையான மோதலுக்கு திவாகரன் தயாராகி விட்டாரா... இல்லை, கார்டனோடு மறுபடியும் சமாதானம் பேசிவிட்டாரா எனத் தெரியாமல் சோழ மண்டல அ.தி.மு.க.வினர் குழம்பித் தவிக்கிறார்கள். ''செங்கோட்டையனை நீக்கியதும், சசிகலாவின் நெருங்கிய ஆதரவாளரான தோப்பு வெங்கடாசலத்தை அமைச்சராக்கியதும் திவாகரனின் வற்புறுத்தலில் நடந்ததுதான். தன்னுடைய ரீஎன்ட்ரியை நிரூபிக்கும் விதமாகத்தான் திவாகரன் கட்சி வேஷ்டியோடு வெளியே வருகிறார்!" என்கிறார்கள் இப்போதும் திவாகரனுக்கு ஆதரவாக கோட்டையில் உலவும் ஆட்கள். ஆனால், எம்.நடராஜனுக்கு நெருக்கமான சிலரோ, ''தனக்கு நேர்ந்த அவமானத்தை மறக்கிற நிலையில் திவாகரன் இல்லை. அவரைக் கைது செய்வதற்காக அவருடைய மனைவியை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து அவமானப்படுத்தியதை அவர் சாகும் வரை மறக்க மாட்டார். கட்சியில் பவராக இருந்தபோது கூட கட்சி வேஷ்டி கட்டாத திவாகரன் இப்போது கட்சி வேஷ்டி கட்டுகிறார் என்றால், நீயா நானா என பார்க்கிற மோதலுக்கு அவர் தயாராகிவிட்டார் என்றுதான் அர்த்தம்!" என்கிறார்கள்.
திவாகரன் மனதில் என்ன திட்டமோ?!


Post a Comment