சூர்யா இருமுகமாக நடிக்கும் மாற்றான் படம் தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெக்னிக்கல் ரீதியாக இந்தப் படத்துக்கு மிகுந்த சிரத்தை எடுத்திருக்கும் இயக்குனர் கே.வி.ஆனந்த், ''தமிழ் சினிமாவின் மைல்கல்லாக இந்தப் படம் அமையும்'' எனச் சொன்னார் நம்பிக்கை பொங்க. ஆனால், படம் வெளியாக வேண்டிய நிலையில், படத்தின் வேலைகள் இன்னமும் நீண்டுகொண்டே போவதாகச் சொல்கிறார்கள் யூனிட்டில் உள்ளவர்கள்.
''தற்போது தமிழில் வெளியாக இருக்கும் 'சாருலதா' படத்தால்தான் மாற்றான் படத்துக்கு சிக்கல் உருவாகி இருக்கிறது. சாருலதா படத்தில் நடிகை பிரியாமணி இருமுகப் பாத்திரத்தில் நடிக்கிறார். யார் ஒரிஜினல் எனப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிக நேர்த்தியாக அந்தப் படத்தின் மேக்கிங் அமைந்திருப்பதாக கிளம்பிய செய்திதான் கே.வி.ஆனந்த் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே படம் போல இரு படங்களும் அமைந்துவிடக் கூடாது என சூர்யா வற்புறுத்தி சொல்லியிருப்பதால் மாற்றான் படத்தின் காட்சிகளை மாற்றி அமைக்கும் வேலைகள் தற்போது தீவிரமாக நடக்கின்றன!" என்கிறார்கள் மாற்றான் யூனிட்டில் இருக்கும் சிலர்.
சாருலதா படத்தின் இயக்குனர் பொன்.குமரன், ''எங்கள் படத்துக்கும் மாற்றான் படத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அதனால், மாற்றான் குழு குழம்ப வேண்டிய அவசியம் இல்லை'' என்கிறார். இதற்கிடையில், மொத்த ஷூட்டிங்கும் முடிந்த நிலையில், மறுபடியும் சில காட்சிகளில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கிறாராம். அந்தக் காட்சிகளைச் சேர்த்தால்தான் மாற்றான் உண்மையான மாற்றானாக வெளிவருவானாம்!

Post a Comment