'கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்' படத்தின் ஹீரோயின் அனுஷா பண மோசடி வழக்கில் கைதான விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. சிறைக்குப் போகும் நேரத்தில் நம்மிடம் சில நிமிடங்கள் ஒதுக்கி வழக்கு குறித்துப் பேசியிருந்தார் அனுஷா. 'பகலில் சிரிப்பு... இரவில் கண்ணீர்' என்ற தலைப்பில் அதுகுறித்த செய்தியை கடந்த வாரம் வெளியிட்டு இருந்தோம். மிக அதிகமான வாசகர்களால் படிக்கப்பட்டு, பாப்புலர் போஸ்ட்டில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் அந்த செய்தி அனுஷா மீது மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் முறையான சட்டப் போராட்டத்தால் உடனே வெளியே வந்திருக்கும் அனுஷா நம் கும்பல் இணையதளத்துக்குக் கொடுத்த பிரத்யேகப் பேட்டி இது.
''உங்களோட இணையதளத்தில் வெளியான செய்தியைப் படிச்சேன். வெறுமனே பரபரப்புக்காக நீங்களும் ஏதாவது ஏடாகூடமா எழுதி இருக்கலாம். ஆனா, அப்படி செய்யாமல் என் தரப்பு நியாயத்தையும் கேட்டு நடுநிலையோட நீங்க எழுதிய கட்டுரை எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது. அதனாலதான் வெளியே வந்த உடனே உங்களைக் கூப்பிட்டு பேட்டி கொடுக்கணும்னு முடிவு பண்ணினேன்!" என்றபடி பேட்டியைத் தொடங்கினார் அனுஷா. கண்களில் சிறு கலக்கமும், நடையில் சிறு தடுமாற்றமும் தெரிந்தாலும் அவற்றை எல்லாம் மறைத்துக்கொண்டு இயல்பு மாறாமல் நம்மிடம் தொடர்ந்து பேசினார்.
''பைனான்சியர் குருநாதன் உங்கள் மீது மோசடி வழக்குக் கொடுத்திருக்கிறாரே... உண்மையில் அந்த விவகாரத்தில் நடந்தது என்ன?"
''எப்படியாவது சினிமாவில் ஒரு நடிகையாக ஜெயிக்கணும்னு ஆசைப்பட்டதுதான் நான் பண்ணிய பாவம். சின்ன வயசுல இருந்தே எனக்கு சினிமா மேல ஆசை. அது நியாயமான ஆசைதான். ஆனா, அதுக்காக நான் குறுக்கு வழியில போகலை. நியாமாத்தான் முயற்சி பண்ணினேன். ஆனா, என்னோட சினிமா ஆசை என்னைய ஜெயில் கம்பி எண்ணுற அளவுக்கு கொண்டுபோய் நிறுத்தும்னு நான் கனவுல கூட நினைக்கலை. ஏழெட்டு வருஷமா ஒரு நடிகையா ஜெயிக்க போராடிக்கிட்டு இருக்கேன். இந்த நகரத்தில் இருக்கிற சினிமா கம்பெனிகளில் என் கால் படாத கம்பெனிகளே கிடையாது. ஆரம்ப நாட்களில் பொழுது விடிந்தால் போதும்... என்னோட போட்டோக்களை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்குவேன். போட்டோக்களை கொடுத்துட்டு, ஆபிஸ் வாசலிலே கால் கடுக்க அங்கேயே நிற்பேன். என்னுடைய போட்டோவையும் போன் நம்பரையும் வாங்கி வைத்துவிட்டு ஏற இறங்க பார்ப்பார்கள் .சில நேரங்களில் அந்த பார்வைகள் என்னை பரவசபடுத்தும், சில சமயம் என்னை பார்த்து ஏளனமாய் சிரிக்கும். நான் அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் பல ஆபிஸ்களில் ஏறி இறங்கிட்டு இருந்தேன். அங்கு இருக்கும் உதவி இயக்குனர்கள் மட்டும் என்னிடம் எப்போதாவது ஆறுதலா சில வார்த்தைகள் பேசி நம்பிக்கை சொல்வாங்க.
என்றாவது ஒரு நாள் எதாவது ஒரு டைரக்டரின் பார்வை நம்மீது படும்... என்னையும் ஒரு நடிகையாக இந்த கோடம்பாக்கம் கொண்டாடும், என்னையும் பத்திரிகைகாரர்களும் டி.வி.காரர்களும் போட்டி போட்டுக்கொண்டு பேட்டி எடுப்பார்கள் என்றெல்லாம் எனக்கு நானே எண்ணிக்கொள்வேன் . ஆனால் அதனை மெய்ப்பிக்கும் விதமாக எந்த ஒரு ஆபிஸில் இருந்தும் எனக்கு அழைப்பு வரலை. எந்த ஒரு டைரக்டரின் பார்வையும் என்மீது படலை. உடலோடு சேர்ந்து மனமும் வலிக்க ஆரம்பித்தது. 'ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்ககூட நமக்கு தகுதி இல்லையா... நம்முடைய முகம் அவ்வளவு கேவலமாகவா இருக்கு?' என்று எனக்கே என்மீது கோபம் கோபமா வரும். மனதளவில் நான் ரொம்ப சோர்ந்துட்டேன். எட்டு வருஷமா ஒரு பொண்ணு சினிமா வாய்ப்புக்காக அலையுறது எவ்வளவு பெரிய கஷ்டம்னு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நான் படும் கஷ்டங்களை பார்த்துட்டு என் அம்மாவும் என்னோடு சேர்ந்து ஆபிஸ் ஆபிஸாக ஏறி இறங்க ஆரம்பித்தார் . எனக்காக வாய்ப்பு கேட்டு பலரிடமும் கெஞ்சினாங்க. அதைப் பாக்க ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒருகட்டத்தில் நாங்களே சொந்தமா படம் பண்ண நினைச்சோம். அதுக்காகத்தான் பைனான்சியர் குருநாதனிடம் பேசினோம். அவர் பணம் கொடுத்தது உண்மைதான். ஆனா, மோசடி பண்ணியதும் அவர்தான். இதை அவரே மறுக்க முடியாது. எல்லாம் என்னோட தலைவிதின்னு பொறுத்துக்கிட்டு இருக்கேன்!"
''பணத்தை வாங்கிக் கொண்டு நீங்கள் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக குருநாதன் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறாரே?"
''இதைக் கொஞ்சம் விளக்கமா சொன்னாத்தான் புரியும். நிறைய கம்பெனிகளில் ஏறி இறங்கியதன் பலனாக சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'கையில காசிருக்கணும்' 'கலக்குறே சந்துரு', 'சூப்பர்டா' போன்ற படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். இந்த படங்களில் நடிக்கிறப்ப ஒரு படம் எப்படி தயாரிக்கபடுகிறது, அது எப்படி விற்கப்படுகிறது, ஒரு தயாரிப்பாளர் எப்படி எல்லாம் கஷ்டபடுகிறார் என்பதெல்லாம் எனக்கு தெளிவாக புரிந்தது. இந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்ய வந்தவர்தான் குருநாதன். நான் நடித்த படங்கள் பெரும்பாலானவை வெளிவரவில்லை. அப்படியே வெளிவந்த படங்களும் ஓரிரு நாட்கள்கூட ஓடவில்லை. எதாவது ஒரு படம் ஓடினால் நமக்கு ஒரு ப்ரேக் கிடைத்து வாழ்க்கை பிரகாசமாக ஆகிவிடுமே என்று எதிர்பார்ப்போடு இருந்தேன் . அந்த சமயத்தில் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் படத்தின் கதையை என்னிடம் ஒரு உதவி இயக்குனர் சொன்னார் . அந்தக் கதையும், கதை சொன்ன விதமும் எனக்கு பிடித்து இருந்தது. பெயர் தெரியாத பத்து படத்தில் நடிப்பதற்கு பதில் பெயர் தெரியும்படி ஒரே ஒரு படத்தில் நடிக்கலாமே என்று தோன்றியது. இந்த படம் எனக்கு ப்ரேக் தரும் என்று தீர்க்கமாக நம்பினேன். எனக்கான ப்ரேக் நான் சிறைக்கு போகும் நாட்கள் தான் என்று எனக்கு அப்போது தெரியாது. ஆரம்பத்தில் ஒரு புதிய தயாரிப்பாளர் இந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தது. படம் ஆரம்பித்து கொஞ்ச நாட்களிலே அவர் படத்தில் இருந்து விலக... படத்தை நானே தயாரிக்கும் முடிவுக்கு வந்தேன் .
ஒருநாள் மிகுந்த பண நெருக்கடிக்கு ஆளாகி படப்பிடிப்பு நின்றது . அப்போது தவிர்க்க முடியாத பட்சத்தில் முதல் முறையாக குருநாதனிடம் மூன்று லட்சம் பணம் வாங்கினேன். ஒரு லட்சத்திற்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வட்டி என பேசி வாங்கினேன். கூடவே ஒரு வெற்றுப் பத்திரத்தில் என்னிடம் கையெழுத்தும் வாங்கிக்கொண்டார்கள். நான் அவ்வப்போது வட்டியை கொடுத்துக் கொண்டு இருந்ததால் அவருக்கு என் மீது நம்பிக்கை வந்தது. அதனால் எனக்கு பண நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் அவரிடம் பணம் வாங்குவேன். அவரும் பத்திரத்தில் கையெழுத்தை வாங்கி கொண்டு பணம் தந்தார். இப்படி அவரிடம் நான் பெற்ற பணம் 8 லட்சம் மட்டுமே. அவருக்கு வட்டியாக நான் கொடுத்த பணம் 32 லட்சம். இவ்வளவு வட்டி போட்டு பணத்தை வாங்கிக்கிட்டவர் கடைசி நேரத்தில் 80 லட்சம் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார். அதில்தான் சிக்கலே ஆரம்பித்தது. இந்த சின்ன வயசுல ஜெயிலுக்கு போயி வந்திருக்கிற நிலையிலும் நான் யாரையும் குறை சொல்ல விரும்பலை. எல்லாம் என்னோட தலையெழுத்து. அவ்வளவுதான். நாங்க கேட்கிறப்ப எல்லாம் பணம் கொடுத்தவர், எங்ககிட்ட முறையா வட்டியோட பணம் வாங்கியவர் திடீர்னு என்னை அவமானப்படுத்தி ரசிக்கிறார்னா... அது விதிதானே!"
''திடீரென குருநாதன் உங்கள் மீது புகார் கொடுக்க என்ன காரணம்?"
''கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் படம் நல்லபடி போகும் என்று எதிர்பார்த்தோம். படம் ஓடாததால் எங்களிடம் பணத்தை பெறுவது கடினம் எனக் கருதி பல்வேறு நெருக்கடிகளையும் தொந்தரவையும் குருநாதன் எங்களுக்கு கொடுத்தார். வட்டி பணம் கொடுக்க கொஞ்சம் லேட்டானபோது என்னையும் என் அம்மாவையும் கெட்டகெட்ட வார்த்தைகளால் திட்டிதீர்ப்பார்கள். நாம் அதுவரை பார்த்திராத மனிதர்கள் எல்லாம் நம்மை பச்சைபச்சையாக திட்டுவார்கள். அந்த வார்த்தைகளை கேட்டுக்கொண்டு உயிர் வாழனுமா என்றெல்லாம் தோன்றும். யாராவது நம்மை வந்து மிரட்டுவார்களோ என்ற பயம் எப்போதும் நம்மை சுற்றிக்கொண்டே இருக்கும். இதை எதிர்த்து நாங்கள் எதுவும் செய்யவில்லை. பொறுமையாக இருந்ததுதான் தவறாகி விட்டது. அவர் போலீஸ் வரை போவார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. நான் மட்டுமல்ல... என்னை போல் ஏராளமானவர்கள் அதிக வட்டிக்கு பணத்தை வாங்கிவிட்டு உயிரோடு இருப்பதா சாவதா எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்."
''இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கும் சினிமா உங்களுக்கு தேவையா ?"
''எப்படி ஒரு ரிப்போர்டராக, ஒரு டாக்டராக, ஒரு வக்கீலாக பலரும் ஆசைப்படுறாங்களோ... அதுபோலதான் எனக்கு சினிமா . நல்ல நடிகையா பெயர் வாங்கனும்னு ஆசைப்பட்டது தப்பா? சினிமாவுக்கு இருக்கும் கவர்ச்சியா, இங்கு புழங்கும் பெரும் பணமா,ஒரே நாளில் கிடைக்கும் புகழா... இவைகளில் எது என்னை சினிமாவை நோக்கி இழுத்தது என்று எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் என்னை ஒவ்வொரு கதாபாத்திரமாக மாற்றி அதில் நான் வாழ ஆரம்பித்து விடுவேன் . ஒரு நாள் 16 வயதினிலே மயிலாக, மறுநாள் சின்னதம்பி நந்தினியாக, மறுநாள் கிழக்கு சீமையிலே விருமாயியாக, மற்றொருநாள் பருத்தி வீரன் முத்தழகாக... இப்படி அந்த பாத்திரமாகவே வாழ்ந்து பார்க்கும் மனநிலை எனக்கு நாளுக்கு நாள் வளர்ந்தது. இந்த நேசம்தான் சிறைக்கு சென்ற பிறகும் தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகைகளில் ஒருவராக வந்தே ஆக வேண்டும் என்ற வேகத்தையும் எனக்கு விதைத்திருக்கிறது."
''இனியும் சினிமா ஆசையை கைவிடுவதாக இல்லையா?"
''எப்படி சார் கைவிட முடியும்? இந்த சினிமாவுக்காக எவ்வளவு இழந்திருப்பேன்... எவ்வளவு அவமானப்பட்டிருப்பேன்... கடைசியில் ஜெயில் வரைக்கும் போயிட்டேன். சத்தியமா சொல்றேன்... சினிமாவில ஜெயிக்கணும்னு நான் குறுக்கு வழியில் போராடலை. நியாமான முறையில்தான் என் தாயும் நானுமா போராடிக்கிட்டு இருக்கோம். அட்ஜஸ்ட் பண்ணிப்போனால் சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஆனால், நாங்கள் அப்படி நினைக்கலை. டான்ஸ், டயலாக் பயிற்சின்னு எல்லாவித பயிற்சிகளையும் கத்து வச்சிருக்கேன். அதைச் சொல்லித்தான் வாய்ப்பு கேட்கிறேன். ஓட்டப்பந்தயத்துல ஓடுறவங்க கால் இடறி கீழே விழுந்துவிட்டால் இனி ஓடுவதே கிடையாதுன்னு முடிவு எடுத்திடுவாங்களா என்ன? இனி ஜாக்கிரதையா ஓடனும்னுதானே நினைப்பாங்க... அந்த மாதிரிதான் சார் எனக்கும்... இனி எல்லாவற்றிலும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். இத்தனை சிரமங்களுக்கு பிறகு நான் கத்துக்கிட்ட பாடம் என்னன்னா... என்னோட படத்தின் டைட்டிலைத்தான் சொல்லணும்... நம்மளை இந்த சமூகம் நல்லபடி பார்க்கணும்னா 'கையில காசு இருக்கணும்' சார்!"
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!
- எம்.சதிபாரதி
.jpg)


.jpg)
+ comments + 1 comments
அனுஷா மீண்டு வந்து சாதிக்க வாழ்த்துகள்...
Post a Comment