அதேபோல்தான் 'யமுனா' படத்தின் அறிமுக விழாவில் பாலு மகேந்திரா சினிமா விமர்சகர்களுக்கு எதிராகப் பேசிய பேச்சு ஏக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. யமுனா படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சத்யா, பாலு மகேந்திராவின் பயிற்சிப் பட்டறையில் பயின்றவர். அதனால்தான் யமுனா பட விழாவுக்கு வந்திருந்தார் பாலு மகேந்திரா.
படத்தின் இயக்குனர் கணேஷ் பாபு, ''பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் எதிர்கொள்ளாத விமர்சனங்களை இந்தப்படத்தை இயக்கும்போது எதிர்கொண்டேன். இவனுக்கெல்லாம் என்ன தெரியும்... இவனெல்லாம் படம் எடுக்க வந்துட்டான் என என் காத்து படவே விமர்சித்தார்கள்..." என விமர்சனவாதிகளைப் பற்றி வேதனையாகப் பேசிவிட்டு அமர, அதனைத் தொடர்ந்து மைக் பிடித்த பாலு மகேந்திராவுக்கும் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
''சமீபகாலமா பத்திரிக்கைகளில் வரும் எந்த விமர்சனத்தையும் நான் படிக்கிறதே கிடையாது. விமர்சனம்கிற பேர்ல அவங்க என்னத்தை எழுதுறாங்க? ஒரு படத்தை விமர்சிக்கிறப்ப படம் பற்றிய நாளேஜ் உங்களுக்கு இருக்கணும். அப்போதான் படத்தில் உள்ள நிறை குறைகளைப் பத்தி உங்களால் கருத்து சொல்ல முடியும். ஒளிப்பதிவைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும். பல பத்திரிக்கைகளில் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்ததுன்னு பாராட்டுறாங்க. இதுவா விமர்சனம்? ஒளிப்பதிவுங்கிறது கண்ணைக் குளிர வைக்கிறது மட்டும்தானா? இதே வார்த்தைகளை இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் எழுதுவீங்க? விமர்சனம்கிற பேர்ல படத்தோட கதையை முக்கால் பக்கம் எழுதுறிங்க... இதுக்கு பேரு விமர்சனமா? இந்த மாதிரியான அரைகுறை விமர்சனங்களைக் கண்டுக்காமல் விடுவதுதான் நல்லது!" என பத்திரிக்கையாளர்களைப் பார்த்து கொட்டித் தீர்த்தார் பாலு மகேந்திரா.
இன்றைய மீடியாக்களின் விமர்சன நிலைமை இப்படி அரைகுறையாய் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. ஒளிப்பதிவு நுணுக்கங்களோ, டெக்னிக்கல் விசயங்களோ தெரியாமல் ஒரு படத்தை ஒரு பத்திரிக்கையாளர் எப்படி விமர்சிக்க முடியும்? இன்றைக்கும் விமர்சனத்துக்காகப் படம் பார்க்க வருபவர்கள் பாதி படம் ஓடிய பிறகு வருவதும், இடையிடையே செல்போன் பேசியபடி பார்ப்பதும் வழக்கமாக நடக்கும் கூத்துகளாகி விட்டன. கனவையும் காசையும் முதலீடாக்கி படம் எடுப்பவர்கள் இத்தகைய நிகழ்வுகளை எவ்வளவு வேதனையோடு எதிர்கொள்வார்கள்? 'விமர்சனம் ஒருவனைத் திருத்துவதாக இருக்க வேண்டும்; தீர்த்துக் கட்டுவதாக இருக்கக்கூடாது' என்றார் அண்ணா. இந்தப் பக்குவம் இன்றைக்கு எத்தனை பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கிறது? 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என உரத்துச் சொல்கிற அளவுக்கு அவதானமான அறிவும் நுணுக்கமான கவனிப்பும் எத்தனை பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கிறது?
'நாங்களும் விமர்சனம் எழுதுறோம்' என்கிற பெயரில் எழுதப்படும் விமர்சனங்கள் எத்தனை பேரின் கனவுகளுக்கான சமாதிகளாக அமைந்து விடுகின்றன என்பதை விமர்சனவாதிகள் நினைத்துப் பார்க்க வேண்டும். தங்கள் நெஞ்சத்தில் ஒரு நிமிடம் விமர்சனவாதிகள் விரல் வைத்து யோசித்தால் பாலு மகேந்திரா பேசிய ஆதங்கத்தின் அர்த்தம் நூறு சதவீதம் உண்மை என விளங்கும்!


Post a Comment