சசிகுமார் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் 14 -ம் தேதி வெளியாக இருக்கிறது சுந்தரபாண்டியன் படம். சசிகுமார், லெட்சுமி மேனன், பரோட்டா சூரி, இனிகோ, அப்புக்குட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாக இருக்கும் சுந்தரபாண்டியன் படத்துக்கு சென்சார் போர்டு U சர்டிபிகேட் வழங்கி இருக்கிறது. காதல், நட்பு என இருவிதக் கலவையாக தயாராகி இருக்கும் சுந்தரபாண்டியன் தமிழகம் முழுக்க நூற்றுக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் சுந்தரபாண்டியன் பட டைட்டில் குறித்து சில மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. சுந்தரபாண்டியன் டைட்டில் குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிக்கப்பட்டு எவ்வித ஆட்சேபனையுமின்றி வரும் 14 -ம் தேதி படம் ரிலீசாக இருக்கிறது.
ஒவ்வொரு படத்திலும் அசத்தல் வசனங்களை பேசி அப்ளாஸ் வாங்கும் சசிகுமார் இந்தப் படத்தில் பேசும் ஹைலைட் வசனம் என்ன தெரியுமா? ''எதிரிகளை ஜெயிச்சுக் காட்டுங்க... அழிச்சுக் காட்டாதீங்க... எதிரிகள் இல்லாமல் போனால் நாம வாழலாம்; ஆனா வளர முடியாது!"
இதுகுறித்து பேசும் சசிகுமார், ''எல்லோரும் ரசிச்சு பார்க்கும் குடும்பப்பாங்கான படமா சுந்தரபாண்டியன் படம் இருக்கும். நட்பு இல்லாமல் என் படம் இல்லை. இதில் நூறு சதவீத லவ் இருக்கு. அதுக்குக் கொஞ்சமும் குறையாத நட்பு இருக்கு. காதல், காமெடி, கலாட்டான்னு இதுவரை பண்ணாத ஜாலிப்பையனா சுந்தரபாண்டியன் படத்தில் நடிச்சிருக்கேன். எத்தனை காலம்தான் நானும் கத்தியும் கம்புமா அலைய முடியும்? மனசுக்குப் புடிச்ச பொண்ணோட பறக்குற கேரக்டரை ரொம்ப ஜாலியா பண்ணி இருக்கேன். கூடவே, பாட்டிகளோட பட்டாளமே படத்தில் பட்டையைக் கிளப்பி இருக்கு." என்கிறார் ஆர்வத்தோடு.
சுந்தரபாண்டியன் சூப்பர் ஹிட் பாண்டியனாக ஜொலிக்க கும்பல் மனமார வாழ்த்துகிறது!

Post a Comment