மூத்த தமிழ் சினிமா நடிகை மனோரமா தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மூட்டுவலி மற்றும் கை, கால் வலி காரணமாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காமெடி நடிகையாக அறிமுகமாகி தனிப்பட்ட வாழ்வில் மிகுந்த சோகங்களுக்கு ஆளாகி, ஒருகட்டத்தில் அவற்றில் இருந்து மீண்டு, தவிர்க்க முடியாத குணசித்திர பாத்திரமாக கொடிகட்டியவர் மனோரமா. மூன்று முதல்வர்களுடன் இணைந்து நடித்த பெருமைக்கு உரியவர்.
காமெடி, கண்ணீர் என எதிலும் மிச்சம் வைக்காத அளவுக்கு ஆயிரக்கணக்கான பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த மனோரமாவுக்கு சமீப காலமாகவே உடல்நிலை மோசமாகி வந்தது. குடும்ப ரீதியான சிரமங்களால் கோயில்களுக்குச் சென்று நிம்மதி தேடிவந்த மனோரமாவுக்கு அங்கேயும் சிக்கல் வந்தது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்று இருந்தபோது, கோயில் தரப்பின் மனசாட்சியற்ற நடவடிக்கையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார் மனோரமா. அங்கிருந்து சென்னை திரும்பியவருக்கு மறுபடியும் உடல்நிலை மோசமானது. நடிகர் சிவகுமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்து கவனிக்க, சற்றே தைரியமாகி வீடு திரும்பினார் மனோரமா.
இந்நிலையில், வீட்டில் அவருக்கு அடிக்கடி நினைவு தப்பியதாகச் சொல்கிறார்கள் அவருக்கு உடனிருக்கும் உதவியாளர்கள். ''கை, கால் வலி தான் அம்மாவை அடிக்கடி படுத்தி எடுக்கிறது. அதற்காக தைலம் தேய்ப்பது, வலி நிவாரண மாத்திரை விழுங்குவது என சிரமத்திலேயே நாட்களை நகர்த்திய அம்மாவுக்கு அடிக்கடி நினைவு தப்பியதுதான் வேதனை. பழைய நினைவுகளை யாராவது சொன்னால், அம்மாவுக்கு அதுபற்றிய நினைவே வராமல் இருந்தது. பின்னர் இன்னும் சில விசயங்களைச் சொன்னால் அதன் பிறகு அம்மாவுக்கு நினைவு வரும். சமீபத்தில் ஒரு நாள் அம்மாவுக்கு உடல்நிலை முடியவில்லை. வீட்டிலேயே மருத்துவம் செய்தபோது நடிகர் நாகேஷ் பற்றி பேச்சு வந்தது. நாகேஷை பற்றிப் பேசினால் அம்மா சகஜமாகி விடுவார் என நினைத்தோம். 'நாகேஷா... அப்படின்னா யாரு'ன்னு அம்மா கேட்டப்ப மனசொடிஞ்சு போச்சு. நாகேஷ் மேல அம்மா பெரிய அளவுக்கு மரியாதை வச்சிருந்தவங்க... அவர் பெயரையே மறக்குற நிலைக்கு போறாங்கன்னா விதியோட விளையாட்டை என்னன்னு சொல்றது?" என்கிறார்கள் அந்த உதவியாளர்கள். எத்தனையோ படங்களில் வயிறு வலிக்க வைத்த காமெடி ஜோடிகளாக பட்டையைக் கிளப்பியவர்கள் நாகேஷும் மனோரமாவும். ஆனால், இன்றைக்கு நாகேஷின் பெயரையே மறக்கிற அளவுக்கு மனோரமாவின் மனநிலை உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறது.
தற்போது மெல்ல மெல்ல உடல்நிலை சரியாகி வரும் மனோரமா இந்த வாரத்திலேயே வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த தமிழ் உள்ளங்களையே சிரிப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்திய மனோரமாவின் வாழ்க்கையில் இத்தனை சூறாவளிகள் தொடர்வது எத்தகைய வேதனையானது? வாழ்ந்து செழித்த நெகிழ்விலும் தமிழ் சினிமாவை வாழ வைத்த நிறைவிலும் கடைசிக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க வேண்டியவர் வி(யா)தியின் பிடியில் தவிப்பது யாரும் ஏற்க முடியாத இயற்கையின் விளையாட்டு!






+ comments + 1 comments
Kalaththin kodumai... Manorama nalam pera iraivanai ventukiren.....
Post a Comment