'பிரபல வெற்றிப்பட நடிகையா என்னை அத்தனை மீடியாக்களும் படம் பிடிப்பாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனால், எண்பது லட்ச ரூபாய் பணத்தை மோசடி செஞ்சா ஆளா என்னை இவ்வளவு மீடியாக்கள் படம் பிடிக்கின்றன. எல்லாம் என் தலைவிதி!" - ஜெயிலுக்குக் கிளம்புகையில் நடிகை அனுஷா சொன்ன வேதனையான வார்த்தைகள் இவை. 'கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு' படத்தின் நாயகி அனுஷா பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாதன் என்கிற சினிமா பைனான்சியர் தான் அனுஷா மீது புகார் கொடுத்து இருப்பவர். ''படத்துக்காக 80 லட்ச ரூபாயைக் கடன் வாங்கிய அனுஷா தற்போது அதனைத் திருப்பித் தர மறுக்கிறார். அவர் என்னிடம் கைநீட்டி கடன் வாங்கியதற்கான எல்லாவித ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன. அதனால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்!" என சென்னை கமிஷனர் திரிபாதியிடம் புகார் கொடுத்திருக்கிறார் குருநாதன். இந்தப் புகாரின் அடிப்படையில்தான் அனுஷாவை கைது செய்திருக்கிறது போலீஸ்.
சட்ட உதவிகளுக்கோ ஜாமீன் ஏற்பாடுகளுக்கோ ஆளின்றி அனுஷா அநாதரவாக நின்ற விதம் எல்லோரையும் கண்கலங்க வைத்தது. சிறைக்குச் செல்லத் தயாரான நிலையில் உடன் வந்த பெண் போலீஸாரிடம் அனுமதி பெற்று அனுஷாவிடம் சில வார்த்தைகள் பேசினோம்... வேறு எந்த நிருபர்களும் அவரை நெருங்காத நிலையில் (ஏம்பா... சினிமாவில ஜெயிச்சா மட்டும்தான் நீங்க எல்லாம் பேட்டி எடுப்பீங்களா? இதான் மீடியா தர்மமா?) அவர் நம்மிடம் சொன்ன விசயங்கள் ரொம்பவே உருக்கமானவை...
''சினிமாவில் பெரிய நடிகையாக வரவேண்டும் என்பதுதான் என் கனவு. அதற்காக நடனம், உடற்பயிற்சி என எல்லாவிதமான உழைப்பையும் காட்டினேன். ஆனாலும், பணம் இருந்தால் தான் நடிகையாக முடியும் என்கிற நிலையே தொடர்ந்தது. பல இயக்குனர்களை நேரில் பார்த்துப் போராடியும் 'கலக்குற சந்துரு', 'சிரிப்புடா' ஆகிய இரண்டு படங்களில் மட்டும்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு படத்தில் எனக்கு கதாநாயகி வேடம். அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் நடித்தால் நிச்சயம் பெரிய நாயகியாக வலம்வந்து விடலாம் என நம்பினேன். அதனால்தான் அந்தப் படம் எடுக்க என்னால் முடிந்த பண உதவிகளை செய்தேன். என் அம்மா என் ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் உறுதுணையாக இருந்தார். பைனான்சியர் குருனாதனிடம் பேசி அவர்தான் படத்துக்காக 15 லட்ச ரூபாய் வாங்கிக் கொடுத்தார். அதற்கு வட்டி மேல் வட்டியாகப் போட்டு 80 லட்ச ரூபாய் கடன் என இப்போது குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள். யாருடைய பணத்தையும் எடுத்துக்கொண்டு ஏமாற்ற வேண்டும் என நாங்கள் ஒருபோதும் நினைத்தது இல்லை. படம் சரியாகப் போகாததால் பணத்தைக் கொடுக்க முடியாமல் போய்விட்டது. ஆனால், இந்த 15 லட்ச ரூபாயைக் கொடுத்துவிட்டு பைனான்சியரும் அவருடைய நண்பர்களும் என்னை எப்படி எல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதை நினைத்தால் இப்போதும் அழுகை வருகிறது. சினிமாவுக்கு வந்தால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காகப் பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருந்தேன். காலையில் ஷூட்டிங் என்றால் இரவு நிம்மதியாகத் தூங்கினால் தான் காலையில் முகம் பார்க்க லட்சணமாக இருக்கும். ஆனால், இரவு முழுக்க தூங்க விடாமல் தொந்தரவு செய்வார்கள். படம் வெற்றிபெறும் என்கிற நம்பிக்கையில் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன். ஆனால், எல்லாமே உடைந்து போய் இப்போது ஜெயிலுக்கு போகிற நிலை வந்து விட்டது." எனக் கண்கலங்கச் சொன்னவரிடம், ''இவ்வளவு சித்திரவதைகள் நடந்தபோதே நீங்கள் போலீசிடம் புகார் கொடுத்து இருக்கலாமே?" எனக் கேட்டோம்.
'படத்துக்காகத்தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன். ஒரு தடவை புகார், போலிஸ்னு போயிட்டோம்னா அப்புறம் ஜென்மத்துக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது. பைனான்சியர் குருநாதன் எனக்கு எதிரா புகார் கொடுத்தபோது போலீஸ்ல இருக்கும் சிலரே, 'நீங்க அவர் மேல செக்ஸ் புகார் கொடுங்க'ன்னு சொன்னாங்க. கை நீட்டி பணம் வாங்கிட்டு அவர் மேல புகார் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை. இப்பவும் யார் மேலயும் எனக்கு கோபம் இல்லை. என் விதிதான் எல்லாத்துக்கும் காரணம்."
''ஒரு நடிகையாக ஜெயிக்க முடியாமல் ஜெயிலுக்கு போறதை நினைச்சு வருத்தமா இருக்கா?"
''வருத்தப்பட்டு என்ன ஆகப் போவுது? நாளைக்கு எல்லா பேப்பரிலும் பண மோசடி செய்த நடிகை கைதுன்னு செய்தி வரும். அதையும் படத்தோட போடுவாங்க. ஒரு புதுமுக நடிகையா என்னோட புகைப்படங்களை எல்லா பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி வைத்தேன். அப்போதெல்லாம் அவங்க என் படத்தைப் போடலை. இப்போ அவங்களே தேடிப்புடிச்சு போடுவாங்க. எது எந்த நேரத்துல அமையனுமோ அது அந்த நேரத்துல அமையனும். அவ்வளவுதான். வெளியே வந்ததுக்கு அப்புறம் உங்ககிட்ட விரிவா பேசுறேன். என்னை மதிச்சு என் கருத்தையும் கேட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்!"
கண்ணீரோடு சிறை நோக்கிக் கிளம்பினார் அனுஷா.
விரைவில் அவருடைய விரிவான பேட்டி நம் இணையதளத்தில் வெளியாகும்.


+ comments + 1 comments
Oru natikaiyin kathai ena kumudamum, nakkeranum ezhuthum puruda kathaikalai pola illaamal, nija vazhvin thuyaraththai ezhuthi iruppathu sirappu. Kumpal pani thotarattum.
Post a Comment