''நான் நல்லா இருக்கேன்... உடம்புக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல... யாரும் என் மனசை மாத்த முடியாது. நான் சுய சிந்தனையோடதான் இருக்கேன். நீங்கெல்லாம் இருக்குறப்ப எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது... நீங்க கவலையே படாதீங்க..." - மதுரை ஆதீனம் சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்த போது இப்படித்தான் புலம்பினார். 'நான் நல்லாத்தான் இருக்கேன்...' என ஒன்றுக்கு ஒன்பது தடவையாக அவர் சொன்னபோதே அவர் நல்ல மனநிலையில் இல்லை என்பது புலனாகி விட்டது.
இளைய ஆதீனமாக நித்தியானந்தா அறிவிக்கப்பட்ட நேரமோ என்னவோ... ஒன்றின் மேல் ஒன்றாக மதுரை மடத்துக்கு சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. மதுரை ஆதீனத்தின் நரம்புத் தளர்வு நோயை குணப்படுத்தியதைத் தவிர, நித்தியால் வேறெந்த நன்மையையும் மடத்துக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையில் புலித்தோல், மான் கொம்பு இருப்பதாக சொல்லி போலீஸ் தரப்பும் மதுரை மடத்துக்குக் குடைச்சலைக் கொடுக்க, ஆதீனகர்த்தர் ரொம்பவே அதிர்ந்து போனார். அரசுத் தரப்பும் தனக்கு எதிராக மாறி வருகிறது என்பதை ஆதீனகர்த்தர் புரிந்து கொண்டார். அவருக்கு மிக நெருக்கமானவரான சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கும் இப்போது சரியில்லாத நேரம். நடராஜன் குவித்து வைத்திருக்கும் பணம் மதுரை மடத்தில் பதுக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே பரபரப்புகள் கிளம்பிவரும் நிலையில், அரசுத் தரப்பின் அதிரடி, எந்த நேரத்திலும் எப்படியும் மாறலாம் என்பதை மதுரை ஆதீனகர்த்தர் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்.
முதல்வரைச் சந்திக்க கடிதம் கொடுக்கும்படி ஏற்கனவே நித்தியை வற்புறுத்தியிருந்தார் மதுரை ஆதீனம். அதன்படியே 'அம்மா... தாயே... அஷ்ட லட்சுமியே...' என உருகோ உருகு என உருகி ஐந்து பக்கக் கடிதத்தைக் கார்டனுக்கு அனுப்பி அழைப்புக்காக காத்திருந்தார் நித்தி. ஆனால், கொடநாட்டில் ஓய்வு எடுக்க வேண்டிய முக்கியமான வேலை முதல்வருக்கு இருந்ததால் நித்தி சந்திப்புக்கு சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. தனக்கு நெருக்கமான சில போலீஸ் அதிகாரிகள் மூலமாக நித்தி தரப்பு பேசிப்பார்த்தும் தக்க பலன் கிட்டவில்லை. மொத்தத்தில் முதல்வர் நித்தியை சந்திக்க மாட்டார் என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.
இந்நிலையில்தான் நித்தியை மடத்தை விட்டு நீக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் மதுரை ஆதீனம். ஏற்கனவே மதுரை ஆதீனத்தால் இளைய ஆதினமாக்கப்பட்ட சுப்பிரமணி என்பவரை அடுத்த சில மாதங்களிலேயே தூக்கி வீசினார் மதுரை ஆதீனம். மடத்தின் சட்ட திட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறது. அதேபாணியில் இப்போது நித்தியையும் இளைய சந்நிதான பொறுப்பிலிருந்து தூக்கி வீசி பழியைத் துடைக்கத் தயாராகிவிட்டார் மதுரை ஆதீனம்.
அனைத்தையும் சமாளிக்கக் கற்று வைத்திருக்கும் நித்தி இதற்கும் ஏதாவது செய்யாமலா இருப்பார்?
- கும்பல்




+ comments + 5 comments
நித்தியானந்தாவை நீக்கினால்தான் மதுரை மடம் மறுபடியும் புனிதப்படும். தெரிந்தோ தெரியாமலோ மதுரை ஆதீனம் செய்த தவறுக்கு இதுதான் பிராயச்சித்தம். ஆனால், மதுரை ஆதீனத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் நித்தியானந்தா பிராடு அவரை சுயமாக இயங்க விடுமா என்பதுதான் சந்தேகம்!
NITHYANANDHA SWAMI IS NO 1 ACTOR. MADURAI ATHINAM NO 2 ACTOR.
மதுரை ஆதின மடத்தைக் காப்பாத்து கடவுளே... இவனுங்ககிட்ட மாட்டிக்கிட்டு அந்த மடம் படும் பாடு இருக்கே... எல்லாம் அந்த மதுரை மீனாட்சிக்கே வெளிச்சம்!
மதுரையில் அழகிரின்னு ஒருத்தர் இருந்தாரே... பஜ்ஜி சுரேஷை பக்கத்துலேயே வச்சுக்கிட்டு அலைஞ்ச அந்த அழகிரியைக் கண்டுபிடிங்கய்யா...
ada pongappa...
Post a Comment