தமிழக அரசு வெளியிட்டிருக்கும் திடீர் அறிவிப்பில் சம்பத் ஐ.ஏ.எஸ். சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையராகப் பணியாற்றிய சம்பத் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பத் நல்லவரா கெட்டவரா என்பதை ஆராய்வதல்ல நம் வேலை. ஆனால், அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கும் பின்னணிதான் பலரையும் குமுற வைத்திருக்கிறது.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் அடுத்தடுத்து நிலவும் குளறுபடிகள் குறித்து ஒரு தனியார் சேனல் செய்தி சேகரித்திருக்கிறது. அப்போது ஆஃப் தி ரெக்கார்டாக சம்பத் சில விசயங்களைச் சொல்லி இருக்கிறார். பரபரப்புக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் இன்றைய மீடியாக்களின் பசி சம்பத்துக்கு தெரிந்திருக்கவில்லை போலும். ரகசிய கேமிரா மூலமாக சம்பத் ஆஃப் தி ரெக்கார்டாக சொன்ன விசயங்களை அப்படியே ஒளிபரப்பியது அந்த சேனல். அதிகாரிகளை அடிமைகளாக நடத்தும் இந்த அரசாங்கத்துக்கு இந்த ஒற்றைக் காரணம் போதாதா? உடனே சஸ்பென்ட் ஆர்டரை டைப் செய்து கையில் கொடுத்துவிட்டார்கள்.
சரி. ஆஃப் தி ரெக்கார்டாக அப்படி என்னதான் சொன்னார் சம்பத் ஐ.ஏ.எஸ்?
''மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் குளறுபடிகள் நடப்பதை நான் மறுக்கவில்லை. என்னால் முடிந்தமட்டும் இந்தக் குளறுபடிகளை எல்லாம் களைய நினைத்தேன். ஆனால், அதற்கான ஒத்துழைப்போ உரிய உதவியோ எனக்குக் கிடைக்கவில்லை!" எனச் சொன்ன சம்பத் கூடுதலாக இந்த அரசாங்கத்தின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்தும் மனதில் பட்டதைச் சொல்லி இருக்கிறார். அவ்வளவுதான் விஷயம்.
இன்றைய காலகட்டத்தில் சம்பத்தை மட்டுமல்ல... தமிழகத்தில் இருக்கும் 90 சதவிகித அதிகாரிகளைக் கேட்டால், இதைவிடக் கேவலமாகத்தான் இந்த அரசைப் பற்றி சொல்வார்கள். தன்னிச்சையாகச் செயல்பட முடியாதபடி அமைச்சர்களாலும் ஆளும் கட்சிப் புள்ளிகளாலும் திணறடிபடும் அதிகாரிகளின் இன்றைய மனநிலை இப்படித்தான் இருக்கிறது. ஆனால், இதனை உணராமல் ஏதோ, சம்பத் ஐ.ஏ.எஸ். மட்டுமே அரசுத் துறையின் அவலட்சணத்தை ஒத்துக்கொண்டது போல் சஸ்பென்ட் நடவடிக்கை நிகழ்த்தப்பட்டிருப்பது தான் வேதனை.
கடந்த ஆட்சியில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் ஆட்சி மாற்றத்துக்காக பிரார்த்தனையே செய்தார். எல்லோரும் எதிர்பார்த்தபடி ஆட்சியையும் மக்கள் மாற்றி அமைத்தார்கள். ஆனால், 'போன ஆட்சி எவ்வளவோ தேவலாம்' என்கிற அளவுக்கு இந்த ஆட்சியிலும் அடுத்தடுத்து தூக்கி அடிக்கப்பட்ட அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இப்போது வி.ஆர்.எஸ். கொடுக்கிற முடிவுக்கே வந்துவிட்டார். சத்துணவுப் பணியாளர் நியமனத்தில் நியாயப்பூர்வமாக செயல்பட்ட காரணத்துக்காக விருதுநகர் கலெக்டர் பாலாஜியை தூக்கி அடித்ததும் இந்த அரசின் சமீபத்திய சாதனைதான்.
இத்தகைய அரசியல் கோமாளித்தனங்கள் எந்தக் காலத்திலுமே முடிவுக்கு வரப்போவது இல்லை. ஆனால், இதற்கெல்லாம் முடிவுகட்ட வேண்டிய மீடியாக்கள் பரபரப்புக்காக எதையும் செய்கிற மனநிலைக்கு மாறியிருப்பதுதான் வேதனை. அரசுப் பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் ஆஃப் தி ரெக்கார்டாக சொன்ன விஷயத்தை ஒளிபரப்பி அவருடைய வாழ்க்கையில் நிரந்தரக் கரும்புள்ளியை ஏற்படுத்தியிருக்கும் மீடியாக்களை எந்த வகையில் சேர்ப்பது? மீடியாக்கள் உண்மையை உணர வேண்டும் என்பதற்காக இப்படி ஆஃப் தி ரெக்கார்டாக பேசும் அதிகாரிகள் ஒன்றிரண்டு பேர்தான் இருக்கிறார்கள். அவர்களின் வாயையும் நிரந்தரமாக மூடுகிற வேலையை இன்றைய மீடியாக்கள் செவ்வனே செய்கின்றன. ஒருவேளை தங்களின் அனுமான - கற்பனைக் கூத்துக்களுக்கு இத்தகைய அதிகாரிகள் தடையாக இருப்பதாக மீடியாக்கள் நினைக்கின்றனவோ என்னவோ?!
கும்பல்

.jpg)
+ comments + 3 comments
NALLA ATHIKAARIKKU INTHA NILAIYA?
?&%$#&**$$&**#@!$&**
சபாஷ் சம்பத் சார், மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லிய உங்களின் தைரியத்துக்கு பாராட்டுக்கள்.
கீப் இட் அப் சார்!
Post a Comment