''பிரியா என் மகள் இல்லை!''
பிரியா மகாலட்சுமி
ஒரு மாதமாக தமிழகத்தையே பரபரக்க வைக்கும் பிரியா மகாலட்சுமி விவகாரத்தில் முதன் முறையாய் வாய் திறந்திருக்கிறது அரசுத் தரப்பு. பிரியா மகாலட்சுமி யார் என்பது பற்றியோ, அவர் மீதான வழக்கு குறித்தோ ஏதும் பேசாமல், 'முதல்வரின் மகள் இல்லை என்பது தெரிந்தும் அவரை மகள் எனக் குறிப்பிட்டது ஏன்' எனக் கேட்டு ஜுனியர் விகடன் மீது வழக்குப் போட்டிருக்கிறது அரசுத் தரப்பு.
முதல்வரும், அவருக்கு சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குபவர்களும் எவ்வளவு மெத்தனமாக இருக்கிறார்கள் என்பதற்கு பிரியா மகாலட்சுமி மேட்டர் நல்ல உதாரணம். முதன் முறையாக பிரியா மகாலட்சுமி மேட்டர் வெளியான போதே இந்த விவகாரத்தில் முதல்வரின் தனிப்பட்ட குடும்ப விவகாரம் தோண்டப்படுகிறது என்பதை அரசுத் தரப்பு சட்ட ஆலோசகர்கள் அனுமானித்திருக்க வேண்டும். யாரோ ஒரு பெண் திடீரெனக் கிளம்பிவந்து, 'நான்தான் முதல்வரின் மகள். எம்.ஜி.ஆருக்கும் முதல்வருக்கும் பிறந்த ஒரே வாரிசு நான்தான்' என சொல்கிறார் என்றால், முதல்வருக்கு இந்த விவகாரம் எந்த அளவுக்கு இழுக்கை உண்டாக்கும் என்பதை அரசுத் தரப்பு அதிகாரிகள் அனுமானித்து உடனடியாக இதற்கு முடிவு கட்டியிருக்க வேண்டும். முதல்வரின் கவனத்துக்கு இதுபற்றி எடுத்துக் கூறி அவர் தரப்பிலான ஆலோசனையையும் பெற்றிருக்க வேண்டும்.
உளவுத்துறையின் புலியாக வர்ணிக்கப்படும் ராமானுஜத்துக்கு முதல்வரின் மகள் என ஒரு பெண் பரபரப்பு கிளப்புவது பற்றி ஏழு மாதங்களுக்கு முன்னரே தெரியும் என்கிறார்கள். அப்போதே ராமனுஜம் முதல்வரிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசித்து இப்படியொரு விவகாரம் இருப்பதே மீடியாக்களுக்குத் தெரியாமல் செய்திருக்க முடியும். ஆனால், விவகாரம் சந்திக்கு வரும் வரை மௌனச்சாமிகளாக இருந்துவிட்டு, இப்போது பத்திரிக்கைகளுக்கு எதிராக வழக்குப் போடுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?
கொடநாடு பங்களாவில் தங்கி இருந்தாலும் தமிழகத்தின் அனைத்து நிகழ்வுகளையும் தான் கண்காணிப்பதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் முதல்வர் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால், தனக்குப் பிறந்த மகள் எனச் சொல்லி ஒரு இளம்பெண் அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை பேசி வருவதையும், அதை மீடியாக்கள் எழுதிக் குவிப்பதையும் முதல்வர் அறியாதவராகவே இருந்திருக்கிறார். தான் சம்பந்தப்பட்ட விவகாரத்தையே அறியாத - அறிய ஆர்வம் காட்டாத முதல்வருக்கு தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு குளறுபடிகளும், பொது நிகழ்வுகளும் எப்படிப் புரிய வரும்?
இந்தியாவில் எந்த முதல்வருமே இப்படி தலைமை இடத்தைவிட்டு வெளியேறி தனியே ஓரிடத்தில் தங்கி ஓய்வு எடுத்ததாக வரலாறே கிடையாது. ஓய்வு எடுப்பது சரிதான் என்றாலும், ஓய்வு எடுக்கிற அளவுக்கு அப்படி என்ன சாதனைகளை முதல்வர் நிகழ்த்திவிட்டார்? தன்னுடைய குடும்ப விவகாரத்தை தமிழக மீடியாக்கள் தோண்டித் துருவி சந்திக்கு கொண்டு வந்தது கூடத் தெரியாமல், கொடநாட்டில் ஓய்வு என்கிற பெயரில் இரும்புக் கோட்டைக்குள் மறுபடியும் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர். மீடியாக்கள் தொடர்ந்து எழுதிக் குவிக்கும் நிலையில் வேறு வழியில்லாமல் முதல்வரிடம் தயங்கித் தயங்கி வாய் திறந்திருக்கிறார்கள் போலீஸ் தரப்பினர். அதன் பிறகுதான் வழக்குப் போடும் முடிவை சொல்லி இருக்கிறார் முதல்வர். இந்த விவகாரத்தில் வழக்கு போடுபவராக இருந்திருந்தால் முதல் மேட்டர் வெளியான போதே வழக்குப் போட்டிருக்கலாமே... எழுதிக் கலைத்து மீடியாக்கள் ஓய்ந்து போயிருக்கும் நிலையில் மீண்டும் அந்த விவகாரத்தை நினைவுபடுத்தும் வகையில் ஜெ. வழக்குப் போட்டிருக்கிறார். அனுதினமும் பத்திரிக்கைகள் வாசிக்கும் பழக்கம் இருந்திருந்தால் இப்படியொரு நிகழ்வே நடந்திருக்காது. ஜெயா தொலைக்காட்சியைத் தவிர வேறு எதையும் பார்க்க மாட்டேன் என அடம் பிடிக்கும் முதல்வரால் தமிழக நிகழ்வுகளை வேறு எப்படி அறிய முடியும்?
பரபரப்புக்காக குடும்ப விவகாரங்களையும் தோண்டத் தயங்காத மீடியாக்கள்... குடும்ப விவகாரமே சந்தி சிரித்தாலும் ஓய்வே முக்கியம் என நினைக்கும் முதல்வர்... தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் புலனாய்வுப் புலிகள்... எதற்கும் மண்டை ஆட்ட மட்டுமே கற்று வைத்திருக்கும் மங்குனி மந்திரிகள்... தமிழகத்தின் அருமை பெருமைகளைச் சொல்ல இதற்கும் மேல் வேறென்ன சொல்ல வேண்டும்?!
- கும்பல்


+ comments + 4 comments
செம கட்டுரை கும்பல்... தன் வீட்டு விவகாரத்தையே கவனிக்க துப்பில்லாத இந்த முதல்வர் நாட்டு விவகாரங்களை எப்படி கவனிப்பார். இம்சை மன்னன் 23-ம் புலிகேசி படத்தை லைவ்வாக பார்ப்பது போலிருக்கிறது இந்த ஆட்சி!
ALL MINISTERS NOT WORTH...
HIGH LEVEL OFFICERS ALL ANYTIME SLEEP...
JAYA ANYTIME REST...
INTHA NAADU VELANKIDUM
cortoons spr kumbal
sarithaane
Post a Comment