அமைச்சரவையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அடுத்தபடியாய்... அதாவது புரட்டோகால் அடிப்படையில் அமைச்சரவையின் மூன்றாவது செல்வாக்குப் பிரமுகராக வலம் வந்த செங்கோட்டையன் திடீரென அமைச்சர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். கட்சியில் அவர் வகித்த தலைமைச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்னணியை விளக்கிச் சொல்ல முடியாமல் அத்தனை மீடியாக்களும் திணறி வருகின்றன. காரணம், பதவி பறிப்பு நிகழ்த்தப்பட்ட நாளில்கூட செல்வாக்குக் குறையாத ஆளாகத்தான் செங்கோட்டையன் வலம் வந்தார். சில மணி நேரங்களுக்குள் நடந்தது என்ன என்பதுதான் புதிராக இருக்கிறது.
''பத்து நாட்களுக்கு முன்னரே கொடநாடு தோட்டத்துக்கு வரச்சொல்லி செங்கோட்டையனுக்கு தகவல் போனது. அவர் மட்டுமல்லாது அவருடன் இன்னும் சில அமைச்சர்களும் அழைக்கப்பட்டு இருந்தார்கள். ஆனால், இடையில் என்ன நிகழ்ந்ததோ... செங்கோட்டையனை மட்டும் கொடநாட்டுக்கு வரக்கூடாது என சொல்லிவிட்டார்கள். அப்போதே தனக்கு சிக்கல் தொடங்கிவிட்டதாக உறுதியாக நினைத்தார் செங்கு. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தன் குடும்பத்தினரே முதல்வரிடம் புகார் கொடுத்ததும், அதனை காதோடு காதாக முடிக்காமல் பூதாகரமாக்கி உதவியாளரை கைது செய்து அத்தனை மீடியாக்களிலும் செய்தி வர வைத்ததில் முதல்வர் அலுவலகமே முன்னின்று செயல்பட்டதும் செங்கோட்டையனை மனதளவில் மிகுந்த சோகத்தில் தள்ளியிருந்தது. இதுபற்றி முதல்வரிடம் விளக்கமாக பேசும் நிலையிலும் செங்கோட்டையன் இல்லை. இந்த இடைவெளியை செங்கோட்டையனின் எதிரிகள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
சசிகலாவும் அவருடைய உறவுப்படைகளும் கார்டனை விட்டு வெளியேற்றப்பட காரணகர்த்தாவாக இருந்தவரே செங்கோட்டையன்தான். ராவணன், திவாகரன் உள்ளிட்டவர்களின் அத்தனைவிதமான அத்துமீறல்களையும் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தி சசிகலாவை ஓட வைத்ததும் செங்கோட்டையன்தான். இதையெல்லாம் மறைத்ததாக அப்போது ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சிக்கல் ஏற்பட்டது நினைவிருக்கலாம். தங்களின் வீழ்ச்சிக்கு முழுக் காரணமாக இருந்த செங்கோட்டையனை சரியான நேரத்தில் வீழ்த்தி தன் பவரை நிரூபித்திருக்கிறார் சசிகலா. செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கையே இதற்கு பலிகடாவாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் எவ்வித விளக்கத்தையும் அவரால் சொல்ல முடியாத நிலை. பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மூலமாக செங்கோட்டையனின் தனிமனிதத் தவறுகள் கடிதமாக முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் ரொம்பவே கோபமான முதல்வர் காரசாரமான வார்த்தைகளைச் சொல்லி திட்டியதாகவும் சொல்கிறார்கள். மொத்தத்தில் சசிகலாவின் கை மறுபடியும் ஓங்கி விட்டது என்பது மட்டும் உண்மை!" என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தில்.
பதவி பறிப்பு சம்மந்தமாக ஆறு அமைச்சர்களின் பெயர்களை பட்டியலில் வைத்திருந்தாராம் முதல்வர். ஆனால், அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த செங்கோட்டையனை நீக்கி இருக்கும் நேரத்தில் இதர அமைச்சர்களின் மீதான நடவடிக்கை தேவையற்றது என உணர்ந்து அதனை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டாராம். அந்த விதத்தில் ஆறு அமைச்சர்களின் பதவி நீட்டிப்புக்கு காரணமாகவும் செங்கோட்டையனே இருக்கிறார். இதைத்தான் கெட்டத்திலும் ஒரு நல்லது என்கிறார்களோ!
- கும்பல்


+ comments + 1 comments
அதிமுக அமைச்சரவையில் இருக்கும் அத்தனை அமைச்சர்களுக்குமே இன்ன்நேரம் கிலி பிடித்திருக்கும்.
உயிரைக் கையில் பிடித்தபடி அவர்களால் எப்படி பணியாற்ற முடியும்? பதவி இன்றைக்குப் போகுமோ
நாலைக்குப் போகுமோ என்கிற நிலையில் பிரார்த்தனையைத் தவிர அவர்களால் ஏதும் செய்ய முடியாது
Post a Comment