முதல் நாள் அரியனை... மறு நாள் தெருமுனை! ஜெயலலிதா ஆட்சியில் வாடிக்கையாக நிகழும் ஒன்றுதான் இது. ஆனாலும், இரண்டாம்கட்டத் தலைவர்களில் மிக முக்கியமானவராக விளங்கிய செங்கோட்டையன் சர்வ சாதாரணமாக அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சிப் பொறுப்பில் இருந்தும் தூக்கி வீசப்பட்டிருப்பது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது. கொடநாட்டில் இருந்து சென்னைக்குத் திரும்பிய நாளில் திடீரென நிகழ்ந்த இந்த அதிரடி செங்கோட்டையனை துள்ளத் துடிக்க வைத்துவிட்டது என்பதுதான் உண்மை!
கொடநாட்டில் இருந்து விமானத்தில் சென்னை வந்த ஜெயலலிதா மரியாதை நிமித்தமான வரவேற்பை ஏற்றிருக்கிறார். அப்போது செங்கோட்டையன் பணிவாக வணங்க அவரைக் கோபமாகப் பார்த்திருக்கிறார் ஜெயலலிதா. ''எங்கிட்டேயே பொய் சொல்லிட்டீங்களா... இனி என் முகத்திலேயே விழிக்காதீங்க..." என ஜெ. சொல்ல, செங்கோட்டையனுக்கு வியர்த்துக் கொட்டியிருக்கிறது. தான் பொய் சொன்னதாக அம்மா எதைக் குறிப்பிடுகிறார் என்பதைக்கூட அவரால் யூகிக்க முடியவில்லை. அம்மாவின் பின்னால் சசிகலா சிரித்த முகமாக செல்ல, செங்கோவின் முகம் இன்னும் வெளுத்துப் போனது.
அன்று மாலை நடந்த ஜனாதிபதி வேட்பாளர் சங்க்மா சந்திப்பு நிகழ்ச்சிக்கு செங்கோட்டையனுக்கு அழைப்பு இல்லை. அடுத்து நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதா வேண்டாமா எனத் தத்தளித்தார் செங்கோ. அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அழைக்க பயந்தபடியே கூட்டத்துக்குள் வந்தார். முதல்வரை வணங்கினார். முதல் வரிசையில் அமர்ந்தார். பொதுவான சில விஷயங்களைச் சொல்லி ஆவேசப்பட்ட முதல்வர் தன் மீது எவ்வித கோபமும் காட்டாமல் கூட்டத்தை முடித்துவிட்டுக் கிளம்ப... செங்கோட்டையனுக்கு சற்றே நிம்மதி. ஆனால், அடுத்த அரை மணி நேரத்திலேயே செங்கோட்டையனின் தலைமை நிலையச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. செய்தி உண்மையா என்பதை ஜெயா டி.வி. நிர்வாகி ஒருவரிடம் உறுதி செய்துகொண்ட செங்கோட்டையன் சட்டென வாடிப்போனார். அடுத்த சில நிமிடங்களில் அவருடைய அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
சைரன் கார் கிளம்ப, பாதுகாப்பு அதிகாரிகளும் உதவியாளரும் அடுத்த அரை மணி நேரத்திலேயே அங்கிருந்து அகன்றனர்.அன்று இரவே செங்கோட்டையனின் அலுவலக அறை அமைச்சர் சிவபதிக்கு ஒதுக்கப்பட்டது. அடுத்த நாள் காலை செங்கோட்டையனின் வீடு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தயாராக... செங்கோட்டையனுக்கு கண்கலங்கிவிட்டது. ''உள்ளே இருக்கும் என் பொருட்களைக்கூட நான் இன்னும் எடுக்கவில்லையே..." என்றவர் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கை செலுத்திவிட்டு தனி காரில் சொந்த ஊருக்குக் கிளம்பினார். அங்கே ஆதரவாளர்கள் அங்கே திரண்டால் சங்கடமாகிவிடுமே என நினைத்த செங்கோ, சொந்த ஊருக்கும் செல்லாமல் வேறு எங்கோ மனதை ஆற்ற கிளம்பிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சர்வபலம் பொருந்திய ஒருவருக்கே இந்தக் கதியா என மலைக்காதீர்கள்... கட்டுரையின் முதல் வரியை மறுபடியும் படித்தால் உங்கள் மனம் சற்றே ஆறுதல் பெற வாய்ப்பு இருக்கிறது!
கும்பல்





+ comments + 1 comments
photos and comments super. ithaan kumbal kusumba?
Post a Comment