'வழக்கு எண் 18/9 ' பார்த்துவிட்டீர்களா? பாருங்கள்... நீங்கள் அந்தப் படத்தைப் பார்ப்பது சமூக சித்தரிப்புகளால் தண்டனைக்கும் அவலகத்துக்கும் ஆளாகித் தவிக்கும் எத்தனையோ பேருக்குச் செய்யும் சிறு ஆறுதலாக இருக்கும். வறுமை என்கிற அடையாளம் எத்தகைய கொடுமைகளுக்கு எல்லாம் ஒருவனை ஆளாக்கி விடுகிறது என்பதற்கு இந்தப் படத்தின் கதாநாயகன் ஓர் உதாரணம்.
'சார், அந்தஸ்தான குடும்பத்துக்கார பையனை விடுவிச்சிடுங்க... வேற யாரையாச்சும் அந்த கேசுல சேர்த்திடுங்க... அதுக்கு என்ன ஆகுமோ அதைத் தயங்காம கேட்டு வாங்கிக்கங்க...' என சர்வசாதாரணமாக ஒரு போன் காலில் அப்பாவி ஒருவனின் எதிர்காலம் சிதைக்கப்படும் அவலத்தை இதைவிட பொளேரென எவராலும் சொல்ல முடியாது.
'நாங்களும் வாழ்கிறோம்' என்கிற கணக்கில் இந்த தேசத்தில் எத்தனை பேர் வாழ்கிறார்கள்... அவர்களைத் திரும்பிப் பார்க்கும் சிறுகண ஆர்வம்கூட நமக்கு வந்தது இல்லை. ஆனால், தன் படத்தின் களமாக - தன் சிந்தனையை இறக்கி வைக்கும் தளமாக பாலாஜி சக்திவேல் அந்த ஜீவன்களின் மேல் கருணைக் காட்டியிருக்கிறார். அவர்களின் வாழ்வியலை மனிதர் எங்கிருந்துதான் கூர்ந்தாரோ... அவர்களின் அனுதின நகர்வுகளையும், ஆசாபாசங்களையும், காயங்களையும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் சமரசத்தனத்தையும் அப்படியே கண்ணில் வார்க்கிறார் பாலாஜி சக்திவேல்.
அதிகம் படிக்காத - தன்னைப் பற்றிய அக்கறை இல்லாத விழிம்பு நிலை ஜீவன்களிடம் தான் மனிதாபிமானம் நிலைத்திருக்கிறது என்பதை தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவிக்கும் பாலியல் பெண் மூலமாக காட்சிப்படுத்துகிறார் பாலாஜி. அந்தப் பெண் போதைக்காக ஏங்கி நிற்கும் சூழலையும், அவள் கையில் பணத்தைத் திணித்து 'அக்கா, இனிமேல் தண்ணி அடிக்காதக்கா' என கதாநாயகன் கலங்குவதும், பிறரின் பார்வையில் அந்தப் பரிமாற்றம் எவ்வளவு கேவலமாகப் பார்க்கப்படுகிறது என்பதையும் அதிநுட்பமாக பதிவு செய்திருக்கிறார் பாலாஜி. மிக அருகில் நின்று கவனிக்கப்படும் விஷயங்கள் கூட நம் யூகிப்புக்குத் தக்கபடியே எப்படி தவறான தோற்றம் தருகின்றன என்பதற்கு அந்த ஒரு ஷாட் போதும்!
இந்தப் பாத்திரங்களை இன்னும் கொஞ்ச நேரம் கேமிரா பின்தொடராதா என்கிற ஏக்கத்தை தவிர்க்கவே முடியவில்லை. தெருவோரக் கடைக்காரர், அங்கே வேலை செய்யும் அபலைத் தொழிலாளர்கள், அவர்களைக் கடந்துபோகும் அழுக்கு மனிதர்கள், பெரிய குடும்பத்துக்கு வேலைக்குச் செல்லும் சிறுமி என ஒவ்வொரு பாத்திரங்களின் மீதும் நம் பயணம் பரிதாபத்துடனேயே தொடர்கிறது. இடைவேளை வரை இந்த பாராமுக மனிதர்களின் பக்கம் நம் பார்வையை நிலைத்திருக்க வைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். அறிந்தோ அறியாமலோ இந்த எச்ச மனிதர்களுக்கு அவர் செய்திருக்கும் சேவை இது! புறந்தள்ளப்பட்ட இப்படியொரு சமூகத்தைக் கடந்துதான் நம் அனுதின அவசரங்களும், சாதிப்புகளும், சந்தோஷங்களும் பிரயாணிக்கின்றன என்பது எத்தனை பேருக்குப் புரியும்?
கல்வித்தந்தை அவதாரம் சுமக்கும் பெண்ணில் ஆரம்பித்து முகம் இருட்டடிக்கப்பட்ட அரசியல்வாதி வரை மேல்தட்டு மிருகங்களை தோலுரித்து தொங்கவிட்டிருக்கும் பாலாஜிக்கு இந்தப் படம் நிச்சயமாக மரியாதைக்குரிய மைல்கல். பாலியல் குரூரங்களும், சேட்டைகளும் மிக மலினமாக மாறிவிட்ட நிலையில், ஒரு மாணவி பத்திரமாகத் திரும்புவது சாத்தியமற்றது என்பதை ஒரு தகப்பனாக அறிவுரைத்திருக்கிறார் பாலாஜி.
பணத்துக்காக பகடைக்காயாக உருட்டப்படும் ஒரு அப்பாவியின் அவலத்தை இதைவிட உருக்கமாக - உண்மையின் சாட்சியாக வேறு எவராலும் சொல்ல முடியாது. எதையும் தாங்கித் தாங்கியே பழக்கப்பட்ட ஜீவன்கள் திருப்பு அடித்தால் எப்படி இருக்கும் என்பதையும் திராவகத்தின் உக்கிரத்தோடு பதிவாக்கிப் பதற வைத்திருக்கிறார் பாலாஜி.
தமிழ் சினிமாவுலகின் சாலச்சிறந்த அடையாளம் இயக்குனர் பாலா. ஆனால், அவர் கையிலெடுக்கும் களங்கள் இதுவரை நாம் பார்க்காததும், பயணிக்காததுமாக இருக்கும். சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தொழிலாளியை நாம் தொடர்ந்தது இல்லை. பிச்சைக்காரர்களின் பின்னணியை அலசியது இல்லை. கூத்துக்காரர்களை குடும்பம் வரை அணுகியது இல்லை. ஆனால், பாலாஜி சக்திவேலின் களங்கள் அன்றாடம் நாம் பார்ப்பவை. டூ வீலர் மெக்கானிக் தொடங்கி தெருவோர தள்ளுவண்டி உணவுக்காரர் வரை நம் அருகாமையில் இருப்பவர்கள். நம்மோடு பேசுபவர்கள். ஆனால், அவர்களின் இயக்க ஊர்தலை நாம் ஒருபோதும் உணர்ந்ததே இல்லை. தினமும் சாப்பிடும் தள்ளுவண்டிக் கடை ஒரு நாள் சார்த்திக் கிடந்தால் , என்னவோ எதோ என நினைத்து நாம் பதறுவது இல்லை. பாசாங்கற்ற அந்த மனிதர்களுக்காக நொடி நேரத்தைக்கூட நாம் வீணடித்தது இல்லை. களங்களைக் கையாளும் விதத்தில் பாலாஜி சக்திவேல் அவர்களை பாலா - ஜீ என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும்!
எவரிடத்தில் சொல்லி இருந்தாலும் நிச்சயம் நிராகரிப்பட்டிருக்கும் இப்படியொரு ஆத்மார்த்த கதையை மிக தைரியமாகத் தயாரித்த இயக்குனர் லிங்குசாமியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மனிதாபிமானத்தின் சாட்சியாக இருக்கும் இரு மனிதர்களின் உருவாக்கத்தில் வெளியாகி இருக்கும் வழக்கு எண் தமிழ் சினிமாவின் கிழக்கு எண்!
- கும்பல் சினிமா குழு






+ comments + 12 comments
மிகச் சிறப்பான விமர்சனம். நல்ல படங்கள் எப்போதாவது தான் தமிழகத்தில் எட்டிப் பார்க்கின்றன. அத்தகைய படங்களை இணையதளங்களும் தமிழ் பத்திரிக்கைகளும் தான் கையிலெடுத்து வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கான முன்னோட்டத்தை கும்பல் இணையதளம் வெற்றிகரமாக செய்திருக்கிறது. வாழ்த்துக்கள் மிஸ்டர் பாலாஜி சக்திவேல்.
பாலாஜி சக்திவேலுக்கும் லிங்குசாமிக்கும் திருஷ்டி சுத்திப் போடுங்கள். ஆபாசம், வன்முறை, மொக்கை காமெடிகள், வழவழ வசனங்கள் என தரம்கெட்டுக் கிடக்கும் தமிழ் சினிமா உலகில் இப்படியும் ஒரு படமா? படத்தைப் பார்த்து ஒவ்வொரு ரசிகனும் உதிர்க்கும் கண்ணீர் தான் கோடம்பாக்கத்தின் பாவத்தைக் கழுவ வேண்டும்.
குறிப்பு: இந்தப் படத்தின் டிக்கெட்டை எடுத்து உதயநிதிக்கும், இயக்குநர் ராஜேஷுக்கும் அனுப்பி வையுங்கள் கும்பல் சார்பாக!
BEST WISHES BALAJI SIR........
பாலாஜி சக்திவேலுக்கு ஆயிரம் முத்தங்கள். ஈரானியப் படங்களை விஞ்சும் அற்புதமான தமிழ்ப் படம். இன்னும் பத்து வருடங்களுக்கு இந்தப் படம் தமிழ்த் திரையுலகின் அடையாளமாகக் கொண்டாடப்படும். பாலாஜி சக்திவேலையும் பாலாவையும் ஒப்பிட்டு எழுதியிருக்கும் விதம் சூப்பர்!
அனைத்து மீடியாக்களிலும் வழக்கு எண் படத்தைக் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் திடீர் அதிசயம் நடந்தது போல் இருக்கிறது. நல்ல படங்கள் ஓடாத நிலை மாறி, இத்தகைய வரவேற்பும் வெற்றியும் கிடைத்திருப்பது வியக்கத்தக்கது. இனியாவது தமிழ் சினிமாக்களின் ஓடுதளம் ஒழுங்காக அமைந்தால் சரி!
வழக்கு எண் தமிழ் சினிமாவின் கிழக்கு எண்... சூப்பரான வரி! வெல்டன் கும்பல்!
SPR FILM... CONGRATS BALAJI!
நல்ல படங்கள் எப்போதாவது தான் தமிழகத்தில் எட்டிப் பார்க்கின்றன.
அத்தகைய படங்களை இணையதளங்களும்,
தமிழ் பத்திரிக்கைகளும் தான் கையிலெடுத்து
வெற்றி பெற வைக்க வேண்டும்.
தெளிவான விமர்சனம்..நன்கு அலசி உள்ளீர்...இது மாதிரி படம் ஒரு குறிஞ்சி மலர் போல..
அருமையான படத்திற்க்கு, அழகான விமர்சனம்! ஹேராம்,கற்றது தமிழ்,பருத்திவீரன், அங்காடி தெரு,ஆரண்யகாண்டம், வரிசையில் தமிழ் சினிமாவை தலை நிமிர செய்யும் படம்! வாழ்த்துகள் பாலாஜி அண்ணா! லிங்குசாமி இயக்குவதை விட்டு , இது போல தயாரித்து தமிழ் சினிமாவை காப்பாற்றலாம் !
பாலாஜி சக்திவேல் காதல் படத்தின் மூலமே தன்னுடைய தனித்தன்மையையும் மண் சார்ந்த வாழ்வியலையும் அற்புதமாகச் சொல்லி தன் ஆளுமையை நிரூபித்தவர். பரபரப்பான வேகத்தில் படம் செய்து பணத்தை மடியில் கட்டும் வித்தைகளை நிச்சயம் அவருக்கு கோடம்பாக்கம் சொல்லிக் கொடுத்திருக்கும். ஆனால், அப்படியெல்லாம் எதற்கும் வசப்பட்டுப் போகாமல், இன்றைக்கும் சமூகத்தில் நிகழும் அவலங்களின் சாட்சியங்களை காட்சிப்படுத்தி, எதையும் சட்டை செய்யாத மனிதர்களுக்கு அவர் வைத்திருக்கும் சூடு இந்தப் படம்.
வழக்கு எண் : 18 / 9
-----------------------------
சாமுராய்,காதல்,கல்லூரிப் படங்களின் இயக்குனர் திரு.பாலாஜி சக்திவேல் இயக்கி இருக்கும் மற்றும் ஒரு படைப்பு.இது படைப்பு அல்ல,ஒரு உண்மை சம்பவத்தின் உறுதியான பதிவு. இவரின் பெரும்பாலான படங்கள் உண்மை சம்பவங்களை வைத்தே எடுக்க பட்டது.அந்த வரிசையில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு செய்தி தாளில் வெளிவந்த செய்தியை படமாக்கி அனைவரது
கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.அவர் ஒவ்வொரு படத்திற்கும் தன்னை மெருகேற்றி கொண்டே இருக்கிறார்.எப்படி ஒரு படத்தை குறைந்த பொருட்செலவில் இயக்கி வெற்றி பெற வைக்க வேண்டும் என்கிற சூத்திரத்தையும் கற்று வைத்துள்ளார்.
இப்போது படத்திற்கு செல்வோம். சென்னையில் வாழும் கீழ்தட்டு இளைஞனுக்கும் இளைங்கிக்கும் இருக்கும் காதல் மற்றும் அதே ஊரில் வாழும் மேல்தட்டு மாணவர்களுக்கும் உண்டாகும் காதலை மிகவும் தெளிவாக பதிந்துள்ளார்.நீங்கள் 5 பாடல்கள்(1 குத்து பாட்டு,2 காதல் டூயட்,1 ஹீரோ அறிமுக பாடல்,1 செண்டிமெண்ட் பாடல்), 2 சண்டை காட்சிகள்,அதி வேகமான இறுதி காட்சி(கிளைமாக்ஸ்),இவற்றை எல்லாம் எதிர் பார்த்து கமர்சியல்(மசாலா) படம் பார்க்க போனால்,உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.பிரமாண்டமான அரங்குகள் இல்லை,பாடல்களுக்கு வெளிநாடு செல்லவில்லை,பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கவில்லை.மாறாக,கதையை நம்பி புது முகங்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்.அனைவரும் மிகவும் அற்புதமான தேர்வு.படத்தில் அனைவரும் வாழ்ந்து காட்டி உள்ளார்கள்.
படத்தின் முதல் பாதியில் ஹீரோ வறுமை மற்றும் கடன் தொல்லையால் படிப்பை நிறுத்தி வெளியூருக்கு வேலைக்கு போகிறான்,பெற்றவர்கள் இறந்தது கூட தெரியாமல் வேலை செய்கிறான்.பின்பு அவர்கள் இறந்த செய்தி தெரிந்து பின்னர் திக்கு தெரியாமல் சுற்றி திரிந்து ஒரு கையேந்தி பவனில் வேலைக்கு சேர்ந்து உழைக்கிறான்.கையேந்திபவன் அருகில் இருக்கும் அபார்ட்மெண்டில் வேலைக்கார பெண்ணாக வேலை பார்க்கும் கதாநாயகி.இவர்களுக்கிடையில் ஏற்படும் மோதல்/காதல் முதல் பாதி.கதாநாயகனுடன் வேலை செய்யும் சிறுவன் மிகவும் அருமை. இரண்டாம் பாதியில் கதாநாயகி வேலை பார்க்கும் வீட்டின் உரிமையாளர் பெண்ணாக பள்ளியில் படிக்கும் பெண்.அதே அபார்ட்மெண்டில் தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் பெண்ணின்
பையனாக,தனக்கே உரிய பணகார பழக்கத்துடன்,பேச்சாலும்,பணத்தாலும் இளம் பெண்களை கவர்ந்து அவர்களை தவறாக மொபைலில் போட்டோ எடுத்து நண்பர்களுடன் பகிரும்(பிஞ்சிலே வெம்பிய சேட்டைகளுடன்) இன்னொரு மாணவன்.இவர்களுக்கிடையில்,ஏற்படும் காதலையும் அதனால் ஏற்படும் விபரீத்தையும்,அதனால் கதாநாயகன்,கதாநாயகிக்கும் ஏற்படும் மாற்றத்தையும் இயல்பாக சொல்லி இருக்கிறார்.
இந்த படம் அணைத்து மாணவர்களும்(வயது-12 மேல்) அவர்களது பெற்றோர்களும் மறக்காமல் பார்க்க வேண்டிய தரமான படம் மட்டும் அல்ல கற்று கொள்ள வேண்டிய பாடம்.நீண்ட நாட்களுக்கு( மெரினா-படத்திற்கு) பிறகு கண்ணீர் வரவழைத்த ஜனரஞ்சகமான படம்.
முக்கியமான கதாபாத்திரமாக வரும் - நம்ப வைத்து, பின்னர் பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்,தீய செயல்களுக்கு துணை போகும் மானம்கெட்ட அரசியல்வாதி,இத்தகைய கதாபாத்திரங்கள் இப்பொழுது நாட்டில் பெருகி கிடக்கும் தீய மனிதர்களுக்கு இறுதிகாட்சியில்(கிளைமாக்ஸ்) நடக்கும் சம்பவம் ஒரு சாட்டை அடி.ஒட்டு மொத்தமாக ஒரு உண்மை கதையின் நிழல் சித்திரமாய் ஒரு உன்னதமான படம்.
படத்தில் குறையாக, இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
Post a Comment