''என்னை நீக்க முடியாது!"
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தியாகு நீக்கப்பட்டதாக எழுதி இருந்தோம். இந்நிலையில், தியாகு தமிழ்த் தேசிய விடுதலை இயக்க நிர்வாகிகளுக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் நமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் பார்வைக்கு....
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
பொதுச் செயலாளர்: தியாகு
முக்கிய அறிவிப்பு
சென்னை
16.05.2012
16.05.2012
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் என்னை நீக்கியிருப்பதாக 'அமைப்பாளர்' தோழர் சிவ. காளிதாசன் பெயரில் 13.05.2012 நாளிட்டு மின்னஞ்சல் வழியாக ஒரு கடிதம் எனக்கும் பல தோழர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அமைப்புக் குழு உறுப்பினர்கள் என்ற பெயரில் தோழர்கள் வேலிறையன், கதிர்நிலவன், மோகன்ராசு ஆகியோரும் இக்கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர்.
நான் தனிமனித ஒழுக்கக் கேடுகளால் இயக்கத்திற்கும் தமிழ்த் தேசத்திற்கும் மாறா அவமானத்தைத் தேடித் தந்து விட்டதாகவும், இவ்வொழுங்கீனத்தின் மூலம் தமிழ்ச் சமூகத்திற்குப் பெரும் துரோகம் இழைத்து விட்டதாகவும் இக்கடிதம் குற்றஞ்சாற்றுகிறது.
இந்தக் குற்றச்சாற்றுகளை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் அமைப்பு நெறிகளுக்கு முரணாக மேற்கண்ட தோழர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு செல்லத்தக்கதன்று. பொதுப்பேரவை அல்லது பொதுக்குழுதான் இயக்கத்தின் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கவும், மாற்றவும், நீக்கவும் அதிகாரம் உடையது. தம்மைத் தாமே அமைப்பாளர் என்று அறிவித்துக் கொள்ளும் ஒருவருக்கு இந்த அதிகாரமில்லை.
இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமுன் என்னிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்ற இயற்கை நீதியையும் கூட இத்தோழர்கள் எனக்கு மறுத்துள்ளனர்.
அமைப்புச் சிக்கல்கள் தொடர்பாகத் திருப்பூரில் 2012 மார்ச்சு 31ஆம் நாள் கூடிய சிறப்புப் பேரவையின் முடிவுகளுக்கு முரணாக மேற்படிக் கடிதம் அமைந்துள்ளது. இந்தச் சிறப்புப் பேரவைக்குப் பின் அதன் முடிவுகளை எவ்வகையிலும் மாற்றுவதற்கான அமைப்புமுறை நிகழ்வு ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படி ஒரு கடிதத்தை எழுதிப் பரவலாக அனுப்பியதன் வாயிலாக இயக்கத்தின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் குலைத்துள்ள தோழர்கள் சிவ. காளிதாசன், வேலிறையன், கதிர்நிலவன், மோகன்ராசு ஆகியோர் இயக்கத்தின் உறுப்பினர் பொறுப்பு உட்பட எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்முடிவை எடுப்பது தவிர அமைப்புக்கு வேறு வழியில்லை. இந்தத் தோழர்கள் விரும்பினால் இந்நீக்கத்துக்கு எதிராகப் பொதுப் பேரவைக்கு முறையீடு செய்து கொள்ளலாம். பொதுப் பேரவை கூடும் நாள் விரைவில் அறிவிக்கப்படும். இதற்கிடையில் இந்த நான்கு தோழர்களுடனும் இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எவரும் அரசியல் வகையிலோ அமைப்பு வகையிலோ எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
பொதுச் செயலாளர்
- கும்பல்

+ comments + 2 comments
நண்பர் தியாகு அவர்கள் குடந்தை கல்லூரியில் எனக்கு மிகவும் சீனியர் .அவர் மிக மிக நேர்மையானவர். நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர் .அவர் தகப்பனார் எனக்கு ஆசிரியர் . அவர் தம்பி காலம் சென்ற ஹைகோர்ட் வக்கீல் திரு மணிவாசகம் எண்கள் ஊர் மாப்பிள்ளை.மணிவாச்சகத்தின் புதல்வர் வக்கீல் கருணாகரன் என் பையன் திருச்சி வக்கீல மஞ்சுநாத்தின் உற்ற நண்பர் . தியாகு அவர்களை கருணாகரன் திருமணத்தில் ஜூன் இருபது சந்திக்க வாய்ப்பு உண்டு என்ற எண்ணமே எனக்கு பேருவகை தருகிறது அவரைப்பற்றி ஊடகங்கள் விறு விருப்பு போன்றவை தவறான தகவல் தருவது மிக வேதனை தருகிறது
தியாகு எத்தகைய பாதைகளைக் கடந்து வந்தவர்; கம்பிக்குள் வெளிச்சம் தொடங்கி படைப்பு ரீதியிலான எத்தகைய பங்களிப்புகளைச் செய்தவர்; மக்கள் தொலைக்காட்சி மூலமாக அன்றாட நிகழ்வுகளை எப்படியெல்லாம் தோலுரித்தவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. தனிப்பட்ட வாழ்வில் அவருக்கு நிகழ்ந்திருக்கும் சோகத்தை நினைத்து வருந்துகிறேன். உலகின் சர்வ வல்லமை படைத்த தலைவர்களாக உலா வந்த பலரும் இத்தகைய சோகங்களுக்கு ஆளானவர்கள்தான். வைகோ மீது கூட ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறி, அது பத்திரிக்கைகளில் பெரிதாக வந்ததாக எனக்கு நினைவு இருக்கிறது. தியாகு மிக தைரியமாக இருக்க வேண்டியது இப்பொதுதான்!
Post a Comment