''வைகோ என்கிற வார்த்தையே
என்னை வெற்றிபெற வைக்கும்!"
மனம் திறக்கிறார் சதன்திருமலைக்குமார்
இடைத்தேர்தல் என்றாலே அதில் பெரிய சுவாரஸ்யம் இருக்காது. ஆளும் கட்சி தான் ஜெயிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த கடந்தகால வழக்கம். ஆனாலும், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் சற்றே வித்தியாசத்தோடு களைகட்டி இருக்கிறது. காரணம், சசிகலாவின் பிரிவுக்குப் பிறகு ஜெயலலிதா சந்திக்கும் முதல் தேர்தல் இது; விலைவாசி தொடங்கி பழிவாங்கும் நடவடிக்கைகள் வரை ஆளும் அரசின் அக்கறையற்ற போக்கை சுட்டிக்காட்டி தன் சுதாரிப்பை தி.மு.க. நிரூபிக்க வேண்டிய தேர்தல் இது; கூட்டணியை விட்டுப் பிரிந்து ஆவேசமாக களமிறங்கியிருக்கும் தே.மு.தி.க.வுக்கு தன் சக்தியைக் காட்ட வேண்டிய தேர்தல் இது; கடந்த சட்டமன்றத் தேர்தலை தைரியமாகப் புறக்கணித்த ம.தி.மு.க.வுக்கு மறுமலர்ச்சியை நிலைநாட்ட வேண்டிய தேர்தல் இது.
இதரக் கட்சிகளைக் காட்டிலும் ம.தி.மு.க.வுக்கு இந்தத் தேர்தல் மறுபிரசவத்துக்கு சமமான ஓன்று. சட்டமன்றத் தேர்தல் புறக்கணிப்புக்கு பிறகும் ஒரு கட்சிக்கு இவ்வளவு செல்வாக்கா என கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது திகைக்க வைத்தது ம.தி.மு.க.!
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான ஆவேசம்... முல்லைப் பெரியாறு பிரச்னையில் மக்களை பெரிதாக ஒருங்கிணைத்த வல்லமை... ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், பேரறிவாளன், சாந்தன் மூவரையும் காப்பாற்ற சளைக்காத சட்டப் போராட்டம்... என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பொதுமக்களின் சாட்சியாக சுழன்றடித்த போராட்டங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லை. அத்தனை பாதைகளும் அடைக்கப்பட்ட நீர் எப்படி சிறுதுளையில் சீறியபடி வெளிவருமோ... அதற்கு நிகரானது வைகோவின் சமீபத்திய வேகமும் விவேகமும்!
சங்கரன்கோவில் சாதாரணமாகவே வைகோவுக்கு வலுவான தொகுதி. சொந்த மண் என்கிற வாஞ்சையே வாக்குகளைத் திரட்டிக் கொடுத்துவிடும். 'நல்ல மனிதர்' என்கிற பெயரை எல்லோரிடத்திலும் சம்பாதித்து வைத்திருக்கும் டாக்டர் சதன்திருமலைக்குமார் ம.தி.மு.க.வின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருப்பது போட்டிக்கு வலு சேர்க்கும்.
பிரச்சாரம் பரபரக்கும் சங்கரன்கோவில் தொகுதிக்குள் கால்வைத்து எதிர்ப்பட்ட ஒருவரிடம் பேச்சு கொடுத்தோம். ''பல வருஷமா இங்கே எம்.எல்.ஏ.வா இருந்த கருப்பசாமி செத்துப் போனதால தான் இங்கே இடைத்தேர்தல் நடக்குது. ஆனா, கருப்பசாமியோட குடும்பத்தினர்கூட பம்பரத்துக்கு தான் ஒட்டு போடுவாக. வைகோங்கிற நல்ல மனுஷன் சம்பாதிச்சு வச்சிருக்கிற பேரு அப்புடி..." என்கிறார் அதிரடி ஆரம்பமாக.
''வைகோவின் 18 வருட கால ம.தி.மு.க.வுக்கான உழைப்பு சங்கரன்கோவிலில் அறுவடையாகப் போகிறது" என பலரும் உறுதியாக சொல்லும் நிலையில், ம.தி.மு.க.வின் நம்பிக்கை மிகுந்த வேட்பாளர் சதன் திருமலைக்குமார் அவர்களிடம் 'கும்பல்' பிரத்யேக நேர்காணல் கண்டது. பிரச்சாரம் தீவிரமான நிலையிலும் நமக்கு நேரம் ஒதுக்கி சதன் திருமலைக்குமார் அளித்த விரிவான, விளக்கமான பேட்டி.
கடந்த சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்த நீங்கள் திருச்சியில் நடந்த இடைத்தேர்தலையும் புறக்கணித்தீர்கள். ஆனால், சங்கரன்கோவிலில் மிகுந்த உற்சாகத்தோடு களமிறங்கி இருக்கின்றீர்கள். உங்கள் தலைவரின் சொந்தத் தொகுதி என்பதுதானே இதற்குக் காரணம்?
நிச்சயமாகக் கிடையாது. சொந்தத் தொகுதி என்பது கூடுதல் பலம் மட்டுமே! இந்த ஆட்சி வந்து மிகக் குறுகிய நாட்களிலேயே திருச்சி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதனால் தான் திருச்சியில் போட்டியைத் தவிர்த்தோமே தவிர, பயம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. வைகோ என்கிற தன்னலமற்ற தலைவர் மீது சங்கரன்கோவில் தொகுதி மக்கள் மட்டுமல்ல... மொத்த தமிழகமும் மாசற்ற பாசம் வைத்திருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தின் எந்தத் தொகுதியும் தலைவரின் சொந்தத் தொகுதிதான்.
அ.தி.மு.க. என்கிற அசுர சக்தி... தி.மு.க. என்கிற பாரம்பரிய பலம்பொருந்திய கட்சி... இரண்டையும் எதிர்த்து வெல்வது சாத்தியம்தானா?
தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அ.தி.மு.க - தி.மு.க -வின் கடந்த இருபது ஆண்டு அரசியலைப் பார்த்தால் பல உண்மைகள் புலப்படும். தி.மு.க. வாரிசுகளை பிரகடனப்படுத்துவதற்காக அது செய்யாத சமரசமே கிடையாது. அதுவும் இலங்கையில் இறுதிப்போர் நடைப்பெற்றுக் கொண்டிருக்கையில் காங்கிரசுடன் கூட்டு வைத்து நம் தமிழினம் இடுகாடு ஆகும் வரை வேடிக்கை பார்த்தவர்தான் கருணாநிதி. ஈழத்தில் கருணா எப்படியோ... அந்த கருணாவுக்கு நிகரானவர்தான் இந்த கருணாநிதி. அதனால் பாரம்பரியம் என்கிற பெருமை எல்லாம் இனி எடுபடாது.
அடுத்து அ.தி.மு.க-வின் தலைவி ஜெயலலிதா செய்த சமீபத்திய புரட்சிகளைப் பட்டியலிடுகிறேன். மின்வெட்டைக் குறைக்க எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் தமிழகத்தை இன்றளவும் இருளுக்குள் மூழ்கடித்தது அம்மையாரின் அசாத்திய சாதனை. சமச்சீர் கல்வி, மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம் போன்ற பிரச்சனைகளுக்காக நீதிமன்றம் அவரின் உச்சந்தலையில் ஓங்கி குட்டியபோதும் மண்டையை ஆட்டிக்கொண்டே செய்த தவறைத் திரும்பத் திரும்ப செய்த பெருமை அம்மையாருக்கு உண்டு.
தானே புயலுக்கு பலியான கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை பார்வையிட ஒரு சில அமைச்சர்களை அனுப்பிய அம்மையார், சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு மட்டும் 32 அமைச்சர்களை அனுப்பி இருக்கிறார். மக்கள் நலனில் அம்மையார் எத்தகைய அக்கறை கொண்டவர் என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா என்ன?
ம.தி.மு.க. என்கிற இயக்கம் மக்கள் நலனில் எத்தகைய அக்கறையோடும், தன்னலமற்ற போர்க்குணத்தோடும் செயல்படுகிறது என்பது பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால், ஆளும் கட்சி என்கிற பலத்துக்கு நாங்கள் பயப்பட வேண்டியதில்லை.
கடந்த முப்பது வருடங்களாக அ.தி.மு.க-வின் கோட்டையாக இருக்கிறதே சங்கரன் கோவில்?
சங்கரன்கோவில் தேர்தல் வரலாற்றில் 1980 -89 ஆண்டு வரை எம்.ஜி.ஆர் என்ற மக்கள் தலைவரின் பேரன்புக்கும் தனி மனித ஒழுக்கத்திற்கும் பிரதிபலனாக அவர் கைகாட்டும் எந்த ஒரு வேட்பாளரையும் வெற்றி வாகை சூடச் செய்தனர் சங்கரன்கோவில் மக்கள். அதனை தொடர்ந்து 1989 - இல் தி.மு.க. கைப்பற்றியது.
1991 -இல் ராஜீவ் படுகொலையில் ஏற்பட்ட அலையில் அ.தி.மு.க. வென்றது.
1996 -இல் ம.தி.மு.க தனியே களம் இறங்கி 30,000 ஓட்டுக்கள் வாங்கியதனால். அ.தி.மு.க-வின் வெற்றி எளிதானது. அதேபோல் 2001 -இல் அ.தி.மு.க - காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததாலும், 2006 -இல் ம.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டதாலும், அ.தி.மு.க-வின் கோட்டையை போன்ற மாயை உருவாகி விட்டது. இந்த தேர்தலில் அந்த மாயை நிச்சயம் உடைபடும்.
அ.தி.மு.க-வின் கிரைண்டர், மிக்சி, ஃபேனுக்கு முன்னால் உங்கள் புள்ளி விவரம் எல்லாம் எடுபடுமா?
தி.மு.க -வை திருமங்கலத்தில் ஜெயிக்க வைத்த அதே மக்கள் மதுரையை விட்டே அவர்களை விரட்டவில்லையா? இலவசங்களின் இழிநிலை குறித்து வாக்காளர்கள் உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். வாக்களிப்பதை தங்கள் கடமையாக நினைக்காமல் கௌரவமாக உணர தொடங்கியுள்ளனர். இலவசங்களை விரட்டி அடிக்கும் வித்தியாசத்தின் துவக்கமாக சங்கரன்கோவில் விளங்கும்!
ம.தி.மு.க - விற்கு இது மிக நெருக்கடியான நேரம்... இததகைய சூழலில் வைகோ அவர்கள் உங்களை எத்தகைய நம்பிக்கையோடு களமிறக்கி இருக்கிறார்?
என்னைவிட தகுதியான வேட்பாளர்கள் நிறைய பேர் இருந்தும், என்னை அவர் நிறுத்தியிருக்கிறார் என்றால், அவர் என்மீது வைத்திருக்கும் பேரன்பையும், பெருமதிப்பையும் புரிந்துகொள்ள முடிகிறது.
1991 -இல் தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க வேட்பாளராக என்னை களம் இறக்கினார்.
என்னை எம்.பி-யாக்கி பார்ப்பதில் என்னைவிட அதிக ஆர்வமாய் இருந்தவர் அவர். ஆனால், ராஜீவ் படுகொலையால் அது சாத்தியமில்லாம் போய்விட்டது. அதற்காக என்னைவிட மிகவும் வருந்தியவரும் அவரே! கடந்த சட்டமன்ற தேர்தலில் வாசுதேவநல்லூர் தொகுதிக்கு என்னை வேட்பாளராக்கி மகிழ்ந்தார்.
அவருடைய நம்பிக்கையை காக்கும் விதமாக மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அதேபோல் வைகோ என்கிற மகத்தான மனிதருக்காக சங்கரன்கோவில் மக்கள் என்னை நிச்சயம் வெற்றிபெற வைப்பார்கள். வைகோ என்கிற வார்த்தைக்கு இங்கே இருக்கும் வல்லமை அசாத்தியமானது. அதுவே என்னை வெற்றி வேட்பாளராக மாற்றும்!
தேர்தல் புறக்கணிப்புக்கு முன்பும் பின்பும் வைகோ அவர்களின் இமேஜ் எப்படியிருக்கிறது?
கடந்த வருடம் தலைவர் போராடிய தமிழ் சமூக பிரச்சனைகளுக்காக 'ஆனந்த விகடன் ' இதழ் சிறந்த 10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவராக வைகோ அவர்களையும் தேர்ந்தெடுத்து கௌரவபடுத்தியிருக்கிறது.
தலைவர் இந்த சமூகத்தின் மேல் கொண்டிருக்கும் பற்றுக்கும், காதலுக்கும் கிடைத்த பரிசு இது.
தேர்தல் மூலமாக நிர்ணயம் செய்யப்படும் மரியாதை எங்களுக்கு தேவையற்றது. பதவி இருக்கிறதோ இல்லையோ... மக்கள் நலனுக்கான போராட்டங்களில் முதல் ஆளாக முன்னிற்கிற தகுதியும் வல்லமையும் தலைவர் வைகோவுக்கு மட்டுமே உண்டு. அதனால் அவருடைய இமேஜ் எப்போதுமே ஏறுமுகம்தான்!
சமூக பிரச்சனையில் வெற்றி காணும் நீங்கள் ஏன் தேர்தலில் மக்களின் பேரபிமானத்தைப் பெறமுடிவதில்லை?
மக்கள் நலப் போராட்டங்களில் ஈடுபடும்போது ஏற்படும் எழுச்சியை கட்சி வளர்ச்சிக்கும் தேர்தல் வெற்றிக்கும் பயன்படுத்த தலைவர் ஒருபோதும் நினைத்ததில்லை. ஒவ்வொரு குடிமகனும் ஆழச் சிந்தித்து மிக நிதானமாக தன ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் தலைவரின் எண்ணமாக இருக்குமே தவிர, மக்களுக்கு நாம் ஓன்று செய்து விட்டோம்... அதற்காக மக்கள் நமக்கு ஏதாவது செய்வார்கள் என எதையும் எதிர்பார்க்கிற எண்ணம் தலைவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை.
நல்ல வழியில் போராடும்போது வெற்றியை அடைய சிறிது தாமதம் வரத்தான் செய்யும். அதற்கு இந்திய சுதந்திர போராட்டம் தொடங்கி பர்மாவில் இன்று ஏற்பட்ட மாற்றங்கள் வரை ஏராளமான சாட்சிகள் இருக்கின்றன.
யார் முதல் இடத்தை பிடிப்பது என்கிற போட்டியைக் காட்டிலும் இரண்டாம் இடத்திற்கே அதிக போட்டி நிலவுகிறதாமே?
முதல் இடம் என்கிற சக்கரம் எங்களின் மூளைக்குள் உக்கிரமாக சுற்றுகிறது. இரண்டாம் இடம் என்கிற எண்ணம் இதுவரை எங்களுக்கு தோன்றவே இல்லை.
32 அமைச்சர்களின் முற்றுகை போராட்டத்தை எப்படி சமாளிக்க போறீங்க?
இத்தனை அமைச்சர்கள் போராட வேண்டிய சூழல் வந்ததே எங்களுக்கு பெரிய வெற்றிதானே... எங்களுக்கான மக்கள் பலமே அனைத்தையும் சமாளிக்க வைக்கும்!
உங்கள் பரப்புரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
இந்த தொகுதி முழுக்க 10000 நெசவாள குடும்பங்கள் உள்ளன.மின்வெட்டால் அவர்களின் வாழ்க்கை முடங்கிய நிலையில் உள்ளது. முதலில் 1 மணிநேரம், 2 மணிநேரம் என துவங்கிய மின்வெட்டு இன்றோ 1 மணிநேரம்,2 மணிநேரமாவது நிற்காமல் வந்தாலே போதும் என்கிற நிலையாகி விட்டது. பெரும் பிரச்சனையாக இருக்கும் மின்வெட்டின் மையப்புள்ளி 2001 -ம் ஆண்டு ஆட்சி செய்த அ.தி.மு.க - வில் இருந்துதான் ஆரம்பித்தது. 2006 -இல் ஆட்சி செய்த தி.மு.க. மின்வெட்டு பிரச்சனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை மக்கள் மன்றத்திலே வெளிச்சப்படுத்துவோம் .
விலைவாசி உயர்வு தொடங்கி சட்டம் ஒழுங்கு குளறுபடி வரையிலான இந்த ஆட்சியின் அவலங்கள் அனைத்தையும் பட்டியலிடுவோம். முருகன்,சாந் தன், பேரறிவாளன் தூக்கு கயிற்றை முற்றிலுமாக அறுத்தல், சகோதரி நளினியை வெளியே கொண்டு வருதல், முல்லை பெரியாறு,கூடங்குளம், காவிரி, பாலாறு போன்ற வாழ்வாதார பிரச்சனைகள் பற்றி எடுத்துக் கூறுதல் என மக்களுக்கு அனைத்து விதத்திலும் புரியும்படி பிரச்சாரம் செய்து வருகிறோம்.
இந்தத் தொகுதியில் முக்குலத்து மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள். ம.நடராஜன் கைது விவகாரத்தால் அவர்கள் ஆளும் அரசு மீது கோபத்திலிருப்பதாக சொல்லப்படுகிறதே?

உண்மைதான்... முக்குலத்து மக்கள் மிகவும் கொந்தளிபோடுதான் அதனை பார்கிறார்கள்.ம.நடராஜன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட போது மிகுந்த மரியாதைக் குறைவோடு நடத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இத்தகைய அநாகரிகங்கள் மன்னிக்க முடியாதவை. யாருக்கு நிகழ்ந்தாலும் கண்டிக்கத்தக்கவை.எனக்கு தெரிந்து எம்.ஜி.ஆர்.க்கு பிறகு அ.தி.மு.க-வின்,வளர்ச்சிக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ச்சிக்கும் நடராஜனின் பங்கே அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அ.தி.மு.க-வில் இனப்பற்றும், மொழிப்பற்றும், ஈழ உணர்வும் உள்ள ஒரு சிலரில் முதன்மையானவரும் எம்.என் -தான். அவருக்குத்தான் இன்று இந்த நிலைமை உருவாகி இருக்கிறது. இதனை மக்கள் தங்களுக்கு நேர்ந்ததாகவே பார்க்கிறார்கள்.
சங்கரன்கோவிலுக்கு செய்யப்போகும் சாதனையாக நீங்கள் முன்வைக்கும் திட்டங்கள் என்னென்ன?

இந்த நகரத்தில் நானும் எனது மனைவியும் மருத்துவ தொழில் செய்து வருகிறோம். ஓரளவுக்கு நயமான,தரமான மருத்துவத்தை கொடுக்கிறோம். என் மகளும் தற்போது மருத்துவ படிப்பை முடித்து விட்டாள். என் மகளுக்கு நான் கொடுத்த கல்வியைப்போல் இங்குள்ள அனைத்து குழைந்தைகளும் கல்விப்பெரும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்வேன். அரசு கல்லூரி ஒன்று கூட இந்த நகரத்தில் இல்லை. வெகு விரைவில் அரசு கல்லூரியை கொண்டு வர வழிவகை செய்வேன்.
அரசு மருத்துவமனை எந்த கட்டமைப்பும் இன்றி இயங்கி வருகிறது. அதனை உலக தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இந்த நேரத்தில் நான் பயின்ற மருத்துவத்தின் தந்தை என போற்றப்படும் ஹியுபோ ஹிரோடஸ் சொன்ன வார்த்தைகளையே வாக்காளர்களின் முன்னால் வைக்கிறேன்..
எனக்கு கிரீடம் தேவையில்லை
எனக்கு மறுபடியும் பிறக்க விருப்பமில்லை
எனது விருப்பம் எல்லாமே என் அருகில் உள்ளவர்களின்
துன்பங்களை போக்குவது மட்டுமே !
தலைவனின் தன்மை பின்பற்றும் தகுதிமிகுந்த தொண்டராக நேர்காணலை நிறைவு செய்கிறார் சதன் திருமலைக்குமார்!
நேர்காணல்: சதிபாரதி







+ comments + 8 comments
ஆளும்கட்சி எதிர்க்கட்சி என பல வேட்பாளர்கள் சங்கரன்கோவிலில் போட்டியிட்டாலும், மிக நல்ல மனிதரான சதன் திருமலை குமாரை பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கும் கும்பல் இணையதளத்துக்கு நன்றி. மதிமுக பொதுச் செயலாளர் வை.கோ. அவர்களின் உழைப்புக்கும் கடமைக்கும் உரிய பலனை சங்கரன்கோவில் நிச்சயம் கொடுக்கும்.
பிரின்ட் மீடியாக்கள் நியாயமான தலைவர்களை தொடர்ந்து புறக்கணிக்கும் நிலையில், இணையதளங்கள் தான் தலைவர் வை.கோ.வுக்கு ஆதரவாக நிற்கின்றன. விஞ்ஞானம் நாளுக்கு நாள் வலரும் நிலையில் நாளைய தமிழகம் நிச்சயம் தலைவர் வை.கோ.வின் கைகளுக்கு வரும் என்பதில் சந்தேகமே இல்லை. நியாயமானவர்களுக்குத் துணை நிற்கும் கும்பல் இணையதளத்தை வாழ்த்துகிறேன். வெல்லட்டும் ம.தி.மு.க.
சிறப்பான பேட்டி... சதன் திருமலைகுமார் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். மதிமுக தலைவர் வை.கோ. அவருடைய நல்லெண்ணத்தால் நிச்சயம் சதனை வெற்றி பெற வைப்பார். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் வை.கோ.
மிக விரிவான பேட்டியை எடுத்து வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது கும்பல் இணையதளம். மதிமுக மட்டும் தான் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளில் தரத்தோடும் தன்மானத்தோடும் செயல்படுகிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்க மட்டுமல்ல... வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் கட்சியாகவும் மதிமுக விளங்கும். அதற்கு முன்னோடியாக சங்கரன்கோயில் தேர்தல் முடிவி அமையும்.
நீங்கள் சொல்வது போல் இந்தத் தேர்தல் வை.கோ.வுக்கு மிக முக்கியமான தேர்தல். இரண்டாம் இடத்தைப் பிடிக்க முடியாவிட்டாலும் மூன்றாவது இடத்தையாவது ம.தி.மு.க பிடிக்க வேண்டும். நான்காம் இடத்துக்கு ம.தி.மு.க தள்ளப்பாட்டால், அதைவிட அவமானம் வேறு தேவையில்லை. இதை உணர்ந்து ம.தி.மு.கவினர் உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டும்.
குடிக்கிறாரோ வேட்பாளரை பிடித்துப்போட்டு அடிக்கிறாரோ... ஆனால் விஜயகாந்த் அங்கே தீவிரமாக உழைக்கிறார். கட்சி நிர்வாகிகளை தினமும் போனில் பிடித்து காய்ச்சி எடுக்கிறார். இதே வேகத்தில் அவர் போகிறாரென்றால் நிச்சயம் இரண்டாம் இடத்துக்கு வந்து விடுவார். அதற்கு இடம்ம்கொடுக்காத வண்ணம் ம.தி.மு.கவினர் செயல்பட வேண்டும்.
vaazhka vaiko... valarga avarutaiya pukazh! congrats kumpal!
குமுதம், விகடன், குங்குமம் போன்ற இதழ்களில் கூட இப்படியொரு பேட்டியை படித்ததில்லை. நல்ல கேள்விகள்... அதற்கு சதன் திருமலைக்குமார் அளித்த பதில்களும் சூப்பர். இதேபோல் இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
நல்ல கேள்விகள்.... நல்ல பதில்கலள்..... சதிபாரதி வாழ்க... என் தலைவன் தான் நாளைய முதல்வன். இது ந்டடக்கும்...
Post a Comment