பசுபதி பாண்டியன் படுகொலையின் எதிரொலி
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் பசுபதி பாண்டியன்(52), திண்டுக்கல் அருகே அவரது வீட்டின் முன்பு நேற்றிரவு மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தால் மாவட்டம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது. பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பசுபதிபாண்டியனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் அலங்கார்தட்டு கிராமம். 12 ஆண்டுக்கு முன்பு, திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி இபி காலனிக்கு குடிபெயர்ந்தார்.
நேற்று இரவு 8.30 மணியளவில், நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பு, மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டு கிடந்தார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை, அருகே இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பசுபதி பாண்டியன் பரிதாபமாக இறந்தார். பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட சம்பவம், திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டவுன் டிஎஸ்பி சுருளிராசு தலைமையில் ஏராளமான போலீசார் அரசு மருத்துவமனை முன்பும், முக்கிய இடங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தென் மாவட்டத்தில் பதற்றம்:
பசுபதி பாண்டியன் படுகொலையின் எதிரொலியாக தமிழ்நாட்டின் மதுரை, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவரது ஆதரவாளர்கள் நேற்று வேதாரண்யத்தில் பேருந்துகளின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருவேறு சம்பவங்களில் அரசு பேருந்தின் ஓட்டுநர் 3 பேர், நடத்துனர் ஒருவர், பயணி ஒருவர் ஆகியோருக்கு அரிவாள் வெட்டும் விழுந்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுதும் வண்டிகள் ஓடவில்லை.
இதையடுத்து இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொடர் வண்டி நிலையத்தில் ராமேஸ்வரம் தொடர் வண்டி மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டு அங்கிருந்து இரயில் புறப்பட்டு சென்றது. இதனையடுத்து தூத்துக்குடியில் இரண்டு அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் பஸ் கண்ணாடிகள் நொறுங்கின. இதனை தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே மாவட்டம் முழுவதும் பஸ்கள் ஓடவில்லை. தனியார் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் கிராமங்களுக்கும், வெளியூர்களுக்கும் செல்ல வேண்டிய பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். திருநெல்வேலியிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை. பாண்டியன் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக மதுரை, திருநெல்வேலியில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
Labels:
பசுபதி பாண்டியன்,
படுகொலையின் எதிரொலி

Post a Comment