சும்மாவா இருப்பார் சு.சாமி?
சாதாரண காலத்திலேயே அதிரடி அக்கப்போர் செய்வது சுப்ரமணிய சாமியின் வழக்கம். தமிழக அரசியல் அரங்கே பரபரத்துக் கிடக்கும் இந்த நேரத்தில் எப்படி வாயைக் கட்டியபடி அமைதி காக்கிறார் சு.சாமி?
சசிகலாவின் பிரிவு, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிராமணர்கள் திரண்டு நிற்பது, நக்கீரன் மாட்டுக்கறி மல்லுக்கட்டு... என தமிழகமே தணலாக கொதித்துக் கிடக்கிறது. இந்த நேரத்தில் நம்ம பரபரப்பு மன்னன் என்ன செய்கிறார்?
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மன்மோகன் சிங்குக்கு எதிராக ஆரம்பத்தில் சீறிய சு.சாமி சில காலத்திலேயே அப்படியே அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். பின்னர் ப.சிதம்பரம் மீது பாய்ச்சல் காட்டினார். ஆ.ராசாவை குறுக்கு விசாரணை செய்யப் போவதாக சபதம் போட்டார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சோனியா காந்தியின் சகோதரிகளுக்கு பங்கு இருப்பதை அம்பலமாக்குவேன் என்றார். எல்லாம் சொன்னதோடு சரி... அப்புறமாய் சுருட்டிவைத்த பாயைப் போல் அந்த விவகாரங்களில் தலையிடாமல் அமைதியாகி விட்டார் சு.சாமி.
என்னதான் உலக அரசியலையே உள்ளங்கையில் வைத்திருந்தாலும், சு.சாமியின் ஆர்வம் முழுக்க தமிழகம் மீதுதான். கடந்த ஆட்சியில் கருணாநிதிக்கு எதிராக கடுமையாக பேசிய சு.சாமி, அதை வைத்தே அ.தி.மு.க. கூட்டணியில் ஐந்து சீட் கேட்டார். 'அட போய்யா... சும்மா காமடி பண்ணிகிட்டு' என கார்டன் வட்டாரம் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் புறந்தள்ளியது. உடனே, 'இழுபறி அரசு தான் அமையும். அது, இந்தம்மையாருக்கு தக்க பாடத்தைக் கொடுக்கும்' என அனுமானம் வெளியிட்டார் சு.சாமி. ஆனால், ஜெ., அமோக வித்தியாசத்தில் வெல்ல... சு.சாமி கணிப்பு சப்பென போனது. வாழ்த்து சொல்ல வாய்ப்பு கேட்டார். மறுபடியும், 'அட போய்யா'!
உடனே சு.சாமிக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது. தி.மு.க. புள்ளிகள் சிலரை பட்டவர்த்தனமாக சந்தித்தார். அதை பிரபல பத்திரிகைகளில் வரவைத்தும் ஜெயாவை மிரட்டிப் பார்த்தார் சாமி. ஆனால், அந்த அம்மையார் அவரை சட்டை செய்யவே இல்லை.
அதனால், சாமிக்கு செம கடுப்பு. 'அந்தம்மாவுக்கு சீக்கிரமே பாடம் கற்பிக்கிறேன்' என சபதம் போட்டார். இந்த இடைவெளியில் தான் சசிகலா உறவுகளை வெளியே அனுப்பி விட்டு , 'நான் வாழ்வதே மக்களுக்காகத்தான்' என திடீர் அவதாரமாக ஜெ. அறிவித்தார். இதற்கு வாழ்த்து சொல்ல சு.சாமி அணுகியபோதும் கார்டன் வட்டாரம் மௌனம் கலைக்கவில்லை.
இந்த அளவுக்கு அ.தி.மு.க. , தி.மு.க. என இரு கட்சிகளிடமும் கேட்ட பெயர் எடுத்ததால், சாமியால் தமிழகத்தில் தீவிர அரசியலை செய்ய முடியவில்லை. நக்கீரனின் மாட்டுக் கறி மேட்டர் அகில இந்திய லாபி எனச் சொல்லி , கார்டனுக்குள் மீண்டும் கால் வைக்க நினைக்கிறார் சாமி. ஆனால், அவருக்கு முன்னரே அங்கு இருக்கும் பிராமண புள்ளிகளும் சாமியை நெருங்க விடாதபடி தடுக்கிறார்களாம்.
விரைவில் தமிழகம் வரவிருக்கும் சு.சாமி அதிரடியான குண்டுகளை மீடியாக்களிடம் அள்ளி வீச தயாராகி வருகிறார். அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு அடிபோடும் விதமாக சுவாமி சில விஷயங்களை சீக்கிரமே மேற்கொள்ள இருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவை டெல்லியின் உச்ச புள்ளியாக மாற்றிக் காட்ட இருப்பதாகவும் கார்டனுக்கு நியூஸ் கசிந்த வண்ணம் இருக்கிறது.
பார்க்கலாம்... சாமியின் அடுத்த ஆடுகளத்தை!
- kumbal





Post a Comment