''என் தந்தைக்காக சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன்!" விஜய் திடீர் அறிவிப்பு
தயவுசெய்து மன்னிக்கவும்... இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகும் என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது அல்லவா?! ஆனால், தயாரிப்பாளர்களின் வேதனையை சொல்லிச் சொல்லி கண்ணீர் விடுகிற தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனிடம் சம்பளத்தை குறைக்கச் சொல்லி வலியுறுத்தலாமே...
தினக்கூலிகளை போல அன்றாட வாழ்க்கையைக் கழிக்க அல்லாடிவரும் பெப்சி தொழிலாளர்கள் மூன்று சதவீத ஊதிய உயர்வை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு நியாயமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தயாரிப்பாளர்கள் சங்கம், சம்பள உயர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை... பிடிவாதம் பிடித்தால் நாங்கள் வெளிமாநில தொழிலாளர்களை வைத்து ஷூட்டிங் நடத்துவோம் என அறிவித்தது. அதனை இயக்குனர் சேரன் உள்ளிட்ட சிலர் ஆதரித்தார்கள். பெப்சி செயலாளர் சிவாவை கண்டித்தார்கள். பெப்சிக்கு ஆதரவாக இருக்கும் இயக்குனர் அமீரை எச்சரித்தார்கள்.
'பிரச்னை எல்லை மீறிப்போனால் நான் முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுவேன்' என இப்போது மிரட்டத் தொடங்கி இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். ஏதோ, இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதே இவர்தான் என்பதைப் போல தொடர்ந்து தொட்டதற்கும் முதல்வர் பெயரைப் பயன்படுத்தி வருகிறார் எஸ்.ஏ.சி. சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களை நினைத்து இவர் உண்மையாகவே கவலைப்படுபவராக இருந்தால், தன் மகன் விஜயை சின்ன பட்ஜெட் படம் ஒன்றில் நடிக்க வைத்து சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை வாழ வைக்க வேண்டியதுதானே... தயாரிப்பாளர்களின் நலன் கருதி விஜய் ஒருவர் சம்பளத்தைக் குறைக்க முன்வந்தால், ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் சம்பள குறைப்பை அறிவிக்க வேண்டிய கட்டாயம் வருமே... விஜய் நடிக்கும் படத்தால் தான் எந்த புண்ணியமும் இல்லை... அவர் எடுக்கிற இந்த முடிவாவது புண்ணியமாக போகட்டுமே...
தன்னை கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவராகக் காட்டிக் கொள்ளும் எஸ்.ஏ.சந்திரசேகர், இப்படி தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் அக்கிரமத்தை செய்யலாமா? லைட்மேன்கள் வாழ்வில் இதுகாலம் வரை என்ன உயர்வு ஏற்பட்டு இருக்கிறது என்பது இவருக்குத் தெரியாதா? சம்பளம் இப்போதே அதிகம் என எஸ்.ஏ.சி சொல்கிறாரே... எங்களுக்கு மாதத்தில் முப்பது நாட்களும் வேலை கொடுக்கும் தயாரிப்பாளர்கள் யார் என்பதையும் நீங்களே சொல்லுங்கள். அஞ்சோ பத்தோ நாட்களில் வேலை பார்த்து, அதனை வைத்து வாடகை, படிப்பு, வைத்தியம் என எங்களின் நாட்களை நாங்கள் நடத்துவதற்குள் எவ்வளவு கஷ்டங்களை கடக்கிறோம் என்பது எஸ்.ஏ.சந்திரசேகருக்கு தெரியுமா?
கோடிக்கணக்கில் கருப்பு பணத்தைக் குவித்து வைத்திருப்பவர்களுக்கு எங்களின் அவஸ்தைகள் ஒருபோதும் புரியாது. ஆனால், நாங்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினால், உங்களின் வீடு வாசல்கள் என்னாகும் என்பதை மட்டும் ஒருகணம் நினைத்துப் பாருங்கள். நசுக்கப்பட்ட தொழிலாளர்கள்தான் உலகளாவிய எழுச்சிக்கு வித்திட்டவர்கள். அத்தகைய எழுச்சிக்கு எங்களை நீங்களே ஆளாக்கி விடாதீர்கள்!
-மனோன்மணியன்
Labels:
இளைய தளபதி விஜய்,
கும்பல்,
சினிமா,
தமிழகம்,
பெப்சி




+ comments + 1 comments
அண்ணா... வணக்கங்கங்ணா... நீங்க சம்பளத்தையெல்லாம் குறைக்க வேண்டும்... பஞ்ச் டயலாக் பேசாம ஒரு நல்ல படத்துல நடிச்சுக்காட்டுங்கண்ணா... அது போதும்கண்ணா...
Post a Comment