கள்ளர் லாபி போனது... ஓடிஸா லாபி வந்தது!
மன்னார்குடி கும்பல் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டு தமிழகமே நிம்மதி பெருமூச்சில் திளைக்கிறது. ஆனால், அதற்குள் அடுத்த லாபி தமிழகத்தை ஆட்டுவிக்கத் தொடங்கி விட்டதாக பரபரப்பு... ஆம்... அடுத்து வந்திருப்பது ஓடிஸா லாபி. உளவுத்துறையின் ஐ,ஜி.யாக தற்போது நியமிக்கப்பட்டு இருப்பவர் அம்ரேஷ் பூஜாரி. இவர் ஓடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரை உளவுத்துறைக்கு கொண்டு வந்ததே தற்போதைய தலைமைச் செயலாளரான தேவேந்திரநாத் சாரங்கி தான் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
ஓடிஸா மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரநாத் சாரங்கி தன் மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே முக்கியத்துவம் வழங்குவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது. உள்துறை செயலாளர் ரமேஷ் ராம் மிஸ்ரா , சென்னை கமிஷனர் திரிபாதி என முக்கியப் பொறுப்பில் இருக்கும் பலரும் ஓடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். இப்போது உளவுத்துறைக்கும் ஓடிஸா மாநிலத்தை சேர்ந்தவரே ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதை வைத்துதான் ஓடிஸா லாபி தான் இப்போது ஒர்க் அவுட் ஆவதாக சொல்கிறார்கள்.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், இங்கே காரியம் சாதிக்க நினைக்கும் பலரும் இப்போது ஓடிஸா மாநிலத்துக்கு படையெடுக்க ஆரம்பித்து இருப்பதுதான். சாரங்கியின் உறவினர் யார், மிஸ்ராவின் உறவினர்கள் யார் என்கிற தேடுதலையே நம் ஆட்கள் அங்கே நடத்தத் தொடங்கி விட்டார்கள்.
இதுகாலம் வரை எந்த காரியத்தை சாதிக்கவும் மன்னார்குடியை நோக்கி ஓடியவர்கள் இப்போது ஓடிஸாவை நோக்கி ஓட ஆரம்பித்து இருக்கிறார்கள்.'எண்ணெய் சூடு தாங்கலைன்னு எரிகிற தீயில் குதிச்ச கதை மாதிரி இல்ல இருக்கு' என நடுநிலையான அதிகாரிகள் இப்போதே புலம்பத் தொடங்கிவிட்டார்கள்.
அதே நேரம் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு இருக்கும் அம்ரேஷ் பூஜாரிக்கு ஆதரவான குரல்களும் கேட்கின்றன. தஞ்சாவூர், கோவை என தமிழகத்தின் பல இடங்களிலும் பணியாற்றிய அம்ரேஷ் தமிழர்களின் சார்பானவராகவே இருப்பார் என்கிறார்கள் அவரோடு பணியாற்றிய அதிகாரிகள் சிலர்.
- எம்.ஆர்.ராதா
Labels:
தமிழகம்


Post a Comment