துரத்தப்பட்டவர்களும் துன்பப்பட்டவர்களும் சந்திப்பது சகஜம் தானே... சசிகலாவும் கனிமொழியும் சந்தித்தால்..? நம் கடிவாளம் அற்ற கற்பனை விளையாட்டு இங்கே...
சசிகலா: கனி தங்கச்சி... நான்தான் கார்டன் வீட்டு கலா வந்திருக்கேன். கதவத் தெறம்மா...
கனிமொழி: ஈனஸ்வரத்துல பாட்டு பாடுறப்பவே பஞ்சரான பார்டிதான் வராங்கன்னு தெரியுது. நீங்க சத்தம் போட்டு பேசாம சைலண்டா வாங்க... உங்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது தெரிஞ்சா, எங்க வீட்லயும் அப்புறம் கஞ்சா முளைச்சிடும். திகார்ல அனுபவிச்ச துயரமே இந்த தலைமுறை வரைக்கும் தாங்கும்... நீங்க புழலுக்கும் அடி போட்டுடாதீங்க புண்ணியவதி...
சசிகலா: ஏம்மா இப்புடி சலிச்சுக்குற? நீ டெய்லி தினமலர் படிக்கிறதை நிப்பாட்டு... அப்பதான் என் மேல உனக்கு நம்பிக்கை வரும். நான் அடைக்கலம் தேடி உன்கிட்ட வரலை... ஆறுதல் தேடி வந்திருக்கேன்.
கனிமொழி: ஆயிரம் வைரமுத்தும் ஐயாயிரம் வாலியும் சேர்ந்து வந்து ஆறுதல் சொன்னாலும், தேத்த முடியாத அளவுக்கு நானே நொந்து கெடக்குறேன். இதுல உங்களுக்கு எங்கே நான் ஆறுதல் சொல்றது? எங்க அப்பா எழுதிய நெஞ்சுக்கு நீதியில நாலு பக்கங்களை கிழிச்சு தாரேன்... வேணும்னா மனப்பாடம் பண்ணி மனச தேத்திக்குங்க.
சசிகலா: கனியை நம்பினோர் கைவிடப்படார்னு ஒருத்தர் சொன்னதை நம்பி உன்னைய பார்க்க வந்தேன். நீ என்னடான்னா விக்காம கெடக்குற நெஞ்சுக்கு நீதிய என் தலையில ஏத்திவிடப் பாக்குற..?
கனிமொழி: வேற எதுக்கு வந்தீங்க? படக்குன்னு சொல்லுங்க... நான் டெல்லிக்கு கையெழுத்து போடப் போவணும்.
சசிகலா: சலிச்சுக்காம கேளு கனி... அக்கா என்னைய இவ்வளவு சீக்கிரத்தில வெளிய அனுப்புவாங்கன்னு நான் நெனச்சுக்கூட பார்க்கலை. இந்த நேரத்தில என்னையவிட அனுபவம் வாய்ஞ்ச நீதான் எனக்கு உதவனும்.
கனிமொழி: உதவுறதுக்கு ஆளு இல்லாமதான் நானே அக்கடான்னு உக்காந்து இருக்கேன். இதுல நீங்க வேற...
சசிகலா: அப்புடி படக்குன்னு கைய விரிச்சுடாதே கனி... டெல்லியில யாரோ உனக்குத் தெரிஞ்ச ஆண்டி ஒருத்தங்க இருப்பாங்களே... அவங்க மூலமாதான் நீ எனக்கு உதவனும்...
கனிமொழி: யாரை சொல்றிங்க?
சசிகலா: எதோ ரேடியோவோ என்னவோன்னு சொல்வாகளே... இங்கிலிபிசு படிக்காத எனக்கு அவங்க பெயரை எல்லாம் எப்படிம்மா சொல்ல முடியும். இங்கிளிபிசுல நாலு வார்த்தை நறுக்குன்னு பேசத் தெரியாம பெங்களுரு கோர்ட்ல நான் படுற பாட்டத்தான் ஊரே பார்க்குதே...
கனிமொழி: யாரு, நீரா ராடியாவ சொல்றிங்களா?
சசிகலா: கரெக்டா சொன்னம்மா அதே ஆண்டிதான்...
கனிமொழி: அந்த ஆண்டியாலதான் நாங்க அத்தனை பேருமே ஆண்டியாகி நிக்கிறோம்... இப்போ நீங்க வேறயா?
சசிகலா: இல்ல கனி, அந்த ஆன்டிய பிடிச்சா ஆட்சியையே பிடிச்சிரலாம்னு என் ஊட்டுக்காரர்தான் சொல்லி அனுப்பினாரு...
கனிமொழி: அவரால மனோரமா ஆச்சியக்கூட புடிக்க முடியாது. அவர் சொன்னாருன்னு நீங்களும் அதை நம்புரிங்களே... போங்கக்க... போயி சொந்த பந்தங்களை பள்ளிக்குடத்துல சேர்த்து படிக்க வையுங்க..
சசிகலா: சொந்த பந்தங்கலாலதான நானே இந்த கதியாகி நிக்கிறேன்... இதுல, அவனுகளை படிக்க வேற வைக்கணுமா? அவனுக எல்லாரையும் தானே புயல்ல புடிச்சு தள்ளிட்டுதானே நானே இங்கே வந்திருக்கேன்.
கனிமொழி: (மனதுக்குள்) தானே புயல்ல இவங்க மட்டும் எப்புடி தப்புனாங்களோ?


Post a Comment