Latest Movie :

அமீருக்கு செக் வைக்கும் சேரன்!


பெப்சி தொழிலாளர்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குமான மோதல் இயக்குனர்கள் சேரனுக்கும் அமீருக்குமான மோதலாக மாறி விட்டது. பெப்சிக்கு ஆதரவாகப் பேசிய அமீரை தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் கடுமையாகக் காய்ச்சி எடுத்தார் சேரன். அடுத்தபடியாய் இயக்குனர் சங்க நிர்வாகிகளை ஒன்று திரட்டும் முயற்சியிலும் தீவிரமாக இருக்கும் சேரன், பொதுக்குழுவைக் கூட்டி, அமீரை இயக்குனர்கள் சங்க செயலாளர் பதவியில் இருந்து நீக்கவும் தயாராகி வருகிறார். பெரும்பான்மையான உறுப்பினர்கள் அமீருக்கு எதிராக வாக்களித்தால், அவரை நீக்குவது சாத்தியம்தான். ஆனால், இன்றைய நிலையில் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது.


சேரனின் சிஷ்யப்பிள்ளையாக இருக்கும் சமுத்திரகனி இயக்குனர் சங்க துணைத் தலைவராக இருக்கிறார். சேரனும் அதே பதவியில் தான் இருக்கிறார். ஆனால், சேரனின் கூக்குரலுக்கு சமுத்திரகனியே தலையாட்டும் நிலையில் இல்லை. இயக்குனர்கள் சங்கத் தலைவராக இருக்கும் பாரதிராஜா சேரனுக்கு ஆதரவாக இருக்கிறார்.


இதற்கிடையில் தான் சேரனுக்கு அடுத்த யோசனை தோன்றி இருக்கிறது. சங்கத்தின் பொறுப்பை விட்டு நீக்க முடியா விட்டாலும், பாரதிராஜா இயக்கம் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் இருந்து அமீரை நீக்குவது சுலபம் தான் என நினைக்கிறார் சேரன். இது பற்றி அவர் பாரதிராஜாவிடம் சொல்ல, கிட்டத்தட்ட அவரும் அதற்குத் தலையாட்டி விட்டதாகச் சொல்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, அமீரின் அஸ்திரம் வேறு மாதிரியாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் சில மன வருத்தங்களால் தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி அனுப்பினார் சேரன். ஆனால், அதனை ஏற்காமல் அவரை சமாதானப்படுத்த அமீர், ஜனநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசி வந்தார்கள். அதனால், அந்தக் கடிதம் ஏற்கப்படாமலே இருந்தது. இப்போது அந்தக் கடிதத்தை கையில் எடுத்து இருக்கிறார் அமீர்.


'தனிப்பட்ட வேலைகளின் காரணமாக சேரன் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார். அதனை ஏற்று அந்தப் பொறுப்பில் இருந்து அவரை விடுவிக்கிறோம்' என அறிவிக்க இருக்கிறாராம் அமீர். யார் யாரை வீழ்த்துவது என்கிற போட்டி அதிதிவிரமாகவே நடக்கத் தொடங்கி இருக்கிறது. இருபதாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் தினக்கூலி பிரச்சனை இப்படியா திசைமாறிப் போகவேண்டும்? அமீரும் சேரனும் ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது.


திரைப்படத் தொழில் எந்தளவுக்கு நசிந்து வருகிறது என்பதை அமீர், சேரன் இருவருமே மறுக்க முடியாது. பெப்சி தொழிலாளர்கள் சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும் என்கிறார் சேரன். ஐயா... சேரன் அவர்களே... இந்த வார்த்தைகளை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அருகில் அமர்ந்தபடி சொல்கிறீர்களே... ஹீரோக்களின் சம்பளம் விண்ணை முட்டுகிற அளவுக்கு உயர்ந்து வருகிறதே... இதுபற்றி எஸ்.ஏ.சி.இடம் எடுத்துச் சொல்லி இளைய தளபதி விஜயின் சம்பளத்தை குறைக்கச் சொல்லி இருக்கலாமே... ஹீரோ, ஹீரோயின், இசையமைபாளர்களால் ஆகாத செலவா பெப்சி தொழிலாளர்களால் உருவாகிறது? கோடிகளில் ஜொலிக்கும் புன்னியவாங்களிடம் கேட்க வேண்டிய குறைப்பை கூலித் தொழிலாளர்களிடம் கேட்பதுதான் சேரனின் நியாயமா?


அதேநேரம் அமீரிடத்திலும் நமக்கு ஆதங்கம் இருக்கிறது... நீங்கள்தானே இயக்குனர் சங்க செயலாளர். 'அமீர் தவறுதலாக பேசிவிட்டார்' என இயக்குனர் சங்க துணைத் தலைவரான சேரனே மீடியாக்கள் மத்தியில் பேசுகிறார் என்றால், நீங்கள் அதனை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்கள? ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நியமிப்பதன் மூலமாகவே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என நீங்கள் சொல்கிறீர்கள்... வாஸ்தவம்தான்... திவாகரனை தேடிப் பிடிப்பதிலும், மகாதேவனை மடக்குவதிலுமே அக்கறையாக இருக்கும் இந்த அரசாங்கம் எப்போது உங்களுக்காக அதிகாரியை நியமித்து ஆக்க்ஷன் எடுக்கும்?


பல படபிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டு பலரும் தவியாய்த் தவிக்கும் வேளையில் இயக்குனர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் நீங்கள் உடனடித் தீர்வுக்கு வழி காண வேண்டும். உங்களின் அதிரடியான பேச்சையும், ஆக்ரோஷமான நடவடிக்கையையும் நம்பித்தான் ஆயிரக்கணக்கானவர்கள் உங்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
தொழிலாளர்களின் போராட்டம் பெரிதாக உருவெடுக்காமலும்... அதேநேரம் படைப்பாளிகளும் பாதிக்காத படியும் உடனடி நடவடிக்கை எடுக்க சங்கத்தை கூட்டி உடனே ஆலோசனை நடத்துங்கள். தொழிலாளர்களை வீதிக்கு இறங்க விட்டால், அதன் பிறகு ஆயிரம் அமீர்கள் வந்தாலும் அவர்களை அமைதிபடுத்த முடியாது. ஏழையின் வயிறு எரிகிற தீக்கு சமம் என்பதை எல்லோரும் உணர வேண்டிய நேரம் இது!

- கும்பல்
Share this article :

+ comments + 11 comments

26 January 2012 at 03:12

சேரனுக்கு இது தேவை இல்லாத வேலை... அவரை ஒழுங்காக படம் எடுக்கச் சொல்லுங்கள் முதலில். சின்ன பட்ஜெட் படங்களைப் பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது. அவர் எடுத்த சின்ன பட்ஜெட் படம் எது?

26 January 2012 at 03:18

யார் சார் இந்த சேரன்... அவரைப்போய் முதல்ல நல்ல படத்தை எடுக்கச் சொல்லுங்க... சின்ன பட்ஜெட் படத்தைப் பற்றிப் பேச இவருக்கு என்ன அக்கறை இருக்காம்? இவர் எடுத்த சின்ன பட்ஜெட் படம் என்னவாம்? எங்களை மாதிரி ஒரு நாள் முழுக்க லைட்டைப் புடிச்சு நின்னு பார்த்தாதான் எங்க வலி அவருக்குப் புரியும்?

சேரன் சார்... நீங்களும் பெப்சியில் ஒரு உறுப்பினர் தான் என்பது மறந்து போச்சா? நீங்கள் உடனடியாக பெப்சியில் இருந்து விலகுவதாக அறிவியுங்கள்... பெப்சி அதன் பிறகு தான் உருப்படும்!

Anonymous
26 January 2012 at 03:39

அமீருக்கும் சேரனுக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கட்டும்... முதலில் படைப்பாளிகளையும் தொழிலாளிகளையும் காப்பாற்ற அக்கறை எடுங்கள். சினிமா மோதல்கள் இன்றைக்கு நடக்கும்... நாளைக்கே அமீரும் சேரனும் கைகுலுக்கிக் கொள்வார்கள்.

-செல்வராஜன்

26 January 2012 at 03:45

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

இயக்குனர் சங்கத் தேர்தல் ஆரம்பித்த போது அமீருக்கும் பாரதிராஜாவுக்கும் கடுமையான மோதல் நடந்தது. இப்போது பாரதிராஜா இயக்கும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீர் தான் கதாநாயகன். இன்றைக்கு சேரன் அமீரை கடுமையாகத் தாக்குவதாக செய்தி... அமீர் சார்... உங்களோட அடுத்த படத்துல சேரன் தானே ஹீரோ? இதெல்லாம் ஒரு சண்டை... இதற்கு ஒரு விளக்கம்... கூத்தாடி பொழப்புன்னு சினிமாகாரங்களை சும்மாவா சொன்னாங்க?

Anonymous
27 January 2012 at 09:54

இயக்குநர்களின் வாதம் வெறும் பித்தலாட்டம் என்று மறுக்கின்றனர், போராடி வரும் ஃபெப்சி தொழிலாளர்கள்.

”இயக்குநர்கள் என்ற பெயரில் கருங்காலி வேலை செய்யும் இவர்களில் பெரும்பான்மையினர் தயாரிப்பாளர்கள் அதாவது முதலாளிகள். 10 மாதங்களுக்கு முன்னால் முதல்வர் முன்னிலையில் ஏற்றுக்கொண்ட தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் இன்று வரை இவர்கள் கையெழுத்திடவில்லை.”

”தெலுங்கு, கன்னட, மலையாள தயாரிப்பாளர்கள் அனைவரும் இதில் கையெழுத்திட்டு விட்டார்கள். சம்பள உயர்வை மறுப்பதற்குத்தான் இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள். சங்கத்தை உடைக்கிறார்கள். இன்று தொழிலாளிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் இந்த இயக்குநர்கள் தொழிலாளர்களுக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் சம்பள பாக்கியை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலித்துத் தர, தங்கள் சுண்டுவிரலைக் கூட அசைத்ததில்லை.”

”தற்போது தயாரிப்பில் இருக்கும் படங்களில் வேலை செய்த தொழிலாளிகளுக்கு ஒவ்வொரு தயாரிப்பாளரும் ஆயிரக்கணக்கில் சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். பாதி படத்திற்க்கு வேலை செய்ததற்கு கூலி கொடுக்க வக்கில்லாதவர்கள், மீதி படத்தை வேறு ஆள் வைத்து வேலை செய்கிறோம் என்கிறார்களே, இது என்ன நியாயம்?”

”இந்த திடீர்த் தமிழர்கள் தங்கள் படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யாமல் இருப்பார்களா? அனைத்திந்திய சந்தையை கைகழுவி விடுவார்களா? அதெல்லாம் இருக்கட்டும் முதலில் தங்கள் படத்துக்கு தமிழில் பெயர் வைப்பார்களா?”- என்ற பதிலடி கொடுக்கிறார்கள் தொழிலாளர்கள்.

தொழிலாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர்களிடமிருந்து நாணயமான பதில் எதுவும் இல்லை. தன் முன்னிலையில் ஏற்றுக் கொண்ட ஊதிய ஒப்பந்தத்தில் 10 மாதமாகக் கையெழுத்து போடாதது பற்றியோ, பல கோடி ரூபாய் சம்பளம் பாக்கி பற்றியோ முதலாளிகளிடம் ஒரு கேள்வி கூடக் கேட்காமல் கட்டைப் பஞ்சாயத்து செய்திருக்கிறது, கலைஞர் அரசு. - நன்றி வினவு....

====================================================================================================================

சேரன் இன்று நன்றாகவே பேசுகிறார்..... நீயும் தொழிலாளியாக இருந்து தான் வந்திருக்கிறாய் இந்த உயரத்திற்கு...

என்னங்கடா நீங்க.... வளரும் வரை அடக்கிவாசிக்கிறீர்கள், வளர்ந்தவுடன் வம்புகளை உருவாக்குகிறீர்கள், உங்களுக்கு எங்கிருந்து தெரிய போகிறது எங்களின் வலிகள்.. ஷூட்டிங் செட்ல நின்னு லைட் ஹ புடிச்சு பாருங்கடா... தெரியும் அப்போது வெப்பத்தின் தாக்கமும்.. வெறும் வயரின் வேதனைகளும், உங்களுகென்ன சம்பளமும் கிடைக்கிறது கிம்பளமும் கிடைகிறது... சந்தோஷமான வாழ்க்க, எங்களுக்கெல்லாம் சாக்கட சந்துதான் வாழ்கையே.. சேரன் இனிமேல் வாயை திறந்தாள் செருப்படி தான் வாங்குவார்...

Anonymous
27 January 2012 at 10:01

உரிமைக் குரலெல்லாம் உழைப்பாளியை எதிர்த்துத்தான்!
படைப்பு உரிமைக்காக சங்கம் கட்டிக் குரல் கொடுக்கும் படைப்பாளிகளே! அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட, யோக்கியமான திரைப்படங்கள் பலவற்றில் ஒன்றையாவது ஆதரித்து உங்களில் ஒரு படைப்பாளியாவது குரல் கொடுத்ததுண்டா?

தொழிலாளியின் வயிற்றில் அடிப்பதற்காக உரிமைக் குரல் எழுப்புகிறீர்களே, உங்கள் படைப்பாளி மணிரத்தினம் ‘பம்பாய்’ படத்திற்காக தாக்கரேயின் காலில் விழுந்தாரே, அப்பொழுது உங்களுக்கெல்லாம் தொண்டை அடைத்துக் கொண்டதா?உரிமைக் குரலெல்லாம் உழைப்பாளியை எதிர்த்துத்தான்!
படைப்பு உரிமைக்காக சங்கம் கட்டிக் குரல் கொடுக்கும் படைப்பாளிகளே! அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட, யோக்கியமான திரைப்படங்கள் பலவற்றில் ஒன்றையாவது ஆதரித்து உங்களில் ஒரு படைப்பாளியாவது குரல் கொடுத்ததுண்டா?

தொழிலாளியின் வயிற்றில் அடிப்பதற்காக உரிமைக் குரல் எழுப்புகிறீர்களே, உங்கள் படைப்பாளி மணிரத்தினம் ‘பம்பாய்’ படத்திற்காக தாக்கரேயின் காலில் விழுந்தாரே, அப்பொழுது உங்களுக்கெல்லாம் தொண்டை அடைத்துக் கொண்டதா?

27 January 2012 at 10:04

சாதி, மதம், இனம் கடந்து வர்க்க ரீதியாக ஒன்றுபட்டிருக்கும் நீங்கள், தொழிலாளிகளின் வர்க்க ஒற்றுமையைக் கண்டு வயிறெரிகிறீர்கள். சினிமா சென்டிமெண்டால் அடிக்கப் பார்க்கிறீர்கள்.

”பத்து வருஷமா எங்கிட்ட வேல பார்த்த பையனே என்ன மோசமா பேசிட்டான்” என்று கண் கலங்குகிறீர்கள்.

”தொழிலாளிகளின் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடத்திற்கு நாங்கள் பணம் கட்டுகிறோம்” என்கிறார்கள் சில இயக்குநர்கள். பத்து வருஷமென்ன, முப்பது வருடமாக இந்தத் துறையில் குப்பை கொட்டிவரும் தொழிலாளிகள் இன்னும் தொழிலாளிகளாகத்தான் இருக்கிறார்கள்.”இதுதான் ஸ்டூடியோ” என்று உங்களை உள்ளே அழைத்துச் சென்று காட்டிய தொழிலாளிகள் இன்னும் சைக்கிளில்தான் வருகிறார்கள். கார்,பங்களா, செல்ஃபோன் போன்ற வசதிகள் அவர்களுக்கு வாய்க்கப் பெறவில்லை.

வெற்றிப் படமோ, வெள்ளி விழாவோ அவர்களுக்கு நீங்கள் கொடுப்பது நிச்சயிக்கப்பட்ட கூலிதான். இன்று கண்ணீர் வடிப்பவர்கள் அன்று லாபத்தைப் பகிர்ந்து கொண்டீர்களா என்ன? மாதத்தில் பாதி நாள் வேலை இல்லாமல் கிடக்கும் தொழிலாளி எப்படி சாப்பிடுவான் என்பதை அப்பொழுது சிந்தித்திருக்கிறீர்களா? இப்போது சிந்திப்பதில் வியப்பில்லை.

போராட்டம் நடக்கும் பொழுதுதான் தொழிலாளிகளின் மீது முதலாளிகளுக்குக் கரிசனம் அதிகமாகும். நீங்கள் வள்ளல்களாக இருக்க விரும்புகிறீர்கள்; ஆனால் தொழிலாளிகள் அடிமைகளாக நீடிக்கத் தயாராக இல்லையே- என்ன செய்வது?

27 January 2012 at 12:31

ஆதரவு, எதிர்ப்பு என எவ்விதக் கருத்தாக இருந்தாலும் வாசகர்கள் மிகுந்த நாகரிகத்துடன் எழுதுவது நல்லது. யாருடைய மனதையும் காயப்படுத்துவது நம் நோக்கம் அல்ல. நம் ஆதங்கத்தை அவர்கள் உணர வேண்டும் என்பதுதான் நம் வேண்டுகோளாக இருக்க வேண்டும்! ஆதரவுக்கு நன்றி!

Anonymous
28 January 2012 at 03:07

அடப்போங்கப்பா... இதெல்லாம் ஒரு மோதலா?

இன்னிக்கு மோதுவாங்க... நாளைக்கே சேருவாங்க.

தானே புயல்ல சிக்கி வட மாவட்டங்கள் தத்தளிச்சு கிடக்கிற

நிலையில், சினிமாகாரங்க அடிக்கிற கூத்தை எங்கே போய்ச்

சொல்றது?

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger