கார்டனில் திவாகரனின் வளர்ப்பு மகன்!
சசிகலாவின் தம்பி திவாகரனை கைது செய்ய போலீஸ் தீவிரமாக இயங்கி வருகிறது. மன்னார்குடி மட்டுமல்லாமல், தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் ரகசிய போலீஸ் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வருகிறது. ''இரண்டு நாட்களில் திவாகரனை எப்படியாவது கைது செய்யுங்கள்" என முதல்வர் ஜெயலலிதா அதிகாரத் தரப்பின் முக்கியப் புள்ளிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இந்தளவுக்கு திவாகரன் மீது ஜெயலலிதா கோபமாக என்ன காரணம் எனத் தெரியாமல் திண்டாடித் தவிக்கிறார்கள் மன்னார்குடி உறவுகள். கட்சிக்காரர்களுக்கும் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்களைத் திரட்டி, ஆட்சியைக் கவிழ்க்க திவாகரன் திட்டமிட்டதாகவும், அதனால்தான் அவரை உடனடியாக கைது செய்ய ஜெயலலிதா வேகம் காட்டுவதாகவும் பரபரப்பு செய்திகள் கிளம்புகின்றன. ஆனால், உண்மையான காரணம் இதுவரை யாருக்கும் தெரியாது என்பதே நிஜம்.
திவாகரன் மீது இந்தளவுக்கு கோபமாக இருக்கும் ஜெயலலிதா அவருடைய வளர்ப்பு மகன் விவேக்கை மட்டும் எப்படி கார்டனில் தங்க வைத்திருக்கிறார் என்பது தான் பலருக்கும் புரியாத கேள்வி. இளவரசியின் மகனான விவேக் தான் திவாகரனின் வளர்ப்பு மகன். ஆஸ்திரேலியாவில் படித்தவரான விவேக் கடந்த வருடம் தான் தமிழ்நாட்டுக்கு வந்தார். திவாகரனின் மகனும் விவேக்கும் எப்போதும் ஒன்றாக வளம் வருவார்கள். திவாகரனின் வீட்டில் விவேக்கும் திவாகரன் மகனும் ஒன்று சேர்ந்து இருக்கிற புகைப்படம் பெரிதாக இருக்கும். நெருங்கிய உறவுக்காரர்களுக்கு மட்டுமே விவேக் திவாகரனின் வளர்ப்பு மகன் என்பது தெரியும்.
தற்போது கார்டனில் இருக்கும் விவேக், திவாகறனைக் காப்பாற்ற பெரிதாக முயல்வதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால், இன்னும் சிலரோ 'மேடம் என்ன செய்தாலும் சரியாத்தான் செய்வாங்க... அதில், தலையிடுகிற அளவுக்கு நான் பெரிய மனிதன் இல்லை' என திவாகரனுக்காக பேசியவர்களிடம் கறாராக சொல்லி விட்டார் விவேக் என்றும் சொல்கிறார்கள்.
ஜெய - சசி நட்பை பொருத்த மட்டில் இருவருக்கும் இடையே நடக்கும் எல்லாமே ரகசியம் தான். அப்படியிருக்க, திவாகரன் துரத்தப்படுவதற்கும், விவேக் கார்டனிலேயே தங்க வைக்கப்பட்டிருப்பதற்கும் என்ன பின்னணி என்று யாருக்குத் தெரியும்?
- கும்பல்
Labels:
dhivakaran,
jayalalitha,
kumbal,
sasikala,
கும்பல்,
சசிகலா,
தமிழகம்,
திவாகரன்,
ஜெயலலிதா




Post a Comment