விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் உச்சகட்டம் அடைந்துள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் சிலர், "நாங்கள் ராவணனின் ஆதரவாளர்கள் அல்ல' என்றும், திவகாரனின் ஆதரவாளர் தான் மாவட்ட செயலராகவும், அமைச்சாராகவும் இருக்கிறார்' என்ற புகாரை தெரிவித்து, போயஸ் தோட்டத்தில் புகார் மனுக்களை வழங்கி உள்ளனர். இதனால், புதிய நிர்வாகிகளை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டு, இரு தரப்பினர் மீதும் விசாரணை நடத்த கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
புகார் வந்தது, பதவி போச்சு : அ.தி.மு.க.,விலிருந்து, சசிகலா கும்பல் நீக்கப்பட்ட பின், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பல அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதிகார மையத்தில் கொடிக்கட்டி பறந்த, ராணவனின் ஆதரவாளர்கள், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தில், அதிகளவில் இடம் பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டை, முதல்வர் ஜெயலலிதாவிடம் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட, அ.தி.மு.க., விவசாய அணி செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசாமி, காரியப்பட்டி ஒன்றியச் செயலர் ராஜராஜன் உட்பட, 18 பேரை அவரவர் வகித்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர்.
நாங்க ரொம்ப காலமாவே... : நீக்கப்பட்ட சிவசாமி ஏற்கனவே, 2001ம் ஆண்டு முதல், 2006ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். மாவட்டச் செயலராகவும், மாநில விவசாயப் பிரிவு செயலராகவும் பதவி வகித்துள்ளார்.
திருத்தங்கல் நகர செயலர் சரவணகுமாரை, 2004ம் ஆண்டு சென்னை கொளத்தூரில் நேர்காணல் நடந்த போது, கட்சியின் தலைமையின் நேரடி நியமனம் மூலம் பதவி பெற்றவர். காரியப்பட்டி ஒன்றிய செயலர், ராஜராஜன் கடந்த, 2001ம் ஆண்டு ஒன்றியக் குழு தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
ராவணன் பிறகு தானே... : "கடந்த 2007ம் ஆண்டிலிருந்து தான், அ.தி.மு.க., அதிகார மையத்திற்குள்ளே, ராவணன் வருகிறார் என்றும், அதனால் நீக்கப்பட்டவர்கள் எப்படி, ராணவனின் ஆதரவாளர்களாக செயல்பட முடியும். நாங்கள் ராவணன் ஆதரவாளர்கள் அல்ல. முதல்வரின் விசுவாசிகள்' என, குறிப்பிடப்பட்டுள்ள மனுக்களை சிலர், போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் வழங்கியுள்ளனர்.
மேலும், அவர்கள் வழங்கிய மனுக்களில், திவாகரனின் ஆதரவாளர் தான் அமைச்சர் என்றும், அவரது ஆதரவாளர்களை கட்சியில் நிர்வாகிகளாக கொண்டு வருவதற்கு, எங்களை பலிக்கடா ஆக்கி விட்டார் என்ற புகாரையும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதிலாக, அமைச்சர் சிபாரிசு செய்த, புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட வேண்டாம் என்றும், இது குறித்து விசாரணை நடத்தவும் மூத்த அமைச்சர்கள், இருவருக்கு கட்சித் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment