மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை தமிழக அரசு பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை கடந்த மாதம் நவம்பர் 8ஆம் தேதி தமிழக அரசு பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரத்த நீதிபதி சுகுணா, சங்க உறுப்பினர்களுக்கு உடனடியாக பணி வழங்குவதோடு, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த தமிழக அரசின் மனுவை கடந்த நவம்பர் 23ஆம் தேதி உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு நிராகரித்ததோடு, மக்கள் நலப் பணியாளர்கள் சங்கங்களின் வழக்கின் இறுதி விசாரணையை நவம்பர் 24ஆம் தேதி நடத்த வேண்டும் என்று தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து நீதிபதி கே.சுகுணா முன்னிலையில் நவம்பர் 24ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. சில நாட்களாக நீடித்த விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி சுகுணா தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

Post a Comment