போராட்டத்தின் நடுவே பற்றியெரிந்த பில்டிங்! எரித்தது மக்களா? போலீஸா?
எகிப்தின் ராணுவ ஆட்சியாளர்கள் நேற்று (சனிக்கிழமை) பொதுமக்கள் மீதான மூர்க்கமான தாக்குதல்களை நடத்தி, அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை பணிய வைக்க முயன்றிருக்கிறார்கள். எகிப்திய டி.வி. சேனல்களில் தோன்றி மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், தமது ராணுவம் தாக்குதல் எதையும் நடத்தவில்லை என்று அறிவித்தார்.
அவரது பேச்சு டி.வி. சேனல்களில் ஒளிபரப்பாகி பத்து நிமிடத்தின் பின், தாஹிர் சதுக்கத்தில் ராணுவம் பொதுமக்களை துரத்தியடிக்கும் காட்சிகள் டி.வி. சேனல்களில் காண்பிக்கப்பட்டன.
இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றும் நாடு ஒன்றில் இடம்பெற்ற நம்பமுடியாத காட்சியாக,
ராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்ட பெண் ஒருவரது ஆடைகளைக் களைந்து தாஹிர் சதுக்கத்துக்கு அருகிலுள்ள நடைபாதையில் போட்டு பூட்ஸ் கால்களால் மிதிந்த காட்சியும், டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்தது! இந்தக் காட்சி, எகிப்திய ராணுவ அரசு மீது, இதர அரபு நாடுகளை கோபமடைய வைத்துள்ளது.
அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், தமது எதிர்ப்பைக் காண்பிப்பதற்கு நீண்ட காலமாகவே தேர்ந்தெடுத்து வந்த இடம், தாஹிர் சதுக்கம்தான். நேற்று காலை 8 மணிக்கு தாஹிர் சதுக்கத்தில் உள்ள நாடாளுமன்ற பில்டிங் திடீரென கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதற்கு தீ வைத்தது யார் என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகின்றது.
அரசு தரப்பு, கிளர்ச்சியாளர்கள் தீவைத்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இவர்களோ, அங்கிருந்த மிலிட்டரி போலீஸ்தான் தாஹிர் சதுக்கத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் உபாயமாக நாடாளுமன்ற பில்டிங்கை எரித்ததாக கூறுகிறார்கள். எரிக்கப்பட்ட பில்டிங்கில், எகிப்தின் சரித்திரத்தைக் குறிக்கும் பழையகால பொருட்கள் பல 100 ஆணடுகளுக்கு மேலாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன.
பிரதமர் கமால் கன்சோரி, கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தமது ராணுவத்தினரின் வேலை அல்ல என்று இன்று காலை அறிக்கை விடுத்துள்ளார். கிளர்ச்சியாளர்களே, உலக அனுதாபத்தை பெறுவதற்காக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பது அவரது வாதம். ஆனால், எகிப்திய தனியார் டி.வி. சேனல் ஒன்று, மிலிட்டரி போலீஸார் மக்கள்மீது தாக்குதல் நடத்துவதை தெளிவாக படம்பிடித்து, இன்று காலை ஒளிபரப்பு செய்தது.

Post a Comment