“தமிழக மக்களா? ரொம்ப ஈசியாக சமாளித்து விடலாம்” ரஷ்யாவில் பிரதமர் சிங்!
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழ்நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பை தமது அரசு ‘திறமையாக சமாளித்துவிடும்’ என்று ரஷ்யாவுக்கு உறுதியளித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், “அடுத்த சில வாரங்களில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலை செயற்படத் தொடங்கும் என்பதில் எந்தவித மாற்றமும் கிடையாது. அதேபோல, இரண்டாவது அணு உலை இன்னமும் 6 மாதங்களில் திட்டமிட்டபடி செயற்படத் தொடங்கும்” என்றும் கூறியுள்ளார்.
ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவுடன் கலந்துரையாடிய பின்னர், நேற்று (வெள்ளிக்கிழமை) இந்திய ரஷ்ய நிருபர்களிடம் பேசும்போது இதைத் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழ்நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பும், தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களும் ரஷ்ய நிருபர்களுக்கும் தெரிந்துள்ளது. தமிழக எதிர்ப்பு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலைய திட்டமே நிறுத்தி வைக்கப்படலாம் என்ற ஊகச் செய்திகள் ரஷ்ய ஊடகங்களில் வெளியாகிய காரணத்தால், பிரதமரிடம் ரஷ்ய நிருபர்கள் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான கேள்விகளை கேட்பதில் ஆர்வம் காட்டினர்.
தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் அமைக்கப்படுவது, மக்களின் எதிர்ப்பைக் கடந்து நடைபெறுமா என்ற கேள்வி, சில மேலைநாட்டு ஆங்கில ஊடகங்களிலும் எழுப்பப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும் தமது கருத்தை தெரிவித்திருப்பதால், திட்டமிட்டபடி மத்திய அரசால் திட்டத்தை தொடங்க முடியாது என்ற கருத்து வலுப்பெற்று இருந்தது.
தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பை மிகச் சாதாரண விஷயம் என்ற விதத்தில்தான் தமது அரசு எடுத்துக் கொள்கின்றது என்ற தொனியில் அமைந்திருந்தன பிரதமரின் பதில்கள். கூடங்குளம் அணுமின் நிலையம் செயற்படுவதில் தாற்காலிகமாக சில தடங்கல்கள் ஏற்பட்டிருப்பதை பிரதமர் தனது பிரஸ்-மீட்டில் ஒப்புக் கொண்டார். அணுமின்நிலையம் அமைக்கப்படுவது தொடர்பாக மக்கள் மத்தியில் தெளிவின்மை காரணமாக அச்சம் எழுந்துள்ளதாக தெரிவித்த அவர், தமிழக மக்களின் அச்சத்தை அகற்றும் முயற்சியில் அரசு பெரும் வெற்றியடைந்து விட்டதாகவும் ரஷ்யாவில் வைத்து தெரிவித்தார்.
தமிழகத்தில் சமீப காலங்களில் மத்திய அரசுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள மூன்றாவது விவகாரம் இது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் மத்திய அரசுக்கு மூன்று விவகாரங்களில் ஒரே நேரத்தில் எதிர்ப்பு, சமீபகாலத்தில் ஏற்பட்டதில்லை.
ராஜிவ் காந்தி கொலையில் மூவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்பு ஆகியவையே மத்திய அரசுக்கு எதிராக ஒரே நேரத்தில் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த மூன்று விவகாரங்களிலும் தமிழக அரசும் தமது குரலை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
டில்லியில் இருந்து மாநில அரசுக்கும் சரியான ரெஸ்பான்ஸ் கிடையாது, மக்கள் எதிர்ப்புக்கும் சரியான ரெஸ்பான்ஸ் கிடையாது.

Post a Comment