“ஏ.டி.ஜி.பி. புதுப்பெண் போல, அம்சமாக இருக்கிறாரே” ஸ்டாலின் வியப்பு!
ஸ்டாலின் நில அபகரிப்பு புகார் விஷயத்தில் ஜெயலலிதா அரசு சறுக்கியிருக்க, கிடைத்த சான்ஸை விடாமல் தொடர்ந்தும் அடிமேல் அடியாக அடித்து விளையாடிக்கொண்டு இருக்கிறார் மு.க.ஸ்டாலின். லேட்டஸ்டாக, “நான் நில அபகரிப்பு செய்ததை உங்களால் நிரூபிக்க முடிந்தால், எனக்கு நானே தண்டனை கொடுக்கவும் தயார்” என்று கூறியிருப்பவர், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.-யை கிண்டல் அடித்தும் விட்டார்.
அண்ணா பொது நூலக மன்றம் சார்பில் வடபழனியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை நேற்று (புதன்கிழமை) மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துப் பேசியபோது, அவரது பேச்சின் மெயின் தீம், போலீஸார் அவர்மீது போட்டுள்ள எஃப்.ஐ.ஆர். பற்றியதுதான்! மனுசன் இதை வைத்து அட்டகாசமாகவே அரசியல் செய்கிறார்.
“என்மீதும் என் மகன்மீதும் (உதயநிதி) அ.தி.மு.க. அரசு தொடர்ந்துள்ள வீடு பறிப்பு வழக்கில் என் மகன் உதயநிதிக்கு நீதிமன்றத்தால் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முன்ஜாமீன் கேட்டு நான் நீதிமன்றத்தை நாடமாட்டேன். கைது செய்யட்டும் என்று காத்திருக்கிறேன்” என்றவர், போலீஸ்மீதுதான் தனது முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிப்பதைவிட, போலீஸ்மீது தாக்குதல் நடாத்துவதிலேயே குறியாக இருந்தார்.
“காவல்துறையினர், யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், எங்கள் மீது எப்.ஐ.ஆர். போட்டுள்ளனர். புகாரில் கொஞ்சமாவது உண்மைத் தன்மை இருக்கிறதா என்றுகூட ஆராயத் தெரியவில்லை காவல்துறைக்கு! எனடனைக் கைது செய்யுங்கள் என்று சொல்வதற்காக டி.ஜி.பி. அலுவலகத்துக்கு நேரில் சென்றிருந்தேன். எனக்கு எதிரே மேஜையில் கூடுதல் டி.ஜி.பி. அமர்ந்திருந்தார்.
அவரிடம், “இதோ வந்திருக்கிறேன். கைது செய்யுங்களேன்” என்று வாய்விட்டுக் கேட்டும் பார்த்தேன். அவரோ, புது மணப்பெண் போல குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாரே தவிர, அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.
இப்போது என்ன நடந்திருக்கின்றது என்று பாருங்கள். என் மீது வழக்குத் தொடர்வதற்கு காரணமாக இருந்த உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்” என்று காவல்துறையை போட்டு வாங்கியிருக்கிறார்.
அதற்குமேல் இதே வீடு அபகரிப்பு விஷயத்தை அரசியலிலும் நுழைத்த ஸ்டாலின், “கனிமொழி வருகையால் என்னுடைய முக்கியத்துவம் குறைந்து போய்விட்டது என்றும் அதை நிலைநிறுத்திக் கொள்ளவே டி.ஜி.பி. அலுவலகத்துக்கு நான் சென்றதாகவும் சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி அறிக்கை விட்டார். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள், ஆனால், முதலில் நீங்கள் போட்ட வழக்குக்கு என்மீது நடவடிக்கை எடுத்துவிட்டு பேசுங்கள். என்மீது நடவடிக்கை எடுக்க நீங்கள் தயாரா?” என்று சவால் விட்டிருந்தேன்.
பாவம் பரஞ்சோதி. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எங்கள் மீது மேம்பால ஊழல் வழக்குப் போடப்பட்டது. அப்போது என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் தண்டனை தரவேண்டாம். நானே தூக்குத் தண்டனை கொடுத்துக் கொள்கிறேன் என்றேன். 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. இப்போது சொல்கிறேன். வீடு பறிப்பு வழக்கில் என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் தண்டனை தரவேண்டாம். நானே கொடுத்துக் கொள்கிறேன். அப்படி நிரூபிக்காவிட்டால் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா?
ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். ஆட்சியில் நாங்கள் இல்லாவிட்டாலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்” இவ்வாறு ஒரே கலவையை வைத்து இட்லி, தோசை, ஊத்தப்பம் என்று வெவ்வேறு ஐட்டங்களாக போட்டு எடுக்கிறார் ஸ்டாலின்.
எல்லாமே நன்றாக வருகின்றன. காரணம், மாவு கலவை சூப்பர். என்ன இருந்தாலும் ‘அம்மா’ பண்ணிக் கொடுத்ததல்லவா?

Post a Comment