ஜெயலலிதா சொல்லி வாயை திறந்த தம்பித்துரைக்கு முதுகில் படார்!
முதல்வர் ஜெயலலிதா சமீப காலமாக மத்திய அரசுடன் முறுகல் போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில் நேற்று (வியாழக்கிழமை) டில்லியில் ஜெயலலிதாவின் மனநிலை வெளிப்படையாகப் பிரதிபலித்தது. உட்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடாத்திய கிளர்ச்சியில் அதி உற்சாகமாகப் பங்கு பற்றினார்கள் அ.தி.மு.க. எம்.பி.க்கள்.
நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க., எம்.பி.க்கள் தம்பிதுரை, செம்மலை, வேணுகோபால், மணியன், ராஜேந்திரன், சுகுமார், குமார் ஆகியோர் போட்ட கூச்சலைக் கண்டு, பா.ஜ.க. உறுப்பினர்களே அவர்களைத் திரும்பித் திரும்பி வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.தான் சிதம்பரத்துக்கு எதிராக முதலில் குரல்கொடுக்கத் தொடங்கியது. சிதம்பரம் ராஜினாமா செய்யவேண்டும் என்று அவர்கள் எழுந்து நின்று குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். எதிர்க்கட்சி வரிசையில் அதிகளவு எம்.பி.க்களை கொண்ட கட்சி பா.ஜ.க. என்பதால், அவர்களது குரல்களே அதிகமாக ஒலித்தது.
இந்த நேரத்தில்தான் தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோ அறிமுகக் காட்சியில் வருவதுபோல, 7 அ.தி.மு.க. எம்.பி.களும், தமது சீட்டில் இருந்து எழுந்தார்கள். அதி உற்சாகமாக கோஷம்போடத் தொடங்கினார்கள். இவர்களது கோஷம், பா.ஜ.க.-வினரின் கோஷங்களையும் மீறி ஒலிக்கத் தொடங்கியது. திடீரென அ.தி.மு.க. எம்.பி.க்கள் தமது வரிசையில் இருந்து வேகமாக வெளியே வந்து, ஆவேசமாக கோஷமிட்டபடி சபாநாயகரை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள்.
அப்போது சில பா.ஜ.க. உறுப்பினர்களும் சபாநாயகரின் ஆசனத்தை நோக்கிச் செல்லத் தொடங்க, சபாநாயகரை நோக்கி ஒரு படையெடுப்பு நடைபெறுவது போல இருந்தது அந்தக் காட்சி. படையெடுப்புக்கு தலைமை தாங்கிச் செல்லும் தளபதிகளைப் போல முன்னே சென்றவர்கள் நம்ம அ.தி.மு.க. எம்.பி.க்கள்தான்!
இந்தக் காட்சி பா.ஜ.க. உறுப்பினர்களை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. காரணம் தமிழகத்தில் இருந்து செல்லும் திராவிடக் கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் செயற்படும் விதம் பா.ஜ.க. உறுப்பினர்களுக்கு நன்றாகவே தெரியும். தேசியப் பிரச்சினைகள் விஷயமாக நாடாளுமன்றமே ரணகளமாக மாறும்போதுகூட, அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் தமது காலில் உள்ள பித்தவெடிப்பு பற்றி யோசித்துக் கொண்டிருப்பதுதான் வழமை!
அப்படியான ஆட்கள் பா.ஜ.க. கிளப்பும் தேசியப் பிரச்சினை ஒன்றில், பா.ஜ.க. உறுப்பினர்களையும்விட ஆவேசமாகக் கூச்சலிட்டால், பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு ஆச்சரியம் ஏற்படத்தானே செய்யும்?
ஆக்ரோஷமாக குரல் கொடுத்துக்கொண்டிருந்த தம்பித்துரைக்கு அருகே நின்றிருந்த ராஜஸ்தான் மாநில எம்.பி. ஒருவர், “யூ டோன்ட் லைக் சிதம்பரம்? அச்சா அச்சா” என்று உற்சாக மிகுதியில் தம்பித்துரையில் முதுகில் படார் என்று ஓங்கி ஒரு தட்டு தட்ட, “ஹி ஹி” என்று நெளிந்தார் த.து. (ராஜஸ்தான் எம்.பி. நல்ல வாட்டசாட்டமான ஆள்)
“சிதம்பரத்துக்கு எதிரா கூச்சல் போடும்படி கார்டனில் இருந்து அம்மா தகவல் அனுப்பியிருக்காங்க போலிருக்கு” என்று காமென்ட் அடித்தார் ஒரு தி.மு.க. எம்.பி.
இதில் ஆச்சரியமான காட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் கையை உயர்த்தி கோஷம் போட்டுக்கொண்டிருந்தார். “ஆகா, இவர் அ.தி.மு.க.-வுடன் கூட்டணி வைத்துவிட்டாரா” என்று ஆச்சரியப்பட்டு உற்றுக் கேட்டதில், அவர் முல்லை பெரியாறு அணை பற்றி ஏதோ சொல்லி தனியே கோஷம் போட்டுக்கொண்டிருந்தார். சிதம்பரத்துக்கு எதிரான கோஷங்களில் திருமாவின் கோஷம் அமுங்கிப் போனது.
மக்களே, அடுத்த தடவை இந்தாள் திருமாவை நாடாளுமன்றத்துக்கு தனியே அனுப்பாதீர்கள்… ரொம்ப பரிதாபமா இருக்கு!

Post a Comment