இடைத்தேர்தலுக்காவே முல்லைப் பெரியாறு பிரச்னையை கிளப்புகிறது கேரளா: ப.சிதம்பரம்
முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்காகத்தான் கட்டப்பட்டது என்று கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இடைத்தேர்தலுக்காவே முல்லைப் பெரியாறு பிரச்னையை கேரளா கிளப்புகிறது என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.
இதில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு ஏற்பட்டிருப்பது இடைத்தேர்தல் அச்சம் என்றும், முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டுக்காகத்தான் கட்டப்பட்டது என்றும் கூறினார்.
அணை பாதுகாப்பில் கேரளத்துக்கு உள்ள அக்கறை தமிழ்நாட்டுக்கும் உள்ளது. அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
படிப்படியாக 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீர்ட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை இன்னும் உறுதியாக உள்ளது.எனவே நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட முல்லை பெரியாறு அணை உடைந்து விடும் என்பது கேரள அரசின் தேவையற்ற அச்சம்.
இது நிரந்தர அச்சம்,இடைக்கால அச்சம் என்று சொல்லுவதை விட இடைத்தேர்தல் அச்சம் என்று சொல்லலாம்.அங்கு இடைத்தேர்தல் முடிந்தவுடன் இந்த அச்சமும் போய்விடும் என்று அவர் மேலும் கூறினார்.

Post a Comment