கேரளம் உறுதி தரும்வரை பொருளாதாரத் தடை: வைகோ
முல்லைப் பெரியாறு அணையைத் தகர்க்க மாட்டோம் என்று கேரள அரசு உறுதி தரும்வரை கேரளம் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
""முல்லைப் பெரியாறு - ஒரு விளக்கம்'' என்ற தலைப்பில் சென்னையில் சனிக்கிழமை விளக்கக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது: "முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசோ நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பார்க்கலாம் என்றது. ஆனால் உச்ச நீதிமன்றமோ கேரள போலீஸ் பாதுகாப்பே போதுமானது என்று உத்தரவிட்டுள்ளது.
கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையைத் தகர்ப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த டிசம்பர் 2-ம் தேதி மற்றும் 4-ம் தேதிகளில் அணையைத் தகர்க்கும் முயற்சியில் கேரளத்தவர்கள் முயற்சித்துள்ளனர். இந்த நிலையில் அணை பாதுகாப்புக்குக் கேரளப் போலீஸாரே போதும் என்பது எவ்வாறு சாத்தியம்.
அரிசி, ஆடு, மாடு, கோழி, மணல் என அனைத்து வகையான அத்தியாவசியப் பொருள்களும் தமிழகத்தில் இருந்துதான் கேரளத்துக்குச் செல்கிறது. இதை நிறுத்தி கேரளத்துக்கு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.
தமிழகத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் 13 முக்கியச் சாலைகளில் வரும் 21-ம் தேதி பொருளாதார முற்றுகை நடைபெறும்.
முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக இங்குள்ள கேரளத்தவர்கள் மீதும், அவர்களது வணிக நிறுவனங்கள், சொத்துகள் மீதும் தாக்குதல் நடத்துவது என்பது தீர்வல்ல. அதே நேரம் கேரளத்தில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கேரளத்தவர்கள் நிறுத்த வேண்டும். அங்குள்ள தமிழர்களைப் பாதுகாக்கத் தவறினால் நிலைமை விபரீதமாகிவிடும்.
""முல்லைப் பெரியாறு அணையைத் தகர்க்க மாட்டோம், புதிய அணையைக் கட்டும் எண்ணத்தையும் கைவிடுவோம்'' என்று கேரள அரசு உறுதி தரும்வரை கேரளத்தின் மீது நிரந்தரப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்' என்றார் வைகோ.
முன்னதாக முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியது: "அணையை சேதப்படுத்த முயற்சித்துள்ள கேரள அரசைத் தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இங்குள்ள கேரளத்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவது பிரச்னைக்குத் தீர்வாகாது. இதற்குக் கேரள அரசு மீது தமிழகம் பொருளாதாரத் தடை விதிப்பதே நல்ல பலனைத் தரும். கேரளத்துக்குக் கொண்டு செல்லப்படும் பொருள்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அணை உடைந்துவிடும் என்பது போன்ற விஷமச் செய்தி தவறு என்பதை கேரள மக்களிடம் அம்மாநில அரசு முறையாகக் கொண்டு செல்ல வேண்டும்' என்றார் பழ. நெடுமாறன்.

Post a Comment