கூடங்குளத்தில் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்
கூடங்குளத்தில் மொத்தம் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் இணையமைச்சர் வி. நாராயணசாமி கூறினார்.
கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி ஏன் விரைந்து தொடங்க வேண்டும் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் புதுச்சேரி தேசிய நண்பர்கள் பேரவை சார்பில் சனிக்கிழமை நடந்தது. இதில் மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசியது:
கூடங்குளத்தில் இப்போது 2 அணுமின் உலைகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. முதல் அணுமின் உலை இன்னும் ஒரு சில வாரங்களில் செயல்படத் தொடங்கும் என்று ரஷியாவுக்குச் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு 975 மெகாவாட்: 6 மாதத்தில் 2-வது அணுமின் உலை செயல்படத் தொடங்கும். இதிலிருந்து தமிழகத்துக்கு 975 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். புதுச்சேரிக்கு 67 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதை 100 மெகாவாட் மின்சாரமாக தருமாறு கொடுக்குமாறு கேட்டுள்ளேன்.
இதைத் தவிர 3-வது, 4-வது அணுமின் உலை கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் செய்யவும் ரஷியா பயணத்தின் போது அந்த நாட்டுடன் பிரதமர் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கூடங்குளத்தில் இருந்து மொத்தம் 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஒத்துழைப்பு: கண்டிப்பாக மத்திய அரசு கூடங்குளம் மின்சார நிலையத்தைத் திறக்கும். இதற்குத் தமிழக அரசின் ஒத்துழைப்பு இருக்கிறது. இடிந்தகரையில் தடையை மீறி ஊர்வலம், போராட்டம் நடத்திய 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருநெல்வேலி காவல்துறை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.
அதிக பாதுகாப்பு: கூடங்குளம் அணு மின்நிலையம் 5 நிலை பாதுகாப்பு அம்சங்களைப் பெற்றிருக்கிறது. இது போன்ற பாதுகாப்பு அம்சம் வேறு அணுமின் நிலையங்களில் இதுவரை செய்யவில்லை. இந்நிலையில் தன்னார்வ அமைப்பினர் என்று கூறிக் கொள்பவர்கள், அப்பாவி பொதுமக்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தச் சொல்கிறார்கள்.
இவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது. அவர்களுக்கு வந்துள்ள பணத்தை எப்படிச் செலவு செய்கிறார்கள் என்று பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்குப் பணம் கூட கொடுப்பதாகக் கூறுகிறார்கள்.
பாதுகாப்பு அம்சங்கள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஏற்கெனவே விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். ஆனால் இரு நாட்டு ஒப்பந்தம் குறித்த விவரங்களை அவர்கள் கேட்கின்றனர். இருநாட்டு ஒப்பந்தம் தொடர்பாகக் கேள்வி கேட்க நாடாளுமன்றத்துக்குக் கூட அதிகாரம் கிடையாது.
சீனாவுடன் நம் நாடு போட்டி போட்டு வளர வேண்டும். அதற்கு அணுமின் நிலையங்கள் அவசியம். நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு இது புரியும். இப்போது ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அணுமின் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள் என்றார் மத்திய அமைச்சர் நாராயணசாமி.
நான்தான் கூடங்குளம் மந்திரி...
சென்னை விமான நிலையத்துக்கு வந்தாலே அங்குள்ள பத்திரிகையாளர்கள் மடக்கிக் கொண்டு கூடங்குளம் தொடர்பாகத் தான் கேள்வி கேட்கின்றனர். அவர்கள் எனக்கு கூடங்குளம் மந்திரி என்றே பெயர் வைத்து விட்டார்கள்.
மத்திய மந்திரி, பிரதமர் அலுவலக மந்திரி என்ற நிலை போய் இப்போது கூடங்குளம் மந்திரியாக நான் மாறியிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் கூட கூடங்குளம் தொடர்பாக அதிகக் கேள்விகள் வருகின்றன. அதற்கெல்லாம் அடிக்கடி பதில் சொல்லி வருகிறேன் என்றார் நாராயணசாமி.

Post a Comment