லோக்பால் மசோதா அறிமுகம்
பல்வேறு கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே மக்களவையில் லோக்பால் மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவின்படி, பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைப்புகளை நிறுவுவதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது.
எனினும், அண்ணா ஹசாரே குழுவினர் கேட்டுக் கொண்டபடி, சிபிஐ அமைப்பை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவதற்கான பிரிவுகள் இதில் இடம்பெறவில்லை. தனக்கு வரும் புகார்களை சிபிஐக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் மட்டும் லோக்பாலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
பாஜக அல்லாத பிற கட்சிகள் வலியுறுத்தியதையடுத்து, லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் பிரிவு மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
லோக்பால், லோக் ஆயுக்த மசோதா 2011 என்று இந்த மசோதாவுக்குப் பெயரிடப்பட்டிருக்கிறது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த அமைப்புகளுக்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்கும் அரசியல் சாசன திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட லோக்பால் மசோதாவை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
எம்.பி.க்கள் எதிர்ப்பு: பிரதமரையும் விசாரிக்கும் வகையில் லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் அளிப்பதற்கும், மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைப்பை நிறுவுவதைக் கட்டாயமாக்குவதற்கும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
அவசரகதியில் லோக்பால் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது என்று பல்வேறு கட்சியினரும் கேள்வி எழுப்பினர். தனி நபர்களின் மிரட்டல்களுக்கு நாடாளுமன்றம் வீழ்ந்து விடக்கூடாது என்று அவர்கள் எச்சரித்தனர்.
ஆனால், அவசர அவசரமாக லோக்பால் மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது என்கிற குற்றச்சாட்டை அரசுத் தரப்பு மறுத்தது.
"40 ஆண்டுகளாக இந்த மசோதா தேவை என்கிற கோரிக்கை இருந்து வருகிறது. இப்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதா, கூட்டு வரைவுக்குழு, அனைத்துக் கட்சிக் கூட்டம் போன்ற பல பரிசீலனைகளைக் கடந்து வந்திருக்கிறது. யாருடைய உத்தரவுக்கும் நாம் பணியவில்லை. மசோதா எம்.பி.க்களின் முன்னிலையில்தான் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதே தவிர, தெருக்களில் விவாதிக்க விடப்படவில்லை. இப்படியொரு சட்டம் தேவையென்றால் வைத்துக் கொள்வதும், தேவையில்லை என்று நினைத்தால் நிராகரிப்பதும் நாடாளுமன்றத்தின் கைகளில்தான் உள்ளது' என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
இப்போதிருக்கும் வடிவிலேயே மசோதாவை நிறைவேற்றுவதற்கு பாஜக, சிவசேனை, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி அதிமுக, எம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்தக் கட்சிகளுக்கு வெவ்வேறு வகையான ஆட்சேபங்கள் இருந்தன.
பிரதமரை விசாரிக்கும் அதிகாரத்தை "யாருக்கும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லாத' லோக்பால் அமைப்புக்கு வழங்கக் கூடாது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி, எம்ஐஎம், அதிமுக போன்ற கட்சிகள் கூறின.
எல்லா மாநிலங்களிலும் லோக் ஆயுக்த அமைப்பை நிறுவ வேண்டியது கட்டாயம் என்கிற விதிமுறையை பாஜக, அதிமுக, பிஜு ஜனதா தளம், மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் எதிர்த்தன. இப்படிக் கட்டாயப்படுத்துவது நாட்டின் கூட்டாட்சி அமைப்பைச் சிதைக்கும் என்று அக்கட்சிகள் எச்சரித்தன.
லோக்பால் அமைப்பில் சிறுபான்மையினத்தவர் உள்ளிட்டோருக்கு 50 சதவீதத்துக்குக் குறையாத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்கு பாஜகவின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஆட்சேபித்தார்.
இந்த விதிப்படி லோக்பாலின் 9 உறுப்பினர்களில் குறைந்தது 5 பேர் இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட வேண்டும். இது அரசியல் சட்டத்துக்கு முரணானது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பலமுறை உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் நிராகரிப்பதற்கு முன்னதாக மசோதாவைத் திருத்த வேண்டும் என்று சுஷ்மா வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த பிரணாப், "மசோதாவை ஏற்பதா வேண்டாமா என்பதை மட்டும் நாம் முடிவு செய்தால் போதுமானது. நீதித்துறையின் வேலையை நாம் செய்ய வேண்டாம்' என்றார்.
முலாயம் எதிர்ப்பு: மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய சமாஜவாதி தலைவர் முலாயம் சிங், "லோக்பால் மசோதாவுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. லோக்பால் அமைப்பில் இருக்கப்போகும் எல்லோரும் நியாயவான்கள் என்று இப்போதே முடிவு செய்துவிட்டீர்களா? அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படாது, அரசை மிரட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?' என்று கேட்டார்.
லாலு கோரிக்கை: சிலரது போராட்டத்துக்கு பயந்து தவறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் கேட்டுக் கொண்டார். ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிற அக்கறை எல்லோருக்கும்தான் இருக்கிறது. நாம்தான் சட்டத்தை இயற்றுபவர்கள். அதைச் செய்யுங்கள், இதைத் செய்யுங்கள் என்று ஒன்றிரண்டு பேர் நமக்கு உத்தரவிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் அவர். லோக்பால் அமைப்பில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இடஒதுக்கீடு அளிக்கப்படலாம் என்றும் அவர் வாதிட்டார்.
திருத்தத்துக்கு எதிர்ப்பு
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில், லோக்பால் அமைப்பில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பாஜக தவிர்த்த சில கட்சிகள் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தின. இதையடுத்து, மசோதாவில் இதைச் சேர்ப்பதற்கான பிழைதிருத்தத்தை அரசு கடைசி நேரத்தில் கொண்டுவந்தது. இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்ட முறையை பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்த்தனர்.
"பிழைதிருத்தம் என்பது எழுத்துப் பிழைகளைச் சரி செய்வதற்குத்தான். மசோதாவையே திருத்துவதற்கு அல்ல. இப்படிச் செய்வது நாடாளுமன்ற நடைமுறையும் அல்ல. இது மிரட்டும் முயற்சி' என்று பாஜக உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. குருதாஸ் தாஸ்குப்தாவும் சின்ஹாவின் கருத்தையே பிரதிபலித்தார்.
அவை அலுவல் பட்டியலில் இல்லாத ஒரு திருத்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருப்பதாக முலாயம் சிங் குறை கூறினார்.
இதற்குப் பதிலளித்த பிரணாப் முகர்ஜி, "அசல் லோக்பால் மசோதாவில் சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. இப்போது தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் அது எப்படியோ விடுபட்டுப் போயிருக்கிறது. இது ஒரு பிழைதான். யஷ்வந்த் சின்ஹா சொல்வது போல இதுபோன்ற பிழைகளை இந்த வகையில் திருத்தலாம்' என்றார்.
லோக்பால் வரம்பில் பிரதமரைச் சேர்க்கக் கூடாது: லோக்பால் மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டபோது பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை ,"லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரைக் கொண்டுவருவதை எனது கட்சி எதிர்க்கிறது. எனினும் இது லோக்பால் மசோதாவுக்கான எதிர்ப்பு அல்ல' என்றார்.
"நாட்டின் மிக உயர்ந்த அந்தஸ்துள்ள பிரதமர் பதவியை லோக்பால் அமைப்பின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரக்கூடாது என்று எனது தலைவர் முன்பே வலியுறுத்தியிருக்கிறார். அதுபோல, லோக் ஆயுக்த அமைப்புகள் உருவாக்கப்படுவதை மாநில அரசுகளின் விருப்பத்துக்கே விட்டுவிட வேண்டும்' என்று தம்பிதுரை கூறினார்.
Labels:
இந்தியா

Post a Comment