கருப்பு கொடி காட்டும்...... கருப்பு எம்.ஜி. ஆர்.
பிரதமர் மன்மோகன் சிங் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து டிசம்பர் 26-ம் தேதி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.
அணைப் பிரச்னையில் தமிழக - கேரள மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை அனுப்பி அணையைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு சீர்குலைந்துள்ள நிலையிலும் மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் தாற்காலிக பாதுகாப்பு செயல் திட்டத்தை உருவாக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் ஒரு நிபுணர் குழுவை கேரளத்துக்கு சாதகமாக மத்திய அரசு அமைத்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் கடந்த 4 மாதங்களாகப் போராடி வருகின்றனர்.
ஆனால், ரஷியப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், இன்னும் ஓரிரு வாரங்களில் அணுமின் நிலையம் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். இது, தமிழக மக்களின் உயிர்களை பிரதமர் பொருட்படுத்தவில்லை என்பதையே காட்டுகிறது. காவிரி பிரச்னையிலும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கடைப்பிடிக்கிறது.
இந்நிலையில், டிசம்பர் 25, 26 தேதிகளில் பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வருகிறார். அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழக மக்களின் ஒருமித்த எதிர்ப்பு உணர்வைக் காட்டும் வகையிலும் டிசம்பர் 26-ம் தேதி சென்னையில் எனது தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
Labels:
தமிழகம்

Post a Comment