கேரள அரசை கண்டித்து தேனி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கடையடைப்பு
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை வலியுறுத்தி தொழில் வர்த்தகர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
பஸ், ஆட்டோ, தனியார் வாகனங்கள் வழக்கம் போல இயங்கினாலும், பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. நகரின் தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது.
வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான இடங்களில் சாலையோரக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருத்துவமனைகளும் மருந்துக் கடைகளும் திறந்திருந்தன. மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாததால் பல இடங்களில் விவசாய பணிகள் நடைபெறவில்லை.
மதுரை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரள அரசின் போக்கைக் கண்டித்து மதுரை மாவட்டத்திலும் வியாழக்கிழமை அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. விவசாயிகள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
நகரில் எப்போதும் மக்கள் மற்றும் வாகன நெரிசலுடன் காணப்படும் மாசி வீதிகள், ஆவணி வீதிகள் வெறிச்சோடியிருந்தன. குறிப்பிட்ட ஒரு சில மருந்துக் கடைகள் மட்டும் திறந்திருந்தன.
அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் செயல்பட்டன.
தமிழ்நாடு பைப் டிரேடர்ஸ், மதுரை ஜூவல்லர்ஸ் மற்றும் புல்லியன் மெர்ச்செண்ட்ஸ் அசோசியேஷன் உள்ளிட்ட சங்கத்தினரும் கடையடைப்பில் பங்கேற்றனர். திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
பெரியாறு பாசனத் திட்டக் குழுத் தலைவர் சீமான் என்ற மீனாட்சிசுந்தரம், முருகன் ஆகியோர் தலைமையில் பெரியாறு பாசன விவசாயிகள் பேரணி நடைபெற்றது. விவசாய சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்தனர். மதுரை புறநகர்ப் பகுதியில் கடையடைப்பு முழுமையாக நடைபெற்றது.
திண்டுக்கல்: திண்டுக்கல்லிலும் முழு கடையடைப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிக் கடைகள், உணவு விடுதிகள், திரையரங்குகள், சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் உள்பட எந்த நிறுவனமும் இயங்கவில்லை. திண்டுக்கல் - திருச்சி சாலை கல்லறைத் தோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்தில் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களிலும் கடையடைப்பு நடந்தது.
சிவகங்கை: சிவகங்கை நகர் முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. காரைக்குடி, தேவகோட்டை, திருப்புவனம், சாலைகிராமம், மானாமதுரை, இளையான்குடி, இடையமேலூர் உள்ளிட்ட ஊர்களிலும் அனைத்துக் கடைகளையும் அடைத்து மக்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ராமநாதபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த வேண்டும், அணையை மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை மூலம் பாதுகாக்க வேண்டும். கூடங்குளத்தில் விரைவாக மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வர்த்தகர் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. ராமநாதபுரம் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நகரில் ஆட்டோ தொழிலாளர்களின் உண்ணாவிரதம் மற்றும் வேலைநிறுத்தம் காரணமாக வேன்கள், ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை.
Labels:
தமிழகம்

Post a Comment