இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும், கேரளத்தில் தமிழர்கள் மீது நடக்கும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க வேண்டும், பெரியாறு அணைப் பாதுகாப்புக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த வேண்டும் எனக் கோரி கம்பத்தில் சனிக்கிழமையும் பெண்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.
கம்பம் பாரதியார் நகர், காளவாசல் தெரு, வரதராஜன் தெருக்களை சேர்ந்த 3 ஆயிரம் பெண்கள் சனிக்கிழமை திரண்டனர். அமைதிப் பேரணி கோட்டை மைதானத்தில் துவங்கி, காந்தி சிலை, பத்திரப் பதிவு அலுவலகம், அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம், உழவர் சந்தை, கம்பம்மெட்டு சாலை, தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று, துவங்கிய இடத்தில் முடிவடைந்தது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு, அரசியல் கட்சியினர், போராட்டக் குழு நடவடிக்கைகளைக் கண்டித்து தேனி மாவட்டத்தில் டிசம்பர் 5 முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இரு மாநில எல்லையிலும் பதற்றம் நிலவி வருவதால், கடந்த 12 நாள்களாக தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு வழியாக கேரளத்துக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி. முகவர்கள் பேரணி: கேரள அரசை கண்டித்து எல்.ஐ.சி. முகவர்கள் சனிக்கிழமை காலை கம்பம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
Post a Comment