மக்களின் அச்சத்தை போக்குவது அவசியம்
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்கும் முன்பாக, உள்ளூர் மக்களின் அச்சத்தைப் போக்குவது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமருக்கு சனிக்கிழமை இரவு அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:
"கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்கும்' என ரஷிய பிரதமருடனான கூட்டுப் பேட்டியில் தாங்கள் (பிரதமர் மன்மோகன் சிங்) தெரிவித்ததாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளைக் கண்டு வியப்புற்றேன்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பொறுத்தவரை, அங்குள்ள மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அது தொடர்பான கோரிக்கை மனுவை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழகக் குழுவினர் தங்களைச் சந்தித்து அளித்தனர்.
அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து உள்ளூர் மக்களிடம் விளக்குவதற்காக தனியாக நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மாநில அரசும் உள்ளூர் அதிகாரிகளைக் கொண்டு அங்குள்ள மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
அணுமின் நிலையத்தைப் பொறுத்தவரை, உள்ளூர் மக்களின் திருப்தியும், ஒப்புதலுமே மிகவும் முக்கியமானதாக தமிழக அரசு கருதுகிறது. எனவே, அணுமின் நிலையம் தொடர்பாக ஏதேனும் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, உள்ளூர் மக்களின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

Post a Comment